ஞாயிறு, 6 மார்ச், 2016

சியாமளா (மாதங்கி) நவராத்திரி!

  
புரட்டாசி மாதத்தில் சாரதா  நவராத்திரி  கொண்டாடுவது போல, சித்திரை  மாதம்  அனுசரித்தா வசந்த  நவராத்திரியும், ஆடி மாதத்தில் வாராஹி நவராத்திரி யும், தை  மாதத்தில் சியாமளா எனப்படும் ராஜ மாதங்கி நவராத்திரி யும்  கொண்டாடுவர்.

யாழ்ப்பாணர் குலத்தை வடமொழியில் மதங்கர் குலம் என்பர். அந்த குலத்தில் வந்தவர் மதங்க முனிவர். (ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே.) மதங்க  முனிவரின் தந்தை தேவி உபாசகர். அவரிடமே மந்திர தீட்சை பெற்ற மதங்கர், கடும் தவம் மேற்கொண்டு அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார்.
மதங்கர் முன் தோன்றிய அன்னை, ""நீ வேண்டும் வரத்தைக் கேள்'' என்றாள். மதங்கரோ, ""அன்னையே! காண்பதற்கரிய உனது காட்சியே கிடைத்தபின் வேறென்ன வேண்டும்! நான் வேண்டும் வரம் எதுவுமில்லை'' என்றார். அம்பிகை விட வில்லை. ""தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்றாள்.

மதங்கருக்கு இமவான் நண்பன். இமவான் தவம் செய்து பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான் அல்லவா? அந்த நினைவு மதங்கருக்கு வரவே, ""தாயே, வரம் தந்தேதான் ஆகவேண்டும் என்றால், தாங்கள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்'' என்றார். அன்னையும் இணங்கினாள்.

மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் திருமகளாக- சியாமளா அம்சமாக உதித்தாள் அம்பிகை. அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர். அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர்.
சியாமளா அம்சமாகப் பிறந்த தேவி, மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் சொல்வர். சியாமளம் என்றால் நீலம் கலந்த பச்சை நிறம். வடநாட்டில் தேவியை சியாமா என்பார்கள்.

சாக்த வழிபாட்டில் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, இந்த்ராணி, சாமுண்டி, வாராஹி, சியாமளா ஆகியோரை சப்த மாதர் என்பர்.

காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, கமலாத்மிகா, மாதங்கி ஆகிய பத்து தேவியரை தசமகாவித்யா என்பர்.

இவ்விரண்டிலும் சியாமளா எனப்படும் மாதங்கி இடம்பெறுகிறாள்.

"மாதா மரகத ஸ்யாமா மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீம் கடம்பவன வாஸினீம்
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பல நிலயே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே.'

"மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.''

மேற்கண்ட இரண்டு துதிகளைக் கேட்டாலே மகாகவி காளிதாசரின் நினைவு வரும். ஒன்றுமறியாப் பேதையாக இருந்தவனை காளிதாசனாக்கி, "ரகு வம்சம்', "குமார சம்பவம்', "மேக சந்தேசம்' போன்ற தலைசிறந்த நூல்களை இயற்ற வைத்தவள் மாதங்கிதேவி. காளிதாசன் வணங்கிய தேவியை உஜ்ஜயினியில் இன்றும் தரிசிக்கலாம்.

இந்த தேவியைப் பற்றி சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரு சகஸ்ரநாமங்கள் உள்ளன.

மாதங்கி அவதாரத்தைப்பற்றி, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது பிரம்மனின் மனதிலிருந்து ஒரு மகன் தோன்றினார். அவரே மதங்கர். (மதங்கம் என்றால் யானை.) பிரம்மன் மதங்கரிடம் "தவம் செய்' என்று கூற, அது பிரளய காலமாதலால் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அப்போது அங்கு வந்த நாரதர், ""பிரளய காலத்திலும் அழியாத இடம் திருவெண்காடு. எனவே அங்கு சென்று தவம் செய்'' என்று கூறினார். அதன்படியே திருவெண்காடு சென்று தவம் மேற்கொள்ள, மதங்கரின் தவத்தைக் கலைக்க மன்மதன் வந்தான். அவனை, ""சிவனாரது நெற்றிக்கண் சுடரால் எரிவாய்'' என சபித்தார் மதங்கர். அடுத்து மகாவிஷ்ணுவானவர் மோகினி வடிவில் வர, ""திருவெண்காட்டில் மோகினி வடிவுடனேயே இருப்பீர்'' என்றார். மதங்கரின் தவத்தில் மகிழ்ந்து அவர்முன் தோன்றிய விநாயகர், அஷ்டசித்திகளையும் மதங்கருக்கு வழங்கினார். இறுதியில் சிவபெருமானும் தரிசனம் தந்தருளினார்.

"தேவி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும்' என்று மதங்கர் தவத்தைத் தொடர, அவ்வண்ணமே ஆடி மாத வெள்ளிக்கிழமை அதிகாலையில், மதங்க தீர்த்தத்தில் முகிழ்த்த நீலோத்பல மலரில் சியாமளாவாக அவதரித்தாள் தேவி. அந்தக் குழந்தையை மதங்கர் அன்புடன் வளர்த்தார் என்கிறது திருவெண்காடு தலபுராணம். (திருவெண்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மதங்காஸ்ரமம் உள்ளது.)

"கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.'

"நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.'

மேற்கண்ட பாடல்கள் அபிராம பட்டர் தம் அந்தாதியில் மாதங்கி குறித்துப் பாடியவை.

முத்துசுவாமி தீட்சிதரின் முன்னோர்கள், வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்தவர்கள். இது பிரம்மன் பூஜித்த தலம். இங்குள்ள பச்சைக் கல்லாலான தேவிக்கு மரகதவல்லி என்றே பெயர். தீட்சிதர் தேவியை, "மரகதவல்லி மனஸா ஸ்மராமி' என்றே பாடியுள்ளார். சென்னை தம்புசெட்டித் தெருவிலுள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலுள்ள தேவியும் மரகத வல்லியே. இவர்களெல்லாம் பச்சை வண்ணத்தினளான சியாமளா தேவியின் அம்சம் நிரம்பியவர்கள். ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா தேவி. பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் என்பர். மதுரை மீனாட்சி கோவிலில் சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.

வீணை, கிளி, புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை, காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கடும்பாடி அம்மனும் ராஜசியாமளையே.மகா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள் சியாமளா தேவி. இவள் பராசக்தியின் மந்த்ரினி- அதாவது அமைச்சராக செயல்படுபவள். பராசக்திக்கு உகந்த நேரத்தில் உகந்த ஆலோசனை கூறுபவள். எனவே, வாக்கு சித்தி, அறிவுக்கூர்மை, சகல கலைகளிலும் வல்லமை, மந்திரசித்தி பெற விரும்புவோருக்கு சியாமளா உபாசனை மிகச்சிறந்தது.

"கேய சக்ர ரதாரூட மந்த்ரினி பரிஸேவிதா
மந்த்ரிணி அம்பா விரசித விடிங்கவத தோஷிதா'

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். அதாவது, பண்டாசுரனின் சகோதரன் விடிங்கனை, கேய சக்கர ரதத்தில் அமர்ந்து போரிட்டு வென்றாளாம் சியாமளாதேவி.

"ஸங்கீத யோகினி, ஸ்யாமா, ஸ்யாமளா, மந்த்ரிணி, மந்த்ரிநாயகி, சஸிவேஸானி, ப்ரதானேஸி, சுகப்ரியா, வீணாபதி, ஸமுத்ரிணி, நீலப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாஸினி, ப்ரியசப்ரியா'
 
என்றெல்லாம் லலிதா உபாக் யானம் சியாமளாவைத் துதிக்கிறது.

"சரிகமபத நிரதாம் வீணா ஸங்க்ராந்த ஹஸ்தாம் ஸாந்தாம்
ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபர காந்தாம் நமாமி சிவ காந்தாம்'

சியாமளாவைப் பணிந்து கலையருள் பெறுவோம்; ஞானம், சாந்தி பெற்று வாழ்வோம்!
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக