வியாழன், 1 டிசம்பர், 2016

ஆடி 18ம் பெருக்கு!


ஆடிப்பெருக்கு என்று சொன்ன மாத்திரத்திலேயே ஆடிக்காற்றில் புது வெள்ளத்தை அள்ளிக்கொண்டு வரும் காவிரி தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். அன்றைய தினம் காவிரி பாயும் இடங்களில் எல்லாம் ஒரே திருவிழா மயமாகத்தான் இருக்கும்.


அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

அந்த புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு.


நதி உருவானது எப்படி என்பதற்கும் புராணக்கதை ஒன்று உள்ளது.

அந்த கதை!

சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள்.

அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார். அகத்தியர் தென்னகம் நோக்கி
 வரும்போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது.

கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச்சென்று தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணி ஆனது என்கிறது அந்த கதை.

பொதுவாக ஆடி மாதத்தை அசுப மாதம் என்பார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து, அதில் விளக்கேற்றி பூஜைக்குரிய பொருட்களை வைத்து புது மஞ்சள், கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுகிறார்கள்.

வயது முதிர்ந்த பெண் ஒருவர் சுமங்கலி பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பர்.அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலிச்சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக்கொள்வார்கள்.

அப்படி செய்வதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாலைகளை (பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்) அந்த புதுமணத் தம்பதியரே ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களது இல்லறம் செழிக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார்.

அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்’ கிடைக்கும் என்பது ஐதீகம்.


ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை’ என்று பெயர்.

அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும்.

மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர்.

இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக