வெள்ளி, 30 டிசம்பர், 2016

Happy New Year 2017!

 

Happy New Year 2017!

 

Happy New Year!

 

May god give all wishes come true!

 

and god give health, wealth, growth, success, joy, and good experience, and long live. this year 2017! 

 









 

ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிஷேகம்!

ஆண்டுக்கு ஆறு  முறை அபிஷேகம் காணும் எம்பெருமான்:
 
ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.
 
இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை, திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
 
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித்
திருமஞ்சனம் என்று சொல்வர்.
 
தேவர்களுக்கு வைகறைப் பொழுது மார்கழி மாதம், காலைப் பொழுது மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை, மாலைப் பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.
 
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் -வைகறை பூஜை, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் -காலைச் சந்தி பூஜை, சித்திரை திருவோணத்தில் -உச்சிக்கால பூஜை, ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் - மாலை (சாயரட்சை) பூஜை, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்-இரண்டாம் கால பூஜை, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்-அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.
 
அந்த வகையில்  அனைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு சித்திரை திருநீராட்டல் நடைபெறும் சமயம்  அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம்.
 
"ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே."
 
பொருள்: எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
 
 

அதிர்ஷ்ட யோகங்களைத் தரும் மகா வியதீபாத புண்ணிய காலம்!

 
மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை.
 
மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும்.

வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு.
 
 
இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.
 
மார்கழி மாதத்தில் பரமேசுவரனை மகிழ்விக்கும் மகா வியதீபாத விரதத்தின் பெருமையைக் கவனிப்போம்.
 

ஸூத ஸம்ஹிதையில் தீர்த்த மாஹாத்மிய காண்டத்தில், "மகா வியதீபாதம் வரும் நாளன்று தற்கால குஜராத்தில் காடியாபாத் என்ற இடத்திலுள்ள ஜோதிர்லிங்கமான சோமநாதரையோ, திருவாரூர் தியாகேசரையோ, ராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாத சுவாமியையோ தரிசித்து வழிபடுதல் மிகச் சிறந்த பலனைத் தரும்' என்று கூறப்பட்டுள்ளது.

சைவபூஷணம் என்ற ஆகம நூல், வியதீபாத தினத்தன்று அதிகாலையில் எழுந்து ஆசாரத்துடன் சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறது. இவ்விதம் ஒரு வருடத்தில் வரும் பதின்மூன்று வியதீபாத நாட்களிலும் செய்தால், ஸ்ரீபரமேசுவரன் எல்லாவித நன்மைகளையும் அளிப்பார் என்று கூறுகிறது.

இப்பூஜையை மார்கழி மாத மகா வியதீபாதத்தில் தொடங்கி அடுத்த மகா வியதீபாதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வியதீபாதமும் நட்சத்திரங்களைப் போலவே இருபத்தேழு நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.

முன்னொரு சமயம், சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்ட போது, தர்மத்தில் அதிக ஈடுபாடுடைய சூரியன் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும்.
 
இந்த தேவதைக்கு அதிதேவதை சிவ பிரானாவார்.
 
தவிர, இந்த மகா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவ ஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்க ளும் அடங்கும். அதிலும் மகா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

பொதுவாக ஒவ்வொரு புண்ணிய தினத்தை ஒட்டி ஒவ்வொரு க்ஷேத்திரத்தில் பிரம்மோற்சவம் செய்வார்கள்.
 
 இவ்விதம் திருவாதிரையை ஒட்டி சிதம்பர க்ஷேத்திரத்திலும், மகா வியதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு ஒரு மைல் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
 
 

 

 

ஆருத்ரா தரிசனம்!

 
 
 
"கோவில்' என்ற சிறப்புப் பெயர் தில்லைக்கும் திருவரங்கத்துக்கும் மட்டுமே உண்டு.
 
உபாசனைகளில் குறிப்பிடப் படும் ஆறு ஆதார ஸ்தானங்களில், மூலாதாரத்தைக் குறிக்கும் தலம் திருவாரூர் என்றும்,

சுவாதிஷ் டானத்துக்குரிய தலம் திருவானைக்காவல் என்றும்,

மணிபூரகத்தைக் குறிப்பது திருவண்ணாமலை என்றும்,

தில்லையம்பதியான சிதம்பரத்தை அனாஹத க்ஷேத்ரமாகவும்,

விசுத்திக்குரிய தலமாக காளஹஸ்தியும்,

ஆக்ஞா க்ஷேத்திரமாக முக்தியைத் தரும் காசியும் கூறப்பட்டுள்ளன.
 

இத்தகைய பெருமை வாய்ந்த சிதம்பரேசனின் துணைவியான அன்னை சிவகாம சுந்தரியை வாக்கிற்கு அதிதேவதையான "மனோன்மணி' என்ற சக்தி ரூபமாக சாத்திரங்கள் கூறுகின்றன.

சிதம்பரத் தலத்திற்கு கனகசபை அல்லது பொன்னம்பலம் என்று பெயர்.

இதேபோல் ஹாலாஸ்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு ரஜதசபை அல்லது வெள்ளியம்ப லம் என்றும்,

திருவாலங்காடு தலத்துக்கு ரத்ன சபை என்றும்,

திருநெல்வேலி ஆலயத்திற்கு தாமிர சபை என்றும்,

திருக்குற்றாலத்திற்கு சித்ர சபை என்றும் பெயர் வழங்கி வருகிறது.

இவையனைத்தும் கூத்தபிரானின் முக்கிய திருத்தலங்களாகும்.
 

இவற்றைத் தவிர, ராமாயண காவியத்தாலேயே போற்றப்பட்ட தலம் "ஆதிசிதம்பரம்' எனப்படும் திருவெண்காடாகும். சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் நடராஜப் பெருமானுக்குத் தனி நடனசபை உண்டு. ஸ்படிகலிங்க பூஜையும், ஆகாயத் தத்துவ ரகசியமும் உள்ளன. ஒப்பற்ற அழகும் சான்னித்தியமும் உள்ள நடராஜரது பாதத்தில், பதினான்கு சதங்கைகளுடைய காப்பு அணிந்துள்ளார். பதினான்கு உலகங்களும் இவரது பாத அசைவினால் அசையும் என்பதை இது காட்டுகிறது. இவரது இடுப்பில் 81 சங்கிலி வளையங்கள் இணைத்த அரைஞாண் அணிந்துள் ளார். இது "ப்ரணவம்' முதலாக "நம' முடிய உள்ள 81 பத மந்திரங்களைக் குறிப்பிடுகிறது.
 
இருபத் தெட்டு எலும்பு மணிகளைக் கொண்ட ஆபரணம் ஒன்றினையும் அணிந்துள்ளார். இது இருபத் தெட்டு சதுர்யுகங்கள் முடிந்துவிட்டதைக் குறிப் பிடுகிறது. இவரது மார்பில் ஒருபுறம் ஆமை ஓடும், ஒருபுறம் பன்றிக் கொம்பும்போல் அமைந்த பதக்கமும் அணிந்துள்ளார். இது "என்பொடு கொம் பொடு ஆமை இவை மார்பிலங்க' என்ற கோளறு பதிகத்தை நினைவூட்டுகிறது. இ
 
வரது தலையில் ஷோடச கலைகளைக் குறிக்கும் பதினாறு சடைகள் உள்ளன. மயிற்பீலியும் அணிந்துள்ளார். மீன் போன்ற வடிவத்தில் கங்கையும், பிறைச்சந்திர னும் இவரது சிரசை அலங்கரிக்கின்றன. இறைவ னது நடனத்தை அருகில் நின்று களிக்கும் அன்னை சிவகாமசுந்தரி, "மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவஸாக்ஷினீ' என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரியை நமக்கு நினைவூட்டுகிறாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நடராஜப் பெருமானின் பெருமையை விளக்கும் சிதம்பர மஹாத்மியம் என்ற நூல், "இறைவனது கரத்தில் உள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், அபயக் கரம் காத்தலையும், ஒரு கரத்தில் உள்ள அக்னி அழித்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன்மீது வைத்திருக்கும் பாதம் மறைத் தலையும் செய்கிறது. இந்த ஐந்தொழில்களையும் இறைவன் தனது ஸங்கல்ப மாத்திரத்தில் நடத்துவதை இது குறிப்பிடுகிறது' என்று கூறுகிறது.

இவ்வாறு ஈசன் திருநடனம் புரியும் திருவாதிரைத் திருநாளில் நாம் அனைவரும் ஆடவல்லானாகிய சிவபிரானைப் போற்றிப் பரவுதல் வேண்டும்.
 
 
 
 

ஆதிசங்கரர் அருளிய ஷட்பதீ ஸ்தோத்ரம்!



1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !
ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோ U தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த !
பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த
முகம் கொண்டவனே!கோவிந்த!ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ !
இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது.
 

மங்கள கிரி!

ஆந்திராவில் விஜயவாடா மற்றும் குண்டூருக்கு இடையே உள்ள பகுதிதான் மங்கள கிரி என்ற சிறிய ஊர். மக்கள் தொகையில்; பாதிக்கும் மேல் நெசவாளர்கள் உள்ள ஊர் இது. இந்த இடத்தில்தான் பானகம் அருந்தும் விஷ்ணு குடி கொண்டு உள்ள பிரபலமான நரசிம்மஸ்வாமி ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள பகுதியில் இலஷ்மி தேவியின் ஆலயம் உள்ளது.

மலைக்குக் கீழ் பகுதியில் இலஷ்மி நரசிம்மஸ்வாமி ஆலயம் ஓன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்ம அவதாரத்தை ஒட்டிய அதாவது பாதி மிருகம் , பாதி கடவுள் முகத்தில் தோற்றம் தரும் வகையிலான “லஷ்மி நரசிம்மர் சிலை” கல்லில் செய்யப்பட்டு 108 சாலிக்கிராமத்தினால் கட்டப்பட்ட மாலையை அணிந்துள்ள கோலத்தில் உள்ளது. அதனால் அந்தக் கோலம் மிகவும் விஷேசமாகக் கருதப் படுகின்றது.

சுமார் 200 முதல் 250 ஆண்டுகள் முன்பு அமராவதியை ஆண்டு வந்த ஒரு மன்னன் 150 அடிக்கும் மேல் உள்ள ஒரு கோபுரத்தை அந்த ஆலயத்திற்கு கட்டினார் ; . 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயத்தில் உள்ள மூல சிலையை நிறுவியவர்பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மங்களகிரி என்றால் மங்களம் தரும் இடம் என்று பெயர். மகாலஷ்மி இங்கு வந்து தபம் செய்ததினால் மங்களம் தரும் இடமாகக் இது கருதப்பட்டது. வைஷ்ணவர்களின் எட்டு புனித தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. யானையைப் போல தோற்றம் தரும் இந்த மலைப் பற்றி கூறப்படும் ஒரு கதையின்படி,
முன் ஒரு காலத்தில் பரியாத்திரா என்ற மன்னனின் மகனான ஹஷ்வ சுருங்கி என்ற இளவரசன் தனக்கு இருந்த அகோரத் தோற்றம் கொண்ட உடல் மாற வேண்டும் என விஷ்ணுவை வேண்டிக் கொண்டு அந்த மலைப் பகுதியில் வந்து தவம் இருந்தான் . அவன் குணமடைந்ததும் தன்னுடைய இரஜ்யத்திற்குத் திரும்ப மனமின்றி விஷ்ணுவை சுமக்கும் வாகனமாக ஒரு யானைத் தோற்றத்தில் அங்கு அமர்ந்து விட்டானாம் . ஆகவே அந்த மலையும் பின்னர் யானைத் தோற்றத்தில் மாறியதாம் .

கிருதேயுகத்தில் ஒருமுறை நாமுச்சி என்ற அரக்கன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான் . அவன் இந்திரனையும் விட்டு வைக்கவில்லை. அந்த அரக்கன் பிரும்மாவிடம் இருந்து தனக்கு உலர்ந்த அல்லது ஈரத்திலான எந்த பொருளினாலும் மரணம் வரக் கூடாதென வரம் பெற்று இருந்தான் . எல்லை மீறிப் போன அவன் தொல்லையைத் தாங்க முடியாமல் போன இந்திரன் மகாவிஷ்ணுவிடம் அவன் தொல்லைப் பற்றிக் கூற அவனை அழிக்க அவனுக்கு தன்னுடைய சுதர்சன சக்கரத்தைக் கொடுத்தார். இந்திரனும் அந்த சக்கரத்தை ஒரு கடலாக மாற்றி அந்த அரக்கன் மறைந்திருந்த குகைக்குள் பாயச் செய்தான் . அந்த சக்கரத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்திருந்த மகாவிஷ்ணு இருந்து கொண்டு அந்த குகைக்குள் இருந்த பிராண வாயு அனைத்தையும் தான் முழுங்கிவிட மூச்சுச் திணறி இரத்தம் கக்கி குகைக்குள்ளேயே அந்த அரக்கன் மடிந்து போனான் . ஆனாலும் நரசிம்ம அவதாரமத்தில் இருந்த விஷ்ணுவின் கோபம் மறையவில்லை. ஆகவே அனைத்து தேவர்களும் அவரிடம் சென்று அமிருதத்தைக் கொடுக்க அதை உண்டவர் அமைதியானார்.
அங்கு அமர்ந்த அவர் தனக்கு அடுத்தடுத்து வரும் யுகங்களான திரேதாயுகத்தில் நெய்யும், துவாபரயுகத்தில் பாலும் கலியுகத்தில் பானகமும் தந்து வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறினார். இராமாயணம் முடிந்து வைகுண்டம் சென்ற இராமபிரான் தன்னுடன் வந்த அனுமானை அந்த ஷேத்திரத்தை பாதுகாக்கும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்த அவரும் அந்த மலை மீது தங்கி உள்ளதான ஒரு ஐதீகம் உள்ளது. ஒரு அதிசயம் என்ன என்றால் அந்த தெய்வத்தின் வாயில் ஊற்றப்படும் நேவித்யமான பானகம் குடிக்கப்படுவது போல க்ளுக் , க்ளுக் என்ற சப்தம் கேட்டதுண்டாம் . ஒரளவு பானகம் உள்ளே போனதும் மீதிப் பானகம் பிரசாதமாக வெளியில் வழிந்து விட அதை பக்தர்கள் பிரசாதமாக கொண்டு செல்கின்றனர் . மேலும் கீழே சிந்தும் வெல்லம் கலந்த அந்த பானக நீரை சுற்றியோ அல்லது தெய்வத்தின் வாயிலோ ஒரு சிறிய எறும்பு கூடக் கிடையாது என்பது அதிசயச் செய்தி !
இயற்கையில் அமைந்துள்ள குகை நுழை வாயிலில் அமைந்துள்ள அந்த ஆலய மூர்த்தி முகமின்றி குகை வாயில் போல காட்சி தந்ததினால் அதற்கு வாயை திறந்தபடி உள்ள விஷ்ணுவின் முகத்தைப் பொருத்தி அதனுள் பானகத்தை பிரசாதமாகப் படைக்கின்றனர்.
  

பண்டிவாடே மகாலட்சுமி!

download (4)

மகாலட்சுமி ஆலயம் என்றதும் நினைவுக்கு வருவது கோலாபூர் மகாலட்சுமி ஆலயம்தான்.
 
அதைப்போன்றே சிறப்புடையது கோவாவில் பண்டிவாடே என்ற பகுதியில் உள்ளது,  கௌடசரஸ்வத்  அந்தணர்களின் குல தேவதையாக ஸ்ரீ மகாலட்சுமி விளங்குகிறாள்.
 
பரசுராமரின் ஆணைக்கேற்ப கோவா பகுதியில் இவர்கள் குடியேறியபோது. தங்கள் குலதேவதையையும் எடுத்து வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் சில குடும்பத்தினர் கொலாவா என்ற இடத்தில் தங்கி ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்த தேவியின் சிலையை போர்ச்சுக்கீசியர் சேதப்படுத்தியதால் அங்கிருந்து உற்சவ விக்கிரகத்தை மட்டும் பண்டிவாடாவிற்கு எடுத்துவந்து அங்கு ஏற்கனவே இருந்த ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். இதனால் பண்டிவாடாவில் இரண்டு மகாலட்சுமி விக்கிரகங்கள்  உள்ளன.
 
download (6)
இந்த ஆலயம் 1413 ம் ஆண்டிலிருந்தே சிறப்புற்று திகழ்வதை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
 
கருவறையில் ஸ்ரீ மகாலட்சுமியையும் அருகே கொலாவாலிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ மகாலட்சுமியையும் ஒருசேர தரிசிக்கலாம். குதிரையின் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் மகாலட்சுமி. இரு புறங்களில் கருடனும் அனுமனும் அஞ்சலித்த வண்ணம் உள்ளனர். தேவியின் காலடியில் இரண்டு சர்ப்பங்கள உள்ளன. ஸ்ரீ மகாலட்சுமி தேவி தன சிரசில் சிவலிங்கத்தைத் தரித்து காட்சி தருவது அபூர்வ அமைப்பு.
 மகா சிவராத்திரி நாள் பண்டிவாடா மகலட்சுமிக்கும்  ஸ்ரீ ராம நவமி கோலாவா ஸ்ரீ மகா லட்சுமிக்கும் உரிய விழா நாட்களாக கொண்டாடப்படுகின்றன. கொலாவாலிலிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மகாலட்சுமி விக்கிரகத்தை ஸ்ரீ ராம நவமி நாளன்று பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
 
அதற்கு அடுத்த நாள் இரண்டு மகாலட்சுமி உற்சவர்களையும் ஒரு தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருகின்றனர்.  இந்த ஆலயத்தில்  சௌக்  எனப்படும் முன் மண்டபம் மிகப் பிரபலமானது. இந்த ஆலயத்தில்  ஸ்ரீ ராவல்நாத்  ஸ்ரீ பாலேஷ்வர்  மற்றும் ஸ்ரீ நாராயண புருஷர் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன.
வெள்ளிக்கிழ மைகள்  ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை  சித்ரா பௌர்ணமி  ஆடி மற்றும் கார்த்திகை சுத்த தசமி  பாத்ரபத ஆனந்த சதுர்த்தசி  கார்த்திகை  வைகுண்ட சதுர்த்தசி  போன்றவை விழா நாட்களாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பண்டிவாடா என்றும் பண்டோரா என்றும் அழைக்கப்படும் இந்த ஊர் பானாஜியிளிருந்து 22 கி மீ தூரத்தில் உள்ளது.
 

வியாழன், 29 டிசம்பர், 2016

ஸ்ரீ ஆஞ்சநேயர் மாலா மந்திரம்!

ஹனுமன் க்கான பட முடிவு



 
 
ஸ்ரீ ஆஞ்சநேயர் மாலா மந்திரம்!
ஸ்ரீ ராமதூதாய, ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய, மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய,
லங்கா விதாஹகாய, மஹாபலப்ரசண்டாய,
பல்குனஸகாய, ஸகல ப்ரம்மாண்ட பாலகாய,
ஸப்த ஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள நயநாயா,
அமித விக்ரமாய, ஸஞ்ஜீவிநீ ஸமாநயன ஸமர்த்தாய,
அங்கத லக்ஷ்மண கபிஸைந்ய ப்ராண நிர்வாஹகாய,
தசகண்ட வித்வம்ஸநாய, ராமேஷ்டாய,
ஸீதாஸஹித ராமசந்த்ர ப்ரஸாதகாய ஹனுமதே நமஹ.

சக்தி கணபதி மந்திரம்




 
சக்தி கணபதி மந்திரம் 

ஆலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்
பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்
சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்
பயபஹம் சக்தி கணேச மீதே!
 

சக்தி கணபதி மந்திரத்தை 51 முறை சொல்ல அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும், மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியையும், சக்தியையும்  தரும்.
 

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

ஆதிசங்கரர் அருளிய “திரிபுரசுந்தரி”துதி!

 
o நீருண்ட கார்காலத்து மேகவரிசைபோல, தியானிக்கும் ஜனங்களது தாபத்தை அகற்றிக் குளிரச் செய்பவளும், கடம்பவனத்தில் உலாவி நிற்பவளும், மலையை நிகர்த்த நிதம்பங்களும் தாமரையை நிகர்த்த கண்களும் அமையப்பெற்றவளும், தேவ மாதர்களால் பணி செய்யப்பட்டவளும், முக்கண்ணது குடும்பத்தை நடத்துபவளும் முப்புரமெரித்த சிவபெருமானது கோபத்தைத் தணித்த சுந்தரியுமான த்ரிபுரசுந்தரிதேவியைச் சரணமடைகின்றேன்.

o கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்கமயமான யாழை ஏந்தியவளும், விலையுயர்ந்த ரத்தின மாலை அணிந்தவளும், மாதக திரவியத்தை வாயில் கொண்டு விளங்குகிறவளும், தயைபுரிந்து ஐச்வர்யமளிப்பவளும், மாசற்ற கடாக்ஷத்தால் எங்கும் சஞ்சரிப்பவளும், முக்கண்ணனின் மனைவியுமான த்ரிபுரசுந்தரிதேவியை யான் அடைக்கலமடைகின்றேன்.
 
o கதம்ப வனத்தை வீடாகக் கொண்டவளும், மலையை ஒத்த கொங்கைகளின் பாரத்தில் மாலை அணிந்தவளும், கருணைக் கடலின் கரையாகி விளங்குபவளும், சிவந்த கன்னங்களால் பிரகாசிப்பவளும், மெய்மறந்து இனியமொழி, பாட்டுகளால் ஆனந்திப்பவளும், மேகம் போன்றவளுமான ஒரு லீலா விபூதியால் நாம் கவசமணிந்தவர்கள் போலக் காப்பாற்றப்பட்டு வருகிறோம்.
 
 
o பூமியில் கடம்பக் காட்டின் நடுவில் வசிப்பவளும், ஆகாயத்தில் சூரிய மண்டலத்தில் நடுவில் யோகிகளால் தியானிக்கப்படுபவளும், மூலாதாரம் முதலிய ஆறு தாமரை போன்ற சக்கரங்களில் சரீரத்தில் தோன்றுபவளும், உண்மையில் சுத்த சத்வ ப்ரதானமாய் மின்னல் கொடி போல் நிர்மலமாக இருப்பவளும், ரஜோகுனத்தின் சேர்க்கையால் செம்பருத்தியின் சிவந்த நிறம் பெற்றவளும், சந்திரகலையைச் சேகரமாக அணிந்து உலகங்களைக் களிக்கச் செய்கின்றவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை வணங்குகின்றேன்.
 
o சிரசில் சுருண்ட குழல்களால் எழில் பெற்றிருப்பவளும், மார்பில் அணைக்கப்பட்ட வீணையால் விளங்குபவளும், மிருதுவான தாமரையில் அமர்ந்துகொண்டு மிருதுவான இருதய கமலம் படைத்தவர்களிடம் அன்பு காட்டுகிறவளும், மதத்தால் சிவந்த கண்களின் பார்வையால் மதனனை அழித்த ஈசனையும் நன்கு மயக்குகிறவளும், இனிமையாகப் பேசும் இயற்கையுள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான த்ரிபுரசுந்தரிதேவியை பணிகின்றேன்.
 
o அரவிந்த பாணமேந்தி, சிவப்புப்புள்ளி நிரம்பிய கரிய ஆடைதரித்து மதுபாத்திரத்தைக் கையில் கொண்டு, மதுவை அருந்தி, தானும் சுழன்று, உலகங்களையும் சுழற்றுகிறவளும், நெருக்கமான கொங்கை பாரங்களால் நிமிர்ந்தவளும், தொங்கும் வேணீபந்தமுடையவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை சரணமடைகின்றேன்.
 
o குங்குமப்பூ கலந்த சந்தனம் பூசிக்கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் கஸ்தூரிப் பொட்டு தரித்து, சதுர்புஜங்களிலும் கணை, வில், கயிறு, அங்குசம் என்ற நான்கு ஆயுதங்களைத் தாங்கி, மாலை, நகை, ஆடைகளில் சிவந்த நிறமுள்ளவளாய், மந்தஹாசத்துடன் அபாங்கத்தால் சற்று நோக்கி, ஜனங்களனைவரையும் மாயா வலையில் சிக்கச் செய்யும் தாயை ஜபகாலத்தில் நினைக்க வேண்டும்.
 
 
o கூந்தலைச் சேர்த்து வாரிப் பின்னலாக்கிக் கொண்டும், நல்ல மணம் பொருந்திய பூச்சு பூசிக்கொண்டும், ரத்தின பூஷணங்கள் அணிந்து விளங்கும் உத்தம மாதர்கள், சேடிப்பெண்களால் சூழப்படுவார்கள். அப்படி த்ரிபுரசுந்தரியின் கூந்தலைச் சேர்த்து அழகுபடுத்துவார்கள் இந்திரலோகத்து மாதர்களான அப்சரஸ் பெண்கள்.
 
வாசனைப் பூச்சு பூசுபவள் பிரம்மனின் மனைவியான சரஸ்வதிதேவி. ரத்தினாபரணங்களால் அழகுபடுத்துபவள் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மிதேவி. பணிவிடை செய்யக் காத்திருக்கும் சேடிகளாகச் சூழ்ந்து நிற்கிறார்கள் தேவகன்னிகைகள். இவ்விதம் சகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன். 
 
 

“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை!”

ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே!
 
“வைரம்”

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் 
அவம் பெருகும் பிழையோன் பேசத்தகுமோ!
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட் சுனையே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“நீலம்”

மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்!
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்1
வாலக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“முத்து”
 
முத் தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம் சரணம்!
வேதாந்த நிவாஸினியே சரணம்!
தத்தேறியநான் தனயன் தாய்நீ!
சாகாத வரம் தரவே வருவாய்!
மத்தேறு ததிக்கினை வாழ்வடைவேன்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“பவளம்”

அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை!
சிந்தை நிரம்பவளம்பொழி யாரோ!
தேம்பொழிலாமிது செய்தவளாரோ!
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்!
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்!
மந்திர வேதமயப் பொருளானாள்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“மாணிக்கம்”

காணக் கிடையாக் கதியானவளே!
கருதக் கிடையாக் கலையானவளே!
பூணக் கிடையாப் பொலிவானவளே!
புனையக் கிடையாப் புதுமைத்தவளே!
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே!
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“மரகதம்”

மரகத வடிவே! சரணம் சரணம்!
மதுரித பதமே சரணம் சரணம்!
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்!
அரஹர சிவ என்றடியவர் குழும்
அவரருள் பெற அருள் அமுதே சரணம்!
வரநவ நிதியே சரணம் சரணம்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“கோமேதகம்”

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் முன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமேதகமே குளிர் வான் நிலவே!
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்!
மாமெருவிலே வளர் கோகிலமே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“பதுமராகம்”

ரஞ்சினி நந்தினி அங்கனி பதும!
ராகவி காஸ வியாபினி அம்பா!
சஞ்சல ரோக நிவாராணி வாணி
சாமபவி சந்த்ரகலாதரி ராணி!
அஞ்சன மேனி அலங்க்ருதபூரணி!
அம்ருத சொரூபிணி நித்யகல்யாணி!
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“வைடூரியம்”

வலையொத்த வினை கலையொத்த மனம்!
மருளப் பறையால் ஒலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ!
நிகளம் துகளாக வரம் தருவாய்!
அலையற் றசைவற்று அநுபூதிபெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே!
மலயத்துவசன் மகளே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்

அவர் அற்புதசக்தியெல்லாம் அடைவார்
சிவரத்தினமாய்த் திகழ்வார்  அவரே!
 
 
 
 
 

எந்த நாளில் எதைச் செய்தால் வெற்றி!

நாம் சில வேலைகள் வேகமாக நடக்க வேண்டுமென்றும், சீக்கிரமாக முடிய வேண்டுமென்றும் விரும்புவோம்.

பயணம், விவசாயம், வசதி வாய்ப்புகள் சேர்வது, பிறரை சந்திப்பது, பயிற்சி எடுப்பது, மருந்து சாப்பிடுவது கடனைத் திருப்பிக் கொடுப்பது போன்றவை விரைவாக முடிய வேண்டும் என்று  விரும்புவோம்.


சில விஷயங்கள் நிதானமாகவும், தீர்க்கமாகவும், கால காலத்துக்கும் நிலைக்கும் விதமாகவும், நீடித்து பயன் தரும் விதமாகவும் செய்ய வேண்டியுள்ளன.


நகைகள் வாங்குவது, வீடு கட்டுவது, பதவி ஏற்பது, விதைப்பது, நடுவது, ஆலய பணிகள், கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவது.

சர, துரித நட்சத்திரங்கள்!

புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை சர நட்சத்திரங்கள் .

அஸ்வினி, பூசம், அஸ்தம், ஆகியவை துரித  நட்சத்திரங்கள்.

எந்த வேலைகள் வேகமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அந்த வேலைகளை எந்த நட்சத்த்திர நாட்களில் செய்து வெற்றி பெறலாம்.


ஸ்திர நட்சத்திரங்கள்!

ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகியன.

நிதானமாகவும், தீர்க்கமாகவும், கால காலத்துக்கும் நிலைக்கும் விதமாகவும், நீடித்து பயன் தரும் விதமாகவும் செய்ய வேண்டிய செயல்களை செய்ய ஸ்திர நாட்கள் ஏற்றவை.