புதன், 16 மார்ச், 2016

வசந்த நவராத்திரி!


சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும்.

அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.

புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.

ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.

ஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் கொண்டாட்டமாக நடத்தப்படக் கூடியது சாரதா நவராத்திரி. வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம். இந்த சாரதா நவராத்திரி போக நவராத்திரி எனும் மகிழ்வைக் கொடுக்கக் கூடிய நவராத்திரியாகும்.

வசந்த நவராத்திரி :

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்.

இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.
 
(நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில்,
 
வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், 
 
ஒரு பட்ச்ம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும்,
 
மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)


பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது.
சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.

வசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது.

வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.

நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.


வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக