ஐப்பசி அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதிவரை ஆறுநாட்கள் தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். அதுபோல கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி திதியை குமார சஷ்டி, சுப்ரமணிய சஷ்டி என்று ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகளில் கொண்டாடுவார்கள்.
பிள்ளைப்பேறு வேண்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதமிருந்து பூஜை செய்து, ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளித்து வேட்டியை தானமாகத் தருவர்.
இதனை சஷ்டி தேவி வழிபாடு என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான கௌமாரியின் இன்னொரு பெயரே சஷ்டி தேவி. சிவனின் சக்தி பராசக்தி என்பதுபோல, குமரனின் சக்தி சஷ்டி தேவி.
குஜராத்தில் புகழ் பெற்ற ஆதிஅம்பாஜி கோவிலில் சஷ்டி தேவியைக் காணலாம். வியாசரின் பிரம்ம வைவர்த்த புராணமும், தேவி பாகவதமும் சஷ்டி தேவி பற்றியும், உபாசனைப் பலன்கள் பற்றியும் கூறுகின்றன.
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பிரகிருதி காண்டம், முதல் அத்தியாயம் (79-86 துதிகள்) சஷ்டி தேவியைப் பற்றி சுருக்கமாக விவரிக்கும்.
"ப்ரதான அம்சரூபா யா தேவஸேனா ச
நாரத மாத்ருகா ஸா பூஜ்யதமா
ஸாச ஷஷ்டி ப்ரகீர்த்திதா ஸிசூனாம்
ப்ரதிவிஸ்வம் து ப்ரதி பாலன காரணி'
என்னும் சுலோகம், "பிரகிருதி தேவியின் பிரதான அம்சம், சஷ்டி தேவி என்கிற தேவசேனை; அவள் உலகத்திலிருக்கும் குழந்தைகளைக் காப்பவள்' என்று கூறுகிறது.
"தபஸ்வினி விஷ்ணுபக்தா
கார்த்திகேயஸ்ச காமினி
ஷஷ்ட அம்சரூபாச ப்ரக்ருதே:
தேன ஷஷ்டி ப்ரகீர்த்திதா.'
அவள் தவம் செய்பவள்; விஷ்ணுபக்தை; கார்த்திகேயன் மனைவி; பிரகிருதியின் ஆறாவது அம்சமானதால் சஷ்டி என்று பெயர்.
"புத்ர பௌத்ர தாத்ரி யா
தாத்ரி ச ஜகதாம் ஸதா
ஸுந்தரி யுவதி ரம்யா
ஸததம் பர்துரந்தி கே.'
மகன், பேரன் ஆகியோரை அளிப்பவள்;
ஜகத்தைக் காப்பவள்; அழகானவள்; யுவதியானவள்.
"பூஜா யா ஸுதிகாகாரே
பரஷஷ்டிதினே சிஸோ:
ஏக வம்சதிதமே சைவ
பூஜா கல்யாண ஹேதுகி.'
அவளை பிரசவ அறையில் ஆறாவது நாள், 21-ஆவது நாள் போற்றினால் மங்களமே நிகழும்.
"ஸஸ்வத் நியமிதா ச ஏஷா
நித்யா காம்யா அபி அத: பரா
மாத்ரு ரூபா தயாரூபா
ஸஸ்வத் ரக்ஷணகாரிணி
ஜலே ஸ்தலே ச அந்தரிக்ஷே
சிசூனாம் ஸ்வப்னகோசரா'
அவள் அன்னையின் வடிவமாய்; தயை, கருணையின் வடிவமாய்; நித்யமாய்- சாஸ்வதமாய் இருந்து, நிலம், நீர், ஆகாயம், கனவு போன்றவற்றிலெல்லாம் குழந்தையை எப்போதும் காக்கிறாள். ஆக, அவள் துதிப்பவர்களை- கர்ப்பத்திலிருந்தே குழந்தையைக் காப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மகனையும் மகளையும், பேரனையும் பேத்தியையும் அளித்து எப்போதும் காக்கிறாள்.
ஸ்ரீதேவி பாகவதத்தின் 9-ஆவது ஸ்கந்தம், 46-ஆவது அத்தியாயமானது, சஷ்டி தேவி உபாக்யானம் என்று தேவசேனை (சஷ்டிதேவி) மகத்துவம் கூறும். (72 சுலோகங்கள்).
"ஷஷ்ட அம்சா ப்ரக்ருதே யா ச
ஸச ஷஷ்டி ப்ரகீர்த்திகா
பாலகானாம் அதிஷ்டாத்ரி
விஷ்ணுமாயா பாலதா.' (4)
"மாத்ருகாஸுச விக்யாதா
தேவ ஸேனாபிதா சயா
ப்ராண அதிக ப்ரியா ஸாத்வி
ஸ்கந்த பார்யா ச ஸுவ்ரதா.' (5)
"ஆயு: ப்ரதாச பாலானாம்
தாத்ரி ரக்ஷண காரிணி
ஸததம் சிசுபார்ஸ்வஸ்தா
யோகேன ஸித்த யோகினி.' (6)
சஷ்டி தேவி விஷ்ணுவின் மாயையாக உதித்தவள். குழந்தைகளைக் காப்பவள். சஷ்டி தேவியே தேவசேனை என்று மதிக்கப்படுபவள். உயிரைவிட நேசிப்பவள். கந்தனின் மனைவி. அவள் ஒரு யோகினி; குழந்தை அருகில் செவிலித் தாய்போல இருந்து ரட்சிப்பவள்.
குமார சஷ்டி அன்று சஷ்டி தேவியைப் போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக