சனி, 5 மார்ச், 2016

நலமே நல்கும் நல்லிணக்கீஸ்வரர்!


 

சென்னை தாம்பரத்தில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் வழியில் ஒரகடம் கூட்டு ரோடு நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ.ல் எழுச்சூரில் இருக்கிறது.


மூலவர்                 :       நல்லிணக்கீஸ்வரர்
அம்மன்/தாயார்   :       தெய்வநாயகி
தல விருட்சம்      :        பனை மரம், வில்வம், ஏறழிஞ்சில்
தீர்த்தம்                  :       தாமரை புஷ்கரணி, சிவன் குட்டை
பழமை                   :       1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்                          :       எழுச்சூர்

 


 
 
 தல சிறப்பு:
 
 பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.

தலபெருமை:
 
மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் தெற்குத் திசை நோக்கி, நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இந்த விக்கிரகத்தின் கால் விரல்கள் மற்றும் நகங்கள், சேலை கட்டியுள்ள மடிப்புகள் போன்றவை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமணம் தடைப்படுபவர்களுக்கு இந்த அம்மன் பெரிய வரப்பிரசாதம். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை வைத்து மூன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அங்குள்ள தல விருட்சங்களுள் ஒன்றான பெண் பனை மரத்தில் இந்த மஞ்சள் சரடைக் கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றொரு தலவிருட்சமான ஏறழிஞ்சில் மரத்தின் முன் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

இங்கு வள்ளி-தெய்வானை சமேதராக ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார்.
 

தல வரலாறு:
 
விஜய நகரப் பேரரசின் (நரஸா-திப்பாஜி தம்பதிக்குப் பிறந்த) மன்னன் வீரநரசிம்மா கி.பி. 1429-ஆம் வருடம் காஞ்சிப் பகுதியில் உள்ள எழுச்சூர் உட்பட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த 54-வது சங்கராச்சார்யரான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு தானமாக வழங்கினான் என கண்டெடுக்கப்பட்ட தாமிரப் பட்டயம் ஒன்றில் உள்ளது. இதன் பின்னர் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சில காலத்துக்கு இந்த எழுச்சூரில் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்திலேயே தங்கியிருந்து, முக்தி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குச் சான்றாக 54-வது ஆச்சார்யரின் ஜீவசமாதி (அதிர்ஷ்டானம்) இந்த ஆலய வளாகத்தில் நல்லிணக்கீஸ்வரர் சன்னதிக்குப் பின்புறம் அமைந்துள்ளது. 
 

 பொது தகவல்:
 
ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின் அருளாசி, விக்கிரகங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு.
 

கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரகங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள், 54-வது காஞ்சி பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் போன்றவை உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளன.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவும், ஒவ்வொருவரும் தம்மை சார்ந்தவரோடு இணக்கமாக இருக்க இங்குள்ள நல்லிணக்கீஸ்வரரைப் பிரார்த்தனை செய்கின்றனர். தவிர, நல்ல குரல் வளம் வேண்டுவோர் (பாடகர்கள்), பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்தி தேவருக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷமுள்ள ஆண்-பெண் இரு பாலாரும் தோஷ நிவர்த்தி பெற இங்குள்ள ஆறுமுகரை வணங்குவது சிறப்பு.
 

சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 

திறக்கும் நேரம்:
காலை மணி 6 முதல் மணி 12.30 வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக