சனி, 28 ஜனவரி, 2017

வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச 
ஸுகதாய பிரஸன்னாய ஸூப்ரீதாய மஹாத்மனே!

பொருள்:
எம் பிறப்புக்கு காரணமான முன்னோர்களே!
தெய்வீக சக்தி பெற்றவர்களே!
உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உண்டாகட்டும்!
நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகின்றேன்!   
 


ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற  அமாவாசையில்,  இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு 

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.
 
கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

தை அமாவாசை நாளில், அந்தப் புண்ணிய தினத்தில், நம் முன்னோருக்குச் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்வோம்.

நம் குலம் தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன் வாழ்வோம்!

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக