புதன், 20 ஏப்ரல், 2016

செல்வ வளம் பெருக்கும் சித்திரை புத்தாண்டு!


"பிரபவ' முதல் "அட்சய' வரையிலான அறுபது வருடங்களுள் 26-ஆம் வருடமான நந்தன ஆண்டு நிறைவுற்று 27-ஆம் வருடமான விஜய வருடம் சித்திரை முதல் நாளில் தொடங்குகிறது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம் என்றும் சொல்வர். தமிழ் மாதங்கள் பன்னிரண்டும் ஒவ்வொரு வகையில் சிறப்பாகத் திகழ்கின்றன. அந்த வகையில் சித்திரையின் முத்திரை சற்று அழுத்தமாகவே தெரிகிறது. இம்மாதப் பிறப்பன்று இறைவழிபாடு சிறப்பாகப் பேசப்படுவதுபோல், அன்று உணவில் இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக வேப்பம்பூ பச்சடி, இனிப்பு, மாங்காய் பச்சடி இடம்பெற்றிருக்கும். இது வாழ்வில் இன்ப- துன்பம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை சமமாக பாவிக்கும் மனோபாவத்தைக் குறிப்பதாகும்.

அன்று கோவில்களில் பஞ்சாங்கம் படித்து, பலாபலன்களை விளக்குவர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் ஐந்து (பஞ்ச) அங்கங்கள் சேர்ந்ததே பஞ்சாங்கம். அனுதினமும் பஞ்சாங்கம் பார்த்து அறிவதால் அஷ்ட ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது முன்னோர் வாக்கு.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது திதி.
 தினமும் திதி பார்ப்பதால் செல்வ வளம் பெருகும்.
வாரம் பார்த்தறிவதால் ஆயுள் விருத்தியாகும்.
நான்கு பாதங்களோடு திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் பார்த்தறிவதால் தீவினைகள் அகலும்.
ஒவ்வொரு யோகத்திற்கும் தனித்தனி விசேஷ குணங்கள் உண்டு.
தினமும் யோக விசேஷம் காண்பதால் பிணிகள் நீங்கும்.
திதியில் பாதி கரணம். கரணம் பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரியசித்தி உண்டாகும் என்று ஜோதிட ஆய்வாளர்கள் கூறுவர்.

சித்திரை முதல் நாளை கேரளாவில் "விஷு' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று காலை எழுந்ததும் ஒவ்வொரு வீட்டிலும் விஷுக்கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று குருவாயூரப்பனை தரிசிப்பது மிகவும் போற்றப்படுவதால் முதல் நாளிரவே, கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கிவிடுவார்கள். விடிந்ததும் குருவாயூரப்பனை தரிசித்து அருளாசி பெறுவார்கள். கோவில் அர்ச்சகர் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை பிரசாதமாக வழங்குவார்.

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் யுகாதி என்ற பெயரில் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. .யுகாதி நாளில்தான் பிரம்மன் தன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் என்றும், இந்த பூலோகத்தை முதன்முதலில் படைத்தார் என்றும் புராணம் கூறுகிறது.

தமிழகக் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சிபோல, ஆந்திராவிலும் யுகாதி அன்று பஞ்சாங்கம் படிக்கும் வைபவம் நடைபெறுகிறது. மாதலை என்னும் நகரில் "பஞ்சாங்க படனம்' என்ற பெயரில் அரசு விழாவாகவே நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் சிறப்பு வழிபாடுகள், சுவாமி புறப்பாடு உண்டு.

மகாராஷ்டிர மாநிலத்தில் "குடி பாத்வா' என்ற பெயரில் யுகாதி கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, மகாலட்சுமியை வரவேற்பதற்காக வீடு முழுவதும் வண்ண வண்ண ரங்கோலி கோலமிடுவர். இந்நாளில் ஸ்ரீராமபிரான் சீதாதேவியுடன் அயோத்தி திரும்பியதாகக் கருதப்படுகிறது.


அசாமில், பிஹு என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சித்திரை மாதம்தான் வசந்தகாலம். இந்த வசந்தகால சித்திரை திரிதியை அன்றுதான் மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். இம்மாத சுக்ல பட்ச பஞ்சமி திதியில் ஸ்ரீலட்சுமிதேவி வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுவதால், அன்று புனித நதியில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது.

சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திரிதியை திதியை "அட்சய திருதியை' என்று போற்றுவர். அன்று தானம்- தர்மங்கள் செய்வது பெரும்புண்ணியத்தைத் தருமென்று ஞான நூல்கள் சொல்கின்றன.

ஸ்ரீராமர் ஜெயந்தி, பலராமர் ஜெயந்தி, ஸ்ரீசங்கரர் ஜெயந்தி, ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி போன்றவை சித்திரைக்கு பெருமை சேர்க்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையும் கிருத்திகையும்கூட சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சித்திரையில் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் கஜேந்திர மோட்சம் என்னும் நிகழ்ச்சி தென்காவேரியில் நடைபெறுவதைக் காணலாம். வருடத்திற்கு ஆறுமுறை மட்டும் அபிஷேகம் காணும் தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

சித்திரை மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமைகளில் அன்னை பார்வதியை வழிபட்டால் கணவன்- மனைவியரிடையே மகிழ்ச்சி பொங்கும். சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பைரவரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். சித்திரை மூல நட்சத்திரத்தன்று ஸ்ரீலட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சுக்ல பட்ச திரிதியை அன்று சிவ- பார்வதியை வணங்கி, தான- தர்மங்கள் செய்தால் சிறப்பான வாழ்வும், முடிவில் சிவலோக பதவியும் கிட்டும்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் கல்வி, ஞானம், பக்தியில் சிறந்து விளங்குவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சித்திரை மாதத்துக்கு பல சிறப்புகள் இருந்தாலும், சித்திரைக்கு முத்திரை பதிப்பது சித்ரா பௌர்ணமி ஆகும். முழுச்சந்திரனின் ஒளி படரும்போது மூலிகைகள் நிறைந்த நிலப்பரப்பிலிருந்து ஒருவகை உப்பு வெளிப்படும். இதை "பூமிநாதம்' என்று சித்த மருத்துவர்கள் கூறுவர். அது சித்தமருந்துகளுக்கு அதிக சக்தியை அளிக்கும் திறன் கொண்டது. மக்களுக்கு மாறாத இளமையையும் நரை, திரை, மூப்பற்ற நலமிக்க உடலையும் வழங்கும் சக்தி கொண்ட அந்த பூமிநாதம் என்ற உப்பு, சித்ரா பௌர்ணமி இரவில் பூமியிலிருந்து வெளிவந்ததை முதன்முதலில் கண்டவர்கள் சித்தர் பெருமக்கள் ஆவர். அதனால்தான் சித்திரை மாதப் பௌர்ணமியை சித்தர் பௌர்ணமி என்று வழங்கப்பட்டதாகவும் சொல்வர்.

எமதர்மனின் கணக்கர் என்று போற்றப்படும் சித்திரகுப்தர் அவதரித்ததும் சித்ரா பௌர்ணமி நாள்தான். 

ஒரு சித்ரா பௌர்ணமி இரவில், சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் இளைஞனின் சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த அழகிய சித்திரத்தைக் கண்ட பார்வதி சிவபெருமானை நோக்கி, ""சித்திரத்திலிருக்கும் இவன் நமக்குப் புத்திரனாக இருந்தால் எப்படி இருக்கும்?'' என்று கேட்கவே, ""நீ அழைத்தால் இவன் உயிர்பெற்று வருவான்'' என்றார். 


உடனே தேவியார், ""மகனே, சித்திரத்திலிருந்து வெளியே வா'' என்று அழைக்க, இடதுகையில் ஓலைச்சுவடி, வலதுகையில் எழுதுகோலுடன் அவன் வெளிப்பட்டான். சித்திரத்திலிருந்து வெளிவந்ததால் சித்திரபுத்திரன் என்று பெயர் சூட்டினார்கள். இது குறித்து வேறு கதைகளும் உண்டு.

எமதர்மராஜன், மானிடர்களின் பாவ புண்ணியங்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்று சிவபெருமானிடம் பல காலமாக கேட்டுக்கொண்டிருந்ததால், சித்திரபுத்திரனை எமனுக்கு உதவியாக இருக்கும்படி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

அன்று முதல் சித்திரகுப்தன் மானிடர்களின் பாவபுண்ணியங்களைக் குறித்து வைத்துக்கொள்ளும் நிபுணர் ஆனார். இவருக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோவில்கள் உள்ளன. அதில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இவரை வழிபட கேது தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், புத்திர தோஷம் விலகுமென்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பல திருத்தலங்களில் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதில் மதுரையில் நடைபெறும் விழா புராண கால தொடர்புடையது. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம், குண்டோதரனுக்கு அன்னம் வழங்கல் என்னும் திருவிளையாடல் புராண நிகழ்ச்சிகள், கள்ளழகர் வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பது, பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள் நாச்சியாரின் சூடிக்கொடுத்த மாலையைப் பெறுதல், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் மதுரைவாழ் மக்கள் மட்டுமல்ல; சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனித்துவம் பெற்ற இந்த விழா, மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்த மிகப்பெரிய விழாவென்று போற்றுவர். இதேபோல் ஸ்ரீரங்கம் திருத்தலத்திலும் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.


சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீசத்தியநாராயணரைப் பூஜிப்பதும் வழக்கம். பால்பாயசம், கல்கண்டு, கனிவகைகள் முதலியவற்றைப் படைத்து, துளசி மற்றும் செண்பக மலர்களால் ஸ்ரீசத்தியநாராயணரை அர்ச்சித்து வழிபட்டால் சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பர். மேலும் புத்திர பாக்கியம், புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, பட்டம், பதவி, திருமண யோகம் போன்ற அனைத்தையும் இந்தப் பூஜை தரவல்லது. ஸ்ரீநாராயணருக்குப் பிடித்தமான பால்பாயசம் நிவேதிப்பதால் நினைத்தது நடக்கும் என்பர்.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதும் சிறப்பிக்கப்படுகிறது. அன்னதான சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அன்று அன்னதானம் செய்து சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும்; கேட்க மறந்ததும் கிட்டும்.

சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவதும் மிகவும் போற்றப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலையை வலம் வரும்போது, நம் கண்களுக்குத் தெரியாமல் சித்தர்களும் நம்முடன் வலம் வருவதாக நம்பப்படுகிறது. அப்போது அவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் அற்புத சக்தி நம்மீதும் படுவதால், உடல் வளம் பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடுமென்று பெரியோர் சொல்வர்.


சித்ரா பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு வெண்பட்டாடை சமர்ப்பித்து, பலாசு மலர் மாலையை அணிவித்து, பலாசு மலர்களாலும் மருக்கொழுந்து இலைகளாலும் அர்ச்சித்தால் ஸ்ரீலட்சுமி கடாட்சமும் சகல பாக்கியங்களும் கிட்டுமென்று சிவபுராணம் கூறுகிறது.

சித்திரை மாதமானது தேவர்களுக்கு 15 முதல் 20 நாழிகைகள் வரையுள்ள ஐந்து நாழிகை மதியவேளையாகிறது. இது பிதுர் தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நேரமென்று கருதப்படுவதால், அந்த வேளையில் புனித நீர்நிலையில் தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள். பிதுர்தோஷம் விலகும்; பிதுர்களின் ஆசீர்வாதம் கிட்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று உப்பில்லாத உணவை இருவேளை சாப்பிட்டு விரதமிருந்தால் ஆயுள் பலம் கூடும். இந்நாளில் நெய்தீபம் ஏற்றி குபேரனின் மனைவி சித்ரா தேவியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

சிலப்பதிகாரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று பூம்புகாரில் இந்திரவிழா நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன், மதுரைக்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுகிறான் என்ற ஐதீகம் உள்ளது.


சித்ரா பௌர்ணமி நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் நீர்வீழ்ச்சியில் நீராடுவதும் போற்றப்படுகிறது. பொதுவாக நீர்வீழ்ச்சியுள்ள மலைப் பகுதிகளில் சித்தர்கள் வாசம் செய்வதால், அன்று நிலவொளியில் நீர்வீழ்ச்சியில் நீராடுவார்களாம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. சிவன்- பார்வதிக்கு கயிலையில் பங்குனி உத்திரத்தன்று திருமணம் நடந்தது. அவர்கள் தம்பதி சமேதராக சித்ரா பௌர்ணமியன்று பொதிகை மலையில் காட்சி தந்தார்கள். இந்தக் காட்சியை தரிசிக்க அனைத்து நதிதேவதைகளும் பொதிகைக்கு வந்தார்கள். அந்த நதிகள் அனைத்தும் தங்களிடம் மக்கள் கரைத்த பாவங்களையெல்லாம் தாமிரபரணி நதியில் நீராடி நீங்கப் பெற்றார்கள்.  எனவே சித்ரா பௌர்ணமியன்று தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தென்காசி- குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீகுற்றாலநாதர் கோவில். இங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளது வனதேவதையான செண்பகா தேவியின் ஆலயம். சித்ரா பௌர்ணமி அன்று செண்பகாதேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த நாளில் இரவு வேளையில் மலைமேல் மஞ்சள் நிறத்தில் (சந்தனம்) மழை பெய்யும் என்று தலபுராணம் கூறுகிறது. அவ்வூரில் வசிக்கும் பெரியவர்களும் இது உண்மை என்கிறார்கள்.

இக்கோவிலுக்கு மேலேயுள்ள மலைமீது சிவ மதுகங்கை என்ற தேனருவியில், சித்ரா பௌர்ணமியன்று கங்கையானவள் சிவலிங் கத்திற்கு தேனபிஷேகம் செய்து வழிபடுவதால், தேன்துளிகள் சந்தன (மஞ்சள்) வண்ண மழையாகப் பெய்கிறது என்பது ஐதீகம். மலைமீது மழை பெய்ததற்கு அடையாளமாக சந்தன மணம் வீசுமாம். சிலசமயத்தில் சிறுதுளிகள் சாரல் போல் விழுவதும் உண்டாம்.

அடுத்த நாள் காலை மலைமீது ஏறிச் சென்று பார்த்தால், மழை பெய்ததன் அடையாளங்கள் மணல் பகுதியில் சந்தன நிறமாக காட்சி தருமாம். அந்த மணலைச் சேகரித்து வந்து பூஜித்து நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம்.

இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிலவும் என்று கூறுகிறார்கள்.

எனவே, பல சிறப்புகள் பெற்ற சித்திரையைப் போற்றுவோம்; இறையருளால் நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்.



லல்
(1) சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்திலேயே 'சிவன்' சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றியதாகவும், சித்திரை மாதத்திலேயே நான்முகன் இந்த புவியை படைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

 (2) சித்திரை மாதம் சுக்கில பட்ச  அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக 'தேவி பாகவதம்' கூறுகிறது.

 (3) சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மச்ச அவதாரம் (மீன் உருவம்) எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. ஸ்ரீ ராமன் சித்திரை மாதத்தில்தான் அவதரித்தார். இருப்பினும் இந்தியாவில் பங்குனி மாத வளர்பிறையில் நவமி திதியிலேயே ராம நவமி கொண்டாடப்படுகிறது.

 (4)சித்திரை முதலாம் நாள்தான் இந்து சமயக் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறும்.

 (5)இதே சித்திரை முதலாம் நாள்தான் தமிழ் முனிவர் அகத்தியருக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமாமகேஸ்வரி திருமணக் காட்சியைக் காட்டி அருளினர். இவ்விழா ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுத்திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது. வேறு சில சிவத்தலங்களிலும் இவ்விழா நடத்தப் பெறுகிறது.

 (6)சித்திரை மாதத்திற்கென்று மேலும் பல சிறப்புகளும் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் 'அக்ஷய திருதியை' என அழைக்கப்படுகிறது. இந்நாளில் வாங்கும் பொருள்கள் பன்மடங்காகப் பெருகும் என்கிற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் இன்றும் இருக்கிறது.

 (7) இந்த காலத்தில்தான் இந்துக் கோயில்களில் பிரமோற்சவம் எனும் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று மதுரை மாநகரில் சொக்கநாதர் மீனாட்சி திருமண நிகழ்வுகள் சித்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக