வியாழன், 24 டிசம்பர், 2015

ஆருத்ரா தரிசனம்!

 
 
மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும்.
 
சிறப்பு மிக்க திருவாதிரை நட்சத்திரம், சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.

ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்
     மடங்காகும். அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும், வளங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் வழிபாடாக திகழ்கிறது.
 
நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது. அதன் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.
 
சிதம்பரம் ஈசனின் பஞ்சபூத தலங்களில் ஆகாய க்ஷேத்திரம்.  மாணிக்க வாசகர் திருவாசகத்தை அருளச் செய்த சமயத்தில் அதனை எழுதுதுருவில் மாற்ற வேண்டுமென பலர் பிரார்த்தித்தனராம். என்னே விந்தை, மறுநாள் காலையில் தில்லை நடராஜன் சன்னதியில் அவன் காலடியில் திருவாசகம் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் இருந்ததாம்.
 
 
இவ்வாறாக அம்பல கூத்தன் திருவாசகத்திற்கு படி எடுக்கும் பெருமானாக அமைந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை தினமாம். இந்த நிகழ்ச்சியின் காரணமாக இன்றும் திருவாதிரை தினத்தில் சிதம்பரத்தில் மாணிக்க வாசகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு இறைவன் முன்னால் திருவாசகம் ஓதப்படுகிறதாம்.
 
 நந்தனார் நடராஜனடி சேர்ந்ததும் திருவாதிரைத் திருநாள் தான்.

சிதம்பரத்தில் நடராஜபிரானுக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெருகிறது. அந்த ஆறுநாட்களில் ஒரு நாள் தான் ஆருத்திரா தரிசனம் நடக்கும் திருவாதிரைக்கு முந்தைய தின இரவு.
 
இந்த இரவில் ஆயிரக்கால் மண்டபத்தில் இந்த அபிஷேகம் நடைபெறுவதை காண கண் கோடி வேண்டும். அபிஷேகப் பிரியனுக்கு பால், தேன், இளநீர் எல்லாம் குடம் குடமாக அபிஷேகிக்கப்படும். பின்னர் விடியலில் ஆருத்திரா தரிசன வைபவமாக நாதஸ்வர இசைக்கேற்ப அசைந்தாடி வரும் ஆனந்த் கூத்தனைப் பார்க்க சலிக்காது.
 
 
களி என்றால் ஆனந்தம் என்று பொருள். ஈசனின் இயல்பே ஆனந்தம் தானே?. அரிசியில் வெல்லத்தை குழைத்து களி செய்வதுபோல் அறிவில் அருளைக் குழைத்து பெருவதே ஆண்டவன். ஏழு காய்கள், பயறு வகைகள் சேர்த்து வைக்கும் கதம்ப கூட்டானது ஆண்டவன் அளித்துள்ள இயற்கை வளங்களை திரட்டி அவனுக்கு அர்ப்பணிப்பதாகும்.
 
 
இந்த விழா தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் கொண்டாடப்படுகிறது. நமது கோலாட்டம், கும்மி போல கேரளத்து பெண்கள் இந்நன்னாளில் "ஸ்வாஞ்சலிட்டு" என்பதான ஒரு நடனம் ஆடுகிறார்கள். இந்த நடனம் ஆடாவிடில் பாவம் என்று எண்ணும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
 
 
 

 
 
இராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோச மங்கையில் முழுவதும் மரகதக் கல்லால் ஆன நடராஜர். திருவாதிரையன்று மட்டுமே இவரது சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். திருவாதிரை காலையில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டுவிடும்.
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக