செவ்வாய், 22 டிசம்பர், 2015

நிறை செல்வம் வழங்கும் குபேர வழிபாடு!


இலங்கேஸ்வரன், சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து பலவிதமான தவங்கள் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமியும் தனதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி - பதுமநிதியை குபேரன் ரட்சிக்கின்றார். சங்க- பதும நிதிகள் அளவற்ற பொருட் செல்வத்தைக் கொண்டமையால், குபேரனின் இருமருங்கிலும் இவர்கள் வீற்றிருப்பார்கள்.

சிற்ப சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகா புரியில் (குபேர பட்டணம்) அத்தாணி மண்டபத் தில், தாமரை மலர்மீதுள்ள ஆசனத்தின் மெத்தைமீது, ஒரு கை அபய முத்திரை காட்ட, கிரீடம் முதலிய சொர்ணாபரணங்களுடன் திருமுத்துக்குடையின் கீழ் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் சங்க நிதி தேவதை (ஆண் உருவம்) தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறத்தில் பத்ம நிதி தேவதை (ஆண் உருவம்) தன் வலக் கையில் பத்மத்துடனும், இடக் கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர் ஏந்திய நிலையில், வலக்கையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார்.


சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார்.

திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்ப தால், கோபாதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். யட்சர்களுக்குத் தலைவனான குபேரன் ஸ்ரீ ராஜாராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜெபித்த வண்ணமிருப் பவர். இதனால சகல சக்திகளையும் தன்வயம் கொண்டு, பக்தர்களுக்கு இல்லையென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறார்.

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,

ராஜதிராஜாய  ப்ரஹஸ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
காமேஸ்ரோ  வைஸ்ரவணோ  ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம//


என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறார்கள்.

குபேர பூஜை துவங்குவதற்குமுன், எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரைப் பூஜிக்க வேண்டும். தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ வைத்து தூபதீபம் போன்ற பதினாறு உபசரணை கள் செய்து, அஷ்டோத்திர (நூற்றியெட்டு) திருநாமங்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.

அப்பூஜையை அடுத்து நவகிரகங்களைப் பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்யவேண்டும்.

கடைசியாக வடக்குத் திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தில் குபேரனை ஆவாகனம் செய்து குபேர பூஜையைத் தொடங்கலாம். பின் குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களால் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து பூஜையை நிறைவுபெறச் செய்யவேண்டும்.

தியான சுலோகம்


மநுஜ வாஹய விமாந வரஸ்திகம்
கருடரத்த நிபம் நிதிதாயகம்/
ஸிவஸகம் முருடாதி விபிஷிதம்
வரகதம் தநதம் பஜ துத்திலம்//


மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத் தில் அமர்ந்திருப்பவரும், மரகதம் போன்று ஒளிவீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமானின் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடைய வரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானைப் போற்றுவாயாக!
மூல மந்திரம்:
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நம:
குபேர காயத்ரி:
ஒம் யக்ஷேசாய வித்மஹே
 
வைஸ்ரவணாய தீமஹி
 தந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்!

குபேர மந்திரம்


ஓம் யக்ஷராஜாய குபேராய வைஸ்வரவணாய/
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா//
யட்சராஜனே, குபேரனே, விச்ரவசின் புதல்வனே, செல்வங்களின் அதிபதியே! என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.
தினசரி மேற்படி மந்திரத்தை வடக்கு முகம் நோக்கி அமர்ந்து 1008 முறை ஜெபம் செய்ய வேண்டும். பால் நைவேத்தியம் செய்யவேண்டும். பிரம்மசர்ய விரதம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.
ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே, எனது வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.
துதி:
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்!
குபேரனே, நர வாகனனே, வட திசைக்கதிபனே, கதாயுதனே, விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.
குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சௌபாக்யலட்சுமி யந்திரம் அல்லது படத்தையும் பூஜை செய்யவேண்டும்.

தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக