கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே.
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது.
மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி.
மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'தத்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.
இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம்.
இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தாணுமாலயனாக இறைவன் இங்கே இருக்கிறார்.
வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள்.
தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.
பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது.
பாரதத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும்கூறுவர் .
இதேபோல காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கர்னாடகாவில் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக