o நீருண்ட கார்காலத்து மேகவரிசைபோல, தியானிக்கும் ஜனங்களது தாபத்தை அகற்றிக் குளிரச் செய்பவளும், கடம்பவனத்தில் உலாவி நிற்பவளும், மலையை நிகர்த்த நிதம்பங்களும் தாமரையை நிகர்த்த கண்களும் அமையப்பெற்றவளும், தேவ மாதர்களால் பணி செய்யப்பட்டவளும், முக்கண்ணது குடும்பத்தை நடத்துபவளும் முப்புரமெரித்த சிவபெருமானது கோபத்தைத் தணித்த சுந்தரியுமான த்ரிபுரசுந்தரிதேவியைச் சரணமடைகின்றேன்.
o கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்கமயமான யாழை ஏந்தியவளும், விலையுயர்ந்த ரத்தின மாலை அணிந்தவளும், மாதக திரவியத்தை வாயில் கொண்டு விளங்குகிறவளும், தயைபுரிந்து ஐச்வர்யமளிப்பவளும், மாசற்ற கடாக்ஷத்தால் எங்கும் சஞ்சரிப்பவளும், முக்கண்ணனின் மனைவியுமான த்ரிபுரசுந்தரிதேவியை யான் அடைக்கலமடைகின்றேன்.
o கதம்ப வனத்தை வீடாகக் கொண்டவளும், மலையை ஒத்த கொங்கைகளின் பாரத்தில் மாலை அணிந்தவளும், கருணைக் கடலின் கரையாகி விளங்குபவளும், சிவந்த கன்னங்களால் பிரகாசிப்பவளும், மெய்மறந்து இனியமொழி, பாட்டுகளால் ஆனந்திப்பவளும், மேகம் போன்றவளுமான ஒரு லீலா விபூதியால் நாம் கவசமணிந்தவர்கள் போலக் காப்பாற்றப்பட்டு வருகிறோம்.
o பூமியில் கடம்பக் காட்டின் நடுவில் வசிப்பவளும், ஆகாயத்தில் சூரிய மண்டலத்தில் நடுவில் யோகிகளால் தியானிக்கப்படுபவளும், மூலாதாரம் முதலிய ஆறு தாமரை போன்ற சக்கரங்களில் சரீரத்தில் தோன்றுபவளும், உண்மையில் சுத்த சத்வ ப்ரதானமாய் மின்னல் கொடி போல் நிர்மலமாக இருப்பவளும், ரஜோகுனத்தின் சேர்க்கையால் செம்பருத்தியின் சிவந்த நிறம் பெற்றவளும், சந்திரகலையைச் சேகரமாக அணிந்து உலகங்களைக் களிக்கச் செய்கின்றவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை வணங்குகின்றேன்.
o சிரசில் சுருண்ட குழல்களால் எழில் பெற்றிருப்பவளும், மார்பில் அணைக்கப்பட்ட வீணையால் விளங்குபவளும், மிருதுவான தாமரையில் அமர்ந்துகொண்டு மிருதுவான இருதய கமலம் படைத்தவர்களிடம் அன்பு காட்டுகிறவளும், மதத்தால் சிவந்த கண்களின் பார்வையால் மதனனை அழித்த ஈசனையும் நன்கு மயக்குகிறவளும், இனிமையாகப் பேசும் இயற்கையுள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான த்ரிபுரசுந்தரிதேவியை பணிகின்றேன்.
o அரவிந்த பாணமேந்தி, சிவப்புப்புள்ளி நிரம்பிய கரிய ஆடைதரித்து மதுபாத்திரத்தைக் கையில் கொண்டு, மதுவை அருந்தி, தானும் சுழன்று, உலகங்களையும் சுழற்றுகிறவளும், நெருக்கமான கொங்கை பாரங்களால் நிமிர்ந்தவளும், தொங்கும் வேணீபந்தமுடையவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை சரணமடைகின்றேன்.
o குங்குமப்பூ கலந்த சந்தனம் பூசிக்கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் கஸ்தூரிப் பொட்டு தரித்து, சதுர்புஜங்களிலும் கணை, வில், கயிறு, அங்குசம் என்ற நான்கு ஆயுதங்களைத் தாங்கி, மாலை, நகை, ஆடைகளில் சிவந்த நிறமுள்ளவளாய், மந்தஹாசத்துடன் அபாங்கத்தால் சற்று நோக்கி, ஜனங்களனைவரையும் மாயா வலையில் சிக்கச் செய்யும் தாயை ஜபகாலத்தில் நினைக்க வேண்டும்.
o கூந்தலைச் சேர்த்து வாரிப் பின்னலாக்கிக் கொண்டும், நல்ல மணம் பொருந்திய பூச்சு பூசிக்கொண்டும், ரத்தின பூஷணங்கள் அணிந்து விளங்கும் உத்தம மாதர்கள், சேடிப்பெண்களால் சூழப்படுவார்கள். அப்படி த்ரிபுரசுந்தரியின் கூந்தலைச் சேர்த்து அழகுபடுத்துவார்கள் இந்திரலோகத்து மாதர்களான அப்சரஸ் பெண்கள்.
வாசனைப் பூச்சு பூசுபவள் பிரம்மனின் மனைவியான சரஸ்வதிதேவி. ரத்தினாபரணங்களால் அழகுபடுத்துபவள் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மிதேவி. பணிவிடை செய்யக் காத்திருக்கும் சேடிகளாகச் சூழ்ந்து நிற்கிறார்கள் தேவகன்னிகைகள். இவ்விதம் சகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக