வெள்ளி, 30 டிசம்பர், 2016

அதிர்ஷ்ட யோகங்களைத் தரும் மகா வியதீபாத புண்ணிய காலம்!

 
மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை.
 
மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும்.

வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு.
 
 
இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.
 
மார்கழி மாதத்தில் பரமேசுவரனை மகிழ்விக்கும் மகா வியதீபாத விரதத்தின் பெருமையைக் கவனிப்போம்.
 

ஸூத ஸம்ஹிதையில் தீர்த்த மாஹாத்மிய காண்டத்தில், "மகா வியதீபாதம் வரும் நாளன்று தற்கால குஜராத்தில் காடியாபாத் என்ற இடத்திலுள்ள ஜோதிர்லிங்கமான சோமநாதரையோ, திருவாரூர் தியாகேசரையோ, ராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாத சுவாமியையோ தரிசித்து வழிபடுதல் மிகச் சிறந்த பலனைத் தரும்' என்று கூறப்பட்டுள்ளது.

சைவபூஷணம் என்ற ஆகம நூல், வியதீபாத தினத்தன்று அதிகாலையில் எழுந்து ஆசாரத்துடன் சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறது. இவ்விதம் ஒரு வருடத்தில் வரும் பதின்மூன்று வியதீபாத நாட்களிலும் செய்தால், ஸ்ரீபரமேசுவரன் எல்லாவித நன்மைகளையும் அளிப்பார் என்று கூறுகிறது.

இப்பூஜையை மார்கழி மாத மகா வியதீபாதத்தில் தொடங்கி அடுத்த மகா வியதீபாதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வியதீபாதமும் நட்சத்திரங்களைப் போலவே இருபத்தேழு நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.

முன்னொரு சமயம், சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்ட போது, தர்மத்தில் அதிக ஈடுபாடுடைய சூரியன் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும்.
 
இந்த தேவதைக்கு அதிதேவதை சிவ பிரானாவார்.
 
தவிர, இந்த மகா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவ ஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்க ளும் அடங்கும். அதிலும் மகா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

பொதுவாக ஒவ்வொரு புண்ணிய தினத்தை ஒட்டி ஒவ்வொரு க்ஷேத்திரத்தில் பிரம்மோற்சவம் செய்வார்கள்.
 
 இவ்விதம் திருவாதிரையை ஒட்டி சிதம்பர க்ஷேத்திரத்திலும், மகா வியதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு ஒரு மைல் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
 
 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக