கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த- பசுஞ்சோலைகள் நிறைந்த ஊர் கொல்லூர். இக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மூகாம்பிகை ஆலயம். இங்கு அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்தபடி கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கி றாள். காளி, மகாலட்சுமி, சரசுவதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். இந்த அம்மன் வேண்டியதை வேண்டியபடி தருபவள் என்னும் பெயர் பெற்றவள்.
தவம் பல புரிந்து சிவனிடம் வரங்கள் பெற்றவன் மூகாசுரன். வரங்களின் பயனாக வந்த செருக்கால் யாவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். முனிவர்களும் தேவர்களும் கூட இவனது தொந்தரவு தாளாமல் கயிலாயம் வந்து முறையிடும்படி நடந்து கொண்டான். அவர்களது குறைகளைக் கேட்டுக் கொண்ட ஈசன், ""மூகாசுரனுக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சற்று பொறுங்கள்'' என நம்பிக்கையூட்டி அனுப்பி னார்.
மூகாசுரனை அழிக்க விசேஷ சக்திகள் வேண்டும் என்று கோல மகரிஷி கூறிய ஆலோசனை யின்படி, முப்பெருந்தேவியரின் சக்திகளை ஒன்றிணைத்து ஒரு அம்பிகை உருவாக்கப்பட்டாள். அம்பிகையின் தீரம் அசுரனை அழித்தொழித்தது. தன் மரணத் தருணத்தில் மூகாசுரன் வேண்டிக்கொண்டபடி அம்பிகை, அசுரனின் பெயராலேயே- மூகாம்பிகை என்ற பெயரில் அழைக்கப்படலானாள்.
இத்தலம் உருவானது குறித்து இரண்டு விதமான கதைகள் கூறப்படுகின்றன. முதல் கதையின்படி, ஆதிசங்கரர் முதன்முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத் தில் இருந்ததாம். அங்கிருந்த மேடையில் அமர்ந்து சங்கரர் தியானம் செய்தபோது, லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப் பதை உணர்ந்தார். தியானத் தின்போது அம்பாள் மூகாம்பிகையாக அவருக்கு காட்சியளித்தாள். அந்த உருவத்திலேயே மூகாம் பிகை சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட் டது.
மற்றொரு கதையின் படி, ஆதிசங்கரர் நாற்திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களி டம் ஒப்படைத்து விட்டு இந்தியா எங்கும் பயணம் செய்து வந்தார். ஒருமுறை அவர் கர்நாடகாவில் பயணம் செய்தபோது கொரிசோல் மலையில் தியானத்திலிருந்தார். அப்போது அம்பாள் அவர்முன் தோன்றி அருளாசி வழங்கினாள். அம்பாளின் எழிலில் அகமகிழ்ந்த சங்கரர், ""தங்களது உருவத்தை நான் நாள்தோறும் வணங்க விரும்புகிறேன். எனவே கேரளாவிலுள்ள காலடியில் உங்களது உருவத்தை பிரதிஷ்டை செய்ய அருளவேண்டும்'' எனக் கேட்டார்.
அம்பாளுக்கோ அந்த இடம்விட்டு நீங்க மனமில்லை. என்றாலும் பக்தனின் மனம் கோணக்கூடாதல்லவா! எனவே சங்கரரிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்தாள். ""என்னுடைய உருவத்தை நீ காலடிக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் இடையில் எங்கும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படித் திரும்பிப் பார்க்க நேர்ந்தால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும்.''
ஆதிசங்கரரும் அதை ஏற்றுக்கொண்டு அந்த மலையிலிருந்து அம்பாளின் உருவத்துடன் கீழிறங்கினார். அவர் மலையடிவாரத்தை அடைந்ததும், அம்பாள் தனது கொலுசை அசைக்க, ஒரு மதுரமான ஒலி கேட்கிறது. இதில் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிட்டார் ஆதிசங்கரர். எனவே அம்பாளிடம் வாக்களித்தபடி அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார். அந்த இடமே கொல்லப்புரா என்ற கொல்லூராகும்.
இங்குள்ள அம்மன் மூன்று கண்களுடன் காணக் கிடைக்காத கோலத்தில் காட்சியளிக்கிறாள். மூகாம்பிகையின் இருபுறத்திலும் ஐம்பொன்னாலான காளி, சரசுவதி சிலைகள் உள்ளன.
கோவிலுக்கு மேற்கே காலபைரவர், உமாமகேஸ்வரி சந்நிதிக்கு இடையே சௌபர்னிகா ஆறு ஓடுகிறது. இந்த ஆறு அருகிலுள்ள மலை உச்சியில் இரு கணவாய் வழியாக உருவாகி, கொல்லூரை வந்தடைகிறது. கொல்லூரை எட்டும்போது, இந்த ஆறு சம்பாரா என்று அழைக்கப்படுகிறது. 64 வகை மூலிகைத் தாவரங்களின் சக்தி இவ்வாற்று நீரில் காணப்படுவதால், அதிகாலை நேரத்தில் இதில் நீராடினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவறையைச் சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு, தீப ஒளியால் கருவறை பிரகாசிக்கிறது. இரவு பிராகாரம் மூடப்படுவதற்குமுன், அம்பாள் கோவிலினுள் தங்க ரதத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின் பிராகார வலத்தை தேவர்களும் கண்டு வணங்குகிறார்கள் என்பது ஐதீகம்.
தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்குநீர் வழங்கப் படுகிறது. அதை அருந்துபவர்களை நோய் அண்டாது. மேலும் அவர்கள் மனத்தெம்பும், புத்திர பாக்கியமும் பெறுவார்கள். ஆதிசங்கரருக்கு உடல்நலமின்றிப் போனபோது அம்பாளே சுக்குநீர் வைத்துத் தந்ததாகவும், அந்த ஐதீகத்தின் தொடர்ச்சியாகவே இது வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் நடை திறப்ப தில்லை. ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் கோவில் திறந்திருப் பதோடு பூஜைகளும் நடைபெறும்.
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூல நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடக்கும். இந்தத் திருவிழாவின்போது, அம்ம னுக்கு மட்டுமின்றி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி, சரசுவதி பூஜையன்று மூகாம்பிகை சந்நிதியில் உள்ள சரஸ்வதிதேவி பக்தர்களின் தரிசனத் திற்காக வெளியே பவனி வருகிறாள்.
சென்னையிலிருந்து மங்களூருக்கு ரயில் மூலம் சென்றால், அங்கிருந்து கொல்லூ ருக்கு பேருந்து வசதி இருக்கிறது. கோவை யிலிருந்து நேரடியாக கொல்லூருக்கு பேருந்துகள் உள்ளன. வசதிக்கு ஏற்றாற்போல் தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன. முப்பெருந்தேவியின்
அம்சமான மூகாம்பிகையை தரிசித்தால் கல்வி, செல்வம், வீரம் என எல்லாமே சித்திக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக