வியாழன், 19 ஜனவரி, 2017

நட்சத்திர வழிபாடு!

அஸ்வினிஅஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அச்வினீ தேவர்கள் எனும் இரட்டையர்கள். இவ்விருவரும் ஒரு முகம், வெண்மைநிற தேகம் கொண்டு, அமுதகலசம் தாங்கிய இரு கைகளுடன், குதிரை வாகனத்தின்மீது இருப்பவர்களாக எண்ணித் துதிக்கப்படவேண்டும். சந்தனத்துடன் கருநெய்தல் எனும் நீலோத்பல மலரால் பூஜித்து, குங்குமப்பூவால் தூபமிட்டு, பசும்பாலும் லட்டுகளும் நிவேதித்து, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம் அளித்துச் செய்வது அஸ்வினி நட்சத்திரத்தின் சாந்திமுறையாகும். இவ்விதம் ஆவாகனம் முதலாக அன்னபலிவரை செய்வித்து, தானம், விப்ரபோஜனம் செய்விப்பதே சாந்தி வேள்வியின் விதிமுறை. இவ்விதம் மற்ற நட்சத்திரங்களுக்குரிய பொருட்களால், உரிய மந்திரங்களால் செய்யப்படுவதே நட்சத்திர சாந்தியாகும். அவற்றைப்பற்றி சுருங்கக் காண்போம்.

பரணிபரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மர். இவரை ஒருமுகம், இருகை, நீலநிற தேகம், பயங்கரமான உருவம் உடையவராக, இரு கைகளில் பாசக்கயிறையும் தர்மதண்டத்தையும் ஏந்தியவராக, எருமை வாகனத்தின்மீது அமர்ந்துள்ளவராக, பரணி நட்சத்திர தேவதையாக தியானித்து பூஜித்திடவேண்டும். இவருக்கு, காரகில், சந்தனத்துடன் கருநீலநிற வாசமுள்ள மலர்களும், கருங்குங்குலிய தூபமும், சர்க்கரைப்பொங்கல், வெல்ல அப்பம் நிவேதனமும், நெய், தேன்கலந்த எள் ஹோமத்திரவியமும், த்ரயம்பக மந்திரமும், எள் அன்னத்தால் பலி அளித்தலும் என சாந்தி செய்யவேண்டும்.

கிருத்திகைகிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதையான ஸ்ரீ அக்னிதேவரை, இருமுகமும், நாற்கரமும், நான்கு கொம்பும் உடையவராய் ஸ்ருக், ஸ்வரும், அபயம், வரதம் ஆகியவற்றை நாற்கரங்களில் ஏந்தியவராக- ஆட்டு வாகனத்தின்மீது அமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சிவப்பு சந்தனத்துடன் மல்லிகைப்பூவும், நெய்யின் தூபமும், நெய், எள் ஹோமத்திரவியமும், உளுந்துசாதம் நைவேத்யமும், பாயச அன்ன உளுந்து சாத பலியும் என சாந்தி செய்யவேண்டும்.

ரோகிணிரோகிணி நட்சத்திர தேவதையான பிரஜாபதியை, நான்முகமும், நாற்கரமும், வெண்ணிறமும் உள்ளவராய்- அட்சமாலை, கமண்டலம், அபயம், வரதம் உள்ளவராய் தியானித்து பூஜிக்கவேண்டும். தாமரைமலர், சரளமரத்தூளின் தூபமும், நெய், தானிய வகை ஹோமத்திரவியமும், பாலன்னம், சுத்தன்னம் நிவேதனமும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் அன்னத்தால் பலியும் செய்தல்வேண்டும்.

மிருகசீரிடம்மிருகசீரிட நட்சத்திரத்தின் தேவதையான சோமதேவர் (சந்திரன்), தனது இரு கைகளில் வரதமும் தண்டமும் ஏந்தியவராய், வெண்மை நிறத்தவராய், பத்து குதிரைகளைப் பூட்டிய தேரின் மீதுள்ளவராய் தியானித்து பூஜிக்கத்தக்கவர். பூஜைப் பொருட்கள்- குமுதம் (அல்லி), உத்பலம் (கருநெய்தல்) மலர்கள்; தசாங்க தூபம்; பாயசம், அதிரசம் நைவேத்யம்; பயறு, எள், பஞ்ச கவ்யம், தேன் ஹோமத் திரவியங்கள்; பயறு, எள்கலந்த அன்னத்தால் பலிதானம்.

திருவாதிரைதிருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ ருத்ரன் ஆவார். இவரை ஒருமுகமும் மூன்று கண்களும், வெண்ணிற மேனியும் கொண்டவராய்- வெண்ணிற மலர்மாலை சூடியவராய்- தனது நான்கு கைகளிலும் சூலம், கத்தி, அபயம், வரதம் ஏந்தியுள்ளவராய், வெள்ளைநிற எருதின்மீது அமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். நறுமணமுள்ள செந்நிறமலர்களுடன், பொன்னிற ஊமத்தம்பூ, மஞ்சள்நிற சரக்கொன்றை மலர், புலிநகக் கொன்றை, வில்வமலர் ஆகிய சிறப்பு மலர்களுடன், அகரு தூபம்; நெய், வெல்லம், பயற்றுப் பாயசம், தேன் நைவேத்யம்; நம சம்பவே எனும் வேதமந்திர ஜபம்; தேன், நெய் ஹோமத்திரவியம்; சர்க்கரைபொங்கல், பாயசான்னம் பலிதானம்.

புனர்பூசம்புனர்பூச நட்சத்திர தேவதை, தேவமாதாவாகிய அதிதிதேவி ஆவாள். தேவியை மஞ்சள் நிறத்தவளாகவும்; ஸ்ருக், ஸ்வரும் எனும் ஹோம சாதனத்தையும், தர்ப்பை அல்லது அட்சமாலை, கமண்டலத்தையும் தன் இருகைகளில் ஏந்தியவளாகவும்; நன்மை அளிப்பவளுமாக தியானித்து பூஜித்தல் முறை. மல்லிகைமலர்; மலயஜத்ரவ்ய தூபம்; மஞ்சள், குங்குமப்பூ கலந்த சந்தனச் சாந்து, மிளகு சீரக நெய்சாதம் நிவேதனம்; அதிதிர் த்யௌர் என்ற வேதமந்திரத்தால் ஜபம்; ஹோமம்; நெய் கலந்த அரிசி ஹோமத்திரவியம்; மஞ்சள், சந்தனத்துடன் கூடிய அன்னத்தால் பலிதானம்.

பூசம்பூச நட்சத்திர தேவதை வியாழ குருபகவானாகிய பிருஹஸ்பதி ஆவார். இவரை மனித உருவத்தில், சர்வாபரணங்களையும் அணிந்துள்ளவராய்- யோகதண்டம், கமண்டலம் அல்லது அபயம், வரத கைமுத்திரையுடன் விளங்குபவராய்- தேவர்களின் மந்திரியாகவும், குருவாகவும் விளங்குபவராக எண்ணி பூஜித்திடவேண்டும். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ கலந்த சந்தனம், மல்லிகைப்பூ, வெண்தாமரை மலர்கள்; வெண்குங்குலியத்தால் தூபம்; தாமரைநூல் தீபம்; தேன், சர்க்கரை கலந்த பொடித்த அரிசிக்கஞ்சி; சமித்து; நெய், அரிசி பாயசம் ஹோமத்திரயவம்; சந்தனம், மலர்களுடன் நெய்சாத பலிதானம்.


ஆயில்யம்ஆயில்ய நட்சத்திர தேவதை பாம்பரசரான நாகதேவர் ஆவார். இவரை அகன்ற படமெடுத்த பாம்புத்தலையுடன் கூடியவரும், சிவந்தமேனியும் மூன்று கண் கொண்டவரும், இரு கைகளில் கத்தி, கேடயப் பலகை எந்தியவரும், மஞ்சள்நிற ஆடை உடுத்தியவருமாக தியானித்து, பாம்புகளால் சூழ்ந்தவராகப் பூஜித்திடவேண்டும். காரகில் சந்தனம், நீலநிற அதஸீபுஷ்பம், தாழம்பூ,
அகத்தியப்பூ இவற்றுடன், நெய், குங்குலியம் கலந்த தூபம்; நெய்யரிசிக்கஞ்சி, வெல்லநெய் அப்பம் நைவேத்யம்; மதுவாதா எனும் மந்திரஜபம்; நெய், தயிர் கலந்த எள் அன்னத்தால் ஹோமம்; நாகதேவருக்கு, நாகங்களுக்கு நெய், வெல்லம், தயிர் கலந்த சாதத்தால் பலிதானம்.

மகம்மக நட்சத்திர தேவதை பித்ருக்கள் ஆவர். இவர்களை ஒருமுகமும், இரு கரமும், அன்ன பிண்டத்தை (இறந்தோர்க்கு அளிக்கப்பட்ட உணவு உருண்டை) வலது கையில் வைத்திருப்பவர்களாகவும், மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ள மனித உடல் கொண்டவர்களாகவும், புகை போன்ற கருநிறத்தவர்களாகவும் மிகவும் புனிதர்களாய் விளங்குபவர்களாகவும், நமக்கு நன்மை செய்பவர்களாகவும் எண்ணி பூஜித்திட வேண்டும். சந்தனம், செண்பகப்பூ; குங்குலியப் பொடித் தூபம்; நெய்விளக்கு; நெய், வெல்ல அப்பம் நைவேத்யம்; பிதும்நஸ்தோஷம் எனும் மந்திரஜபம்; நெய், தேன் கலந்த எள்; பச்சரிசி, ஆலமரத்துளிர், ஹோமத்திரவியங்கள்; கருப்பு எள் கலந்த அன்னத்தால் பலிதானம்.

பூரம்
பூர நட்சத்திர தேவதையான அர்யமா என்பவரை. ஒருமுகமும், இருகையும், புகைபோன்ற கருநிற தேகமும் கொண்டவராய் சக்தி ஆயுதத்தை கையில் ஏந்தி தேரின்மீது இருப்பவராக எண்ணிப் பூஜித்தல் வேண்டும். சந்தனம், மாலதி மல்லிகைப்பூ, பொரசம்பூ; வில்வக்காய் மரத்தூள் தூபம்; நெய்சாதம், அதிரசம், லட்டு, நிவேதனம்; அர்யமணம்னு தேவம் எனும் மந்திரத்தால் ஜபஹோமம்; நெய்கலந்த தினையரசி ஹோமத்திரவியம்; சந்தன மலர்களுடன் அர்யமா எனும் சூரியனுக்கு, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம்.


உத்திரம்உத்திர நட்சத்திர தேவதை பகதேவர். இருகைகளில் சங்கு, சக்ரம் ஏந்தி, சிறந்த தேர்மீதிருப்பவராகவும். அடியவர்களின் விருப்பப் பயனைத் தருபவராகவும் தியானித்து வழிபடத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய மகிழம்பூ, வெள்ளை நிற அலரிப்பூவால் பூஜித்தும்; வில்வப்பழம், குங்குலியம், இவற்றில் நெய்கலந்து தூபமிட்டும்; எள்சாதம் நிவேதனம் செய்தும்; ஆஸத்யே நேதி மந்திரத்தை ஜபித்தும்; எள், கடுகு, நெல் வகைகளை ஹோமத்திரவியமாய் ஆஹுதி செய்தும், சம்பா அரிசி அன்னத்தை பலியாக அளித்தும் சாந்தி செய்யப்படவேண்டும்.

அஸ்தம்அஸ்த நட்சத்திர தேவதையாகிய சவிதா என்பவரை (சூரியனை), ஏழு குதிரைகளையுடைய தேரில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக- சாயாதேவியின் கணவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சந்தனத்துடன், தாமரை, சிவப்பு நிற அலரிப்பூவால் அர்ச்சித்து; சந்தனம், குங்குலியத்தால் தூபமிட்டு; நெய் பாயசம், வெல்ல அப்பம் நிவேதித்து; உதுத்யம் ஜாதவேதஸம் எனும் மந்திரத்தை ஜபித்து; தயிர், நெய், அரிசிகளால் ஹோமத்தில் ஆஹுதிகளை அளித்து; சந்தனப்பூ, இலுப்பைப்பூ, அறுகு, எள், நெய், வெல்லத்துடன் கூடிய (கேசரி) அன்னபலி அளித்து சாந்தி செய்யவேண்டும்.

சித்திரைசித்திரை நட்சத்திர தேவதையான த்வஷ்டா என்பவரை, கிரீடம்சூடி தேரில் அமர்ந்தவராக- சங்கு, சக்கரம் ஏந்திய இருகைகளுடன் கூடியவராக எண்ணி பூஜிக்கவும். இவரை சந்தனத்துடன் கூடிய பலநிற மலர்களாலும், செம்பருத்திப் பூவாலும், வில்வத்தாலும் பூஜித்து; தசாங்கப்பொடியால் தூபமிட்டு; வண்ணக்கலவை சாதம், மோதகம் நிவேதித்து; சித்ரம் தேவானாம் என்ற மந்திர ஜபத்துடன், நீர்கலந்த நெய்கலவை சாதத்தால் ஆஹுதி அளித்து, நெய்கலந்த பயறு அன்னத்தை பலிதானம் செய்யவேண்டும்.

சுவாதிஇந்த நட்சத்திர தேவதை வாயு தேவர். இவரை மான்மீது அமர்ந்தவரும், புகை போன்ற நிறத்தவரும், இரு கைகளில் கத்தி, கேடயம் ஏந்தியவருமாக எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவரை காரகில் சந்தனத்துடன், மரிக்கொழுந்தால் பூஜித்து, வெள்ளை அகில் மரத்தூளால் தூபமளித்து, தயிரன்னத்தை நிவேதித்து, "ஸனப்பிதா' எனும் மந்திரத்தை ஜெபித்து, நெய் கலந்த, யவை தானியம் மற்றும் பாயசன்னத்தால் ஹோமத்தில் ஆஹுதியும், சந்தமன மலருடன் கூடிய பாயசன்னத்தால் பலியும் அளித்து, சுவாதி நட்சத்திர சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

விசாகம் இந்த நட்சத்திர தேவதைகளான இந்திரன், அக்னி இருவரும் மங்களத்தை அளிப்பவர்களாய், அபய, வரத முத்திரைகளுடன் கூடிய இருகரங்களை உடையவர் களாய் தியானித்துப் பூஜிக்கத் தக்கவர்கள். இவ்விருவருக்கும் சந்தனத்துடன் கூடிய தாமரைப்பூ, பந்தூக மலர்களால் பூஜையும், தேவதாரு மரத்தூளால் தூபமும், நெய் கலந்த பாயசத்தால் நிவேதனத்தையும் செய்து, "சம்ந இந்த்ராக்னி' எனும் மந்திரத்தால் ஜெபமும், நெய் பாலன்ன ஆஹுதியும், கந்தபுஷ்பத்துடன் பால்சாத பலியும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.

அனுஷம்அனூராதா என்னும் அனுஷ நட்சத்திர தேவதையான மித்ரதேவரை, செந்நிறத் தவராய், இரு கைகளில் திரிசூலம், அங்குசம் ஏந்தியவராய், பத்மாசனத்தில் அமர்ந்துள்ளவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை வெண்தாமரை மலரால் அர்ச்சித்து, சந்தனத்தால் தூபமிட்டு, நெய்பாயசத்தை நிவேதித்து, "மித்ரஸ்ய சர்ஷணீத்ருத' எனும் மந்திரத்தால் ஜெபம், ஹோமம் செய்து, சூர்ணகந்தத்தால் சாந்தி செய்யப்பட வேண்டும்.

கேட்டைஜ்யேஷ்டா எனப்படும் கேட்டை நட்சத்திர தேவதையான இந்திரனை, ஐராவதமெனும் யானைமீது அமர்ந்தவரும், வஜ்ரம், பாசம், வரதம், அபயம் கொண்ட நாற்கரத்தவருமாக எண்ணிப் பூஜித்திடவும். இவரை சந்தனத் துடன் தாமரை மற்றும் படோலீ (பாதிரி) பூக்களால் பூஜித்து, பச்சைக் கற்பூரத்துடன் அகில் மரத்தூளால் தூபமிட்டு, சித்ரான்னம் நிவேதித்து "இந்த்ரம் வோ' எனும் மந்திரத்தால் ஜெபமும் ஹோமமும் செய்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர் இவற்றின் ஆஹுதியையும், சந்தன மலர்களுடன் கூடிய தயிரன்னத்தால் பலியையும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

மூலம்
மூல நட்சத்திர தேவதையான நிரு ருதிதேவரை, உக்ரமான வாயுடைய ஒரு முகத்த வரும், கருநீல நிறத்தவரும், ராட்சச குலத்தின் தலைவரும், மேல்நோக்கிய பரட்டை முடியை உடையவரும், சிவந்து உக்ரமான வட்ட விழிகளைக் கொண்டவருமாக எண்ணிப் பூஜிக்கவும். இவரை காரகில் (மற்றும் ஆட்டுக்கொம்புப் பொடி) தூபமும், காரகில் சந்தனத்துடன் கூடிய நீலநிற எருக்கம்பூ, சாமந்திப்பூ, சிவப்புநிற அசோகப்பூ, கருநெய்தல் பூ இவற்றால் பூஜித்து, உளுந்து சாதம், (மீன், மாமிசம், கள் முதலியவற்றை) நிவேதித்து "மோஷுண: பராபரா' என்ற மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, நிருருதிக்கு பலி தந்து சாந்தி செய்ய வேண்டும்.


பூராடம்பூர்வாஷாடா எனப்படும் பூராட நட்சத்திர தேவதையாகிய ஆபதேவர்களை (ஆப: நீர்) கடலின்மீதில் அலைவடிவாய் இருந்து அனைத்து ஜீவர்களைக் காப்பவர்களாயும், தினமும் மங்களம் அளிப்போராகவும் எண்ணிப் பூஜிக்கவும். இவர்களை கல்ஹாரமெனும் கருநெய்தல்பூவால் அர்ச்சித்து, மனோசிலை தாதுப்பொடியால் தூபமிட்டு, தயிர்கலந்த அரிசிக் கஞ்சியை நிவேதித்து, "ஆபோஹிஷ்டா' எனும் மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, செந்நெல் தானியத் தால் ஆஹுதியும், சீரகச்சாதம், பாயசன்னம் பலி தந்தும் சாந்தி செய்யவேண்டும்.

உத்திராடம்உத்தராஷாடா எனப்படும் உத்திர நட்சத்திரத்தின் தேவதை விச்வே தேவர்கள். அழகு, வளம், புகழ், அறிவு அளித்திடும் விச்வே தேவர்களை எல்லா பாவங்களையும் போக்குவதற்காக எண்ணி வணங்குவோம். இவர்களை ஐந்து மலர்களாலும், அரக்குடன் கூடிய அகருதூபத்தாலும், ஐவகை பட்சண நிவேதனத்துடன் பூஜித்து, "விச்வே தேவாஸ ஆகதே' எனும் மந்திர ஜெபமும், நெய்யுடன் கூடிய சல்ல துண்டுகளால் திரவியாஹுதியும், பாயசன்னத்தால் பலிதானமும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

அபிஜித்அபிஜித் நட்சத்திரத்தின் தேவதை, திரு மாலின் நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்டு அமர்ந்து வேதமோதும் பிரம்மதேவர். இவரை நான்கு முகமும் நான்கு கரமும் கொண்டு பத்மாசனத்தில் இருப்பவராக- தீர்த்த கண்டிகை, அட்சமாலை, வேதப் புத்தகம், தாமரைப்பூ இவற்றைத் தனது நாற்கரங்களில் ஏந்தியவராக தியானித்து முறைப்படி பூஜித்திட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் சாந்தியை தனியாகச் செய்யாமல், அடுத்ததான திருமாலின் திருவோண நட்சத் திரத்துடன் சேர்த்துப்பூஜித்து, ஹோமதானாதிகளுடன் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

திருவோணம்திருவோணம் எனப்படுகிற ச்ரோணா நட்சத்திரத்தின் தேவதையான விஷ்ணுவானவர், சாந்தமான தோற்றமும், தாமரைப்பூ இதழ் போன்ற அழகிய இருபெரும் கண்களும், சங்கு, சக்ரம், அபயம், வரதம் ஏந்திய நான்கு கைகளும், நீலநிறத் திருமேனியும் கொண்டு, கருட வாகனத்தில் இருப்பவராக தியானித் துப் பூஜிக்கத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய தாமரை மற்றும் ஜாதீபுஷ்பத்தாலும், தசாங்க திரவியப்பொடி தூபத்தாலும், நெய், பால், சர்க்கரைக்கஞ்சி அல்லது நெய் பாயசன்ன நிவேதனத்துடன் "அதோ தேவா' எனும் மந்திரத்தினால் ஜெபமும், சிவப்பு அரிசியால் திரவியாஹுதியும், முடிவில் சந்தமன மலருடன் விஷ்ணுவின் பொருட்டு அன்னபலி தானமும் செய்து சாந்தி செய்வது முறையாம்.

அவிட்டம்ச்ரவிஷ்டா எனும் அவிட்ட நட்சத்திர தேவதைகளான அஷ்டவஸுக்கள் எனும் எண்மரையும், மகுடம் தரித்து தேரின்மீது இருப்பவர்களாகவும், சங்கு, சக்கர உருவில் கைரேகை உள்ளவர்களாயும் எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவர்கள் எண்மரையும் நூறு இதழ் உள்ள தாமரைப்பூவால் பூஜையும், குங்குலியத்தால் தூபமும், பாயசம், நெய்போளி பலகாரம் இவற்றால் நிவேதனமும், அரசு, வில்வம், அத்தி ஆகிய சமித்துக் களால் ஆஹுதியும், "த்ராயந்தாமிஹ தேவா' எனும் மந்திரஜெப ஹோமத்துடன் நெய் கலந்த பயிறு சாத பலிதானமும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.

சதயம்
சதபிஷக் எனப்படும் சதய நட்சத்திர தேவதையான வருணதேவரை, தன் இரு கைகளில் அமுதகலசம், பாசம் இவற்றை ஏந்தியவராய், வெண்ணிறத்தவராய், தேவர்களால் வணங்கப்படுவராக எண்ணிப் பூஜித்தல் முறை. இவரை தாமரை முதலிய நீர்ப்பூவகையால் அர்ச்சித்து, தசாங்கத்தால் தூபமும், நெய்பாயசம் மற்றும் அரிசிக் கஞ்சி நிவேதனமும், "இமம் மே வருண' எனும் மந்திர ஜெபத்துடன், நீரில் தோன்றிக் கிடைக்கும் பொருள்களால் ஆஹுதியும் செய்து, பாயசன்னத்தால் பலியும் தந்து சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

பூரட்டாதிபூர்வப்ரோஷ்டபதா எனப்படும் பூரட்டாதி நட்சத்திர தேவதை அஜர். (மஹாப் பிரளய காலத்து பைரவர்). இவரை ஒரு கால் மட்டும் உடையவராகவும், தோன்றாத் தன்மையுடன் நித்யமாய் விளங்குபவரும், அனைத்து தேவர்களாலும் வணங்கப் படுபவரும், சம்ஹார காலத்திய ருத்ரமூர்த்தி யுமாக சிந்தித்துப் பூஜித்திட வேண்டும். இவரை எருக்கம்பூ, பெரம்புப் பூவால் அர்ச்சித்து, மூலிகைப் பொருளால் தூபமிட்டு, நெய், தேன் கலந்த தயிரன்னம் நிவேதித்து, நெய் தோய்த்த பூசணித் துண்டால் ஆஹுதி செய்து, நெய் சாதத்தால் பலிதானம் செய்து சாந்தி செய்யவேண்டும்.


உத்திரட்டாதிஉத்தராபாத்ரா எனப்படும் உத்திரட் டாதி நட்சத்திர தேவதையான அஹிர்புத்னியர் என்பவரை மகுடமணிந்தவராய், சங்கு, சக்கரம் ஏந்தியவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை கரஞ்சி (விஷ்ணுகிராந்தி) பத்ரத்தால் அர்ச்சித்து, நெய் தூபமிட்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, நெய்யுடன் உளுந்து, பயறு தானியங்களால் ஆஹுதி செய்து, நெய்வெல்ல சாதம் பலிதானம் செய்து சாந்தி செய்திடவேண்டும்.

ரேவதிரேவதி நட்சத்திரத்தின் தேவதை பூஷா என்பவர். இவர் ஒரு முகம், இரு கால்களுடன், இரு கைகளில் வரதமும், அபயமும் கொண்டு ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவராக தியானித்துப் பூஜிக்கத்தக்கவர். இவரை மந்தார மலரால் அர்ச்சித்து, செஞ்சந்தனத்துடன்  கூடிய குங்குலிய தூபமிட்டு, எள், அரிசி, வெல்லப்பொடியை நிவேதனம் செய்து, நெய்யுடன் கூடிய வாழைப்பழம் அல்லது மாம்பழம் இவற்றால் ஆஹுதியைச் செய்து, பாயசன்னத்தால் பலிதந்து சாந்தி செய்திட வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக