திங்கள், 21 டிசம்பர், 2015

முக்கோடி ஏகாதசி


மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதம் வரும் ஏகாதசி தான் சிறப்புக்குரியதாகும். அதனால் தான் இது பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என போற்றப்படுகிறது. பெருமாள் அருள்பாலிக்கும் அனைத்து திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

 
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.

இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து அதிகாலையில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்த பின்னர் விரதத்தை முடித்தால் இந்த உலகின் பிறவிப்பிணிகளில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். அதனால் தான் விரதங்களில் சிறந்த விரதமாக வைகுண்ட ஏகாதசி விரதம் கருதப்படுகிறது.

ஏகாதசி விரதத்தை தசமியில் தொடங்கி அன்று இரவு, ஏகாதசி முழு தினமும், துவாதசி மாலையில் ஆக நான்கு வேளைகளுக்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். தசமியில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். தனியே சுத்தமான தரையில் படுக்க வேண்டும்.

இந்த உபவாச தினத்தின் போது, உடலில் நெல்லிப் பருப்பை அரைத்துப் பூசிக் கொண்டு, நதியில் நீராட வேண்டும். பின்னர் உபவாசம் செய்து கொண்டு ஹரியை நினைத்தபடி பஜனை, பூஜையில் ஈடுபட வேண்டும். ஏகாதசி இரவு உயர்ந்த ஆடைகளால் திருமாலை அலங்கரித்து, கந்த புஷ்பங்களை சாத்த வேண்டும். பின்னர் தூப தீபம் காட்டி, 108 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

பசு நெய்யும், சர்க்கரையும் கலந்த பாயாசமும், பலவித கனிகளும், கற்பூரம், சாபத்திரி, ஜாதிக்காய், லவங்கம் போன்றவை சேர்ந்த அடைக்காயமுது செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.. விருந்தினருக்கு உணவு அளிக்க வேண்டும்.

இந்த வழியில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கும் என்பது ஐதீகம். இதனை எடுத்துக்கூறும் வகையில்தான், வைணவ தலங்களில் ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு என்ற விழாவை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

 
இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி விரதத்தால் தான் துன்பங்களில் இருந்து விடுபட்டார். ருக்மாங்கதன் என்ற மன்னர் இதே விரதத்தை மேற்கொண்டுதான் மக்கட்பேறு பெற்றான். வைகானஸ் என்ற அரசன், இந்த விரதத்தின் மூலமாக தங்கள் மூதாதையர்களுக்கு நற்கதி கிடைக்கப் பெற்றான்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக