செவ்வாய், 22 மார்ச், 2016

பங்குனி உத்திரம் -தெய்வங்களின் திருமணத் திருநாள்!




சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது.


தமிழ் ஆண்டின் கடைசி மாதமாக வருவது பங்குனி. தெய்வத் திருமணங்கள் பலவும் பங்குனியில், உத்திர நன்னாளில் நிகழ்ந்ததாக இதிகாச புராணங்கள் கூறுகின்றன.



 
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப் படுகிறது. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள்.



மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.



தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.



சிவபெருமான் சக்தியைக் கரம் பிடித்த நாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாலயங்களில் அன்றைய தினம் திருமண உற்ஸவங்கள் களை கட்டும். அன்று, சிவபெருமான், பார்வதிக்கு நடத்தப்படும் திருமண உற்ஸவங்களைக் கண்ணாரக் கண்டு வருவோருக்கு அனைத்து மங்களமும் உண்டாகும் என ஆகமங்கள் கூறுகின்றன.




மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது பங்குனி உத்திரத் திருநாளில்தான்.



பங்குனி உத்திரத் திருநாளில்தான் ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கமன்னரை கரம் பிடித்தாராம்.
 

முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை அழித்ததற்குப் பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தார். அந்த நாள் பங்குனி உத்திரமே. எனவே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான, தெய்வானையுடன் முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

ஸ்ரீராமபிரான் சீதாதேவியை மணம் செய்த நாளும் இந்நாளே.
 


ஸ்ரீரங்கத்தில் தாயாருடன் ஸ்ரீரங்கநாதர் சேர்த்தி காணும் மிக முக்கிய சேர்த்தித் திருவிழா பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவத் தலங்களில் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவங்கள் பக்தர்க்கு நலம் பல வழங்கும் பெருவிழாக்களே.


ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.



தியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாளும் பங்குனி உத்திரம் தான். இதனால்தான் இந்த நாளை ஹோலி என்னும் காமன் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான். சபரிமலை
சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டுவிழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.



இன்றைய நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருந்து அருகிலிருந்தும் ஆலயங்கள் சென்று தெய்வக் கல்யாணங்களை கண்டு தரிசிப்பதோடு வீட்டிலும் விரத பூஜைகள் செய்வது சிறப்பு.




பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலகரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும், குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள்,சர்க்கரைப் பொங்கலோடு நைவேந்தியம் படைத்து வழி பட வேண்டும். இன்றைய தினம் திரு விளக்கு தீபத்தில் சிவ பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து மங்களம் கைகூடப் பெறலாம்.


பங்குனி உத்திரநாளில் விரதம் இருப்பவர்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.





பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.


குலதெய்வ வழிபாடு:
பங்குனி உத்திர நன்னாளே, குடும்பங்கள் பலவற்றின் குல தெய்வங்களை தேடிச் சென்று வழிபடும் நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் தழைக்க உதவுகின்றது. இந்த நாளில் நம் குல தெய்வங்களை நாடிச் சென்று செய்யும் வழிபாட்டால் நம் முன்னோரின் பரிபூரண ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.














 images : thanks to google


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக