புதன், 2 மார்ச், 2016

சுபமங்களம் தரும் ஸ்ரீ ஆத்யந்த பிரபு!



விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத் "

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.

இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

அனுமனுக்கு என்ன மாலை

ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப்பெறுவர்.

வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை விசேஷம்.

அனுமனின் குரு

 விநாயகருக்கும், அனுமனுக்கும்  குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான்.

அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக