சனி, 28 ஜனவரி, 2017

பண்டிகை பொங்கல்!

பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. அவை: போகி, பொங்கல், மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல்.
போகிப் பண்டிகை:

பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற் கும் முகமாக போகி, முதல் நாளன்று (மார்கழி மாதக் கடைசி நாளன்று) கொண்டாடப்படுகிறது.
                        
உதவாத பழைய பொருட்களை எல்லாம் தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். தீய குணங்களை எல்லாம், தூய்மை யான அறிவு என்னும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் உட்பொருள். தீயவற்றைப் போக்கு வதால், இந்த பண்டிகை, ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவி வழங்கப்படுகிறது.
                        
போகிப் பண்டிகை வட நாட்டிலும் கொண்டாடப்படு கிறது. அங்கே இந்திரனைப் போற் றும் முகமாக இதை ‘இந்திர விழா’ என்று கொண்டாடுகிறார்கள். இந்திரனுக்குப் ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அதனால் அங்கே இந்திர விழா, போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. ‘லோரி கொளுத்துவது’ என்ற பெயரில் (நம் தமிழ்நாட்டைப் போலவே) கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டுவதும் உண்டு.
                        
பொங்கல்:

உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்து வது பொங்கல் பண்டிகை. தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் அநேகமாக முடிந்துவிடும். அறுவடை ஆன பொருட்களை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கலின் அடிப் படைக் கோட்பாடு.
சூரிய பூஜை;

காலையில் எழுந்த தும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண் டும். எண்ணெய் தேய்த்துக் குளிக் கக் கூடாது.
                        
புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.
பொங்கல் பொங்கி வழியும் போது, ‘‘பொங்கலோ பொங்கல்!’’ என்று குரலெடுத்துக் கூவுவார்கள். சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும்.
                         
சுருக்கமாக கணபதி பூஜையை முடித்துக் கொண்டு அதன் பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து வைத்து (கோலம் போட்டும்) பூஜை செய்ய வேண்டும்.
                        
ஒரு தலைவாழை இலை யில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் உண்டு. அப் போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள்.
                        
பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது!
கணுப் பண்டிகை:

பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி இது. பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ் சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.
                        
கணுப்பிடி வைக்கும் முறை:

இரண்டு மஞ்சள் இலைகள் (அல் லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.
கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
                        
ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.
                        
வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு (துண்டு களாக), மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக் கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயா ராக வைக்கப்பட்டிருக்கும்.
                        
கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பூஜை:

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல் லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று சொல்வார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.
                        
கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை போன்றவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
                        
கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும்.
                        
கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல் லாமல் நன்றாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்வார்கள். இதன் உண்மையை, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என் னும் பழமொழி விளக்கும்.
                        
கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம்.
                        
பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். உள்ளூரிலேயே இருப்பவர்கள், தாய் வீட்டுக்குப் போய் மதியம் உணவு உண்பது வழக்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக