வியாழன், 28 ஏப்ரல், 2016

வாழைப்பந்தல் பச்சையம்மன் அருளாட்சி!

அகில உலகங்களையும் காத்திடும் அன்னை பார்வதி தேவி பரமனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தாள். வழியில் ஓரிடத்தில் வாழை இலையினால் பந்தல் அமைத்து, அங்கு மணலினால் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள்.

அதற்கு நீர் தேவைப்படுவதால் விநாயகரையும், முருகனையும் அழைத்து நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். இருவரும் நீர் எடுத்து வரச் சென்று வெகு நேரமாகவே அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றை ஏற்படுத்தி மணல் லிங்கம் பிடித்து முடித்தாள். பின்னரே விநாயகரும் முருகரும் ஆளுக்கொரு நதியோடு அங்குவந்து சேர்ந்தனர். ஆக அன்னை ஏற்படுத்திய நதியோடு சேர்ந்து அங்கே  மூன்று நதிகள் ஆயின. மூன்று நதிகளும் கூடும் அவ்விடத்தை முக்கூட்டு நதி என்று அழைக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து அன்னை சிவ பூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலி வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் பல இடையூறுகளைச் செய்து வந்தான். இதையறிந்த சிவனும், விஷ்ணுவும் வாமுனி, செம் முனியாக அவதாரம் எடுத்து அவ்வரக்கனை வதம் செய்தனர். பின்னர், அன்னை சிவ வழிபாட்டை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றாள்.

அம்பிகை முதலில் வந்த ஊர் பின்னர் முணுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாக தங்கி பிரயாணப் பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றாகி, பின்னர் பெலாம்பட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.  மூன்று நதிகளும் கூடி இருக்கும் இத்தலத்தில் அன்னை பிடித்த மணல் லிங்கம் தற்போது கல் லிங்கமாக மாறியதோடு, வளர்ந்துகொண்டே போவதாகவும் கூறுகிறார்கள். முதலில் 2 அடி உயரமே அந்த லிங்கம் இருந்ததாம்.

இங்கு துவார பாலகர்கள் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகவும், இடப்பக்கத்தில் விஷ்ணு வடிவமாகவும் காட்சியளிக்கின்றனர். ஈசன், மன்னார் சுவாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள்புரிகின்றார். நடுவில் சுதை வடிவில் அம்பிகை. வெளியே விநாயகரும் முருகனும் சுதை வடிவில் அருட்காட்சி அளிக்கின்றனர்.

வாகன மண்டபத்தில் யானை, சிம்மம் மற்றும் மயில் வாகனங்கள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றிலும் ஜமதக்னி முனிவர், அஷ்ட விநாயகர்கள், நவவீரர்கள், சப்தரிஷிகள் ஆகியோர் அம்பாளை நோக்கி தவம் புரிந்துகொண்டிருக்கின்றனர். இத்தலத்தில் வில்வ மரமும் வேம்பு மரமும் இணைந்து அவற்றினடியில் நாகராஜர் சிலை வடிவில் காட்சி தருகின்றார்.

3 நிலைகள், 3 கலசங்களுடன் சிறிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது. அதில் துவார சக்தியாக கண்டன், முண்டன். உள்ளே துவார கணபதியும் தேவேந்திரனும் வீற்றிருக்கின்றனர். பிராகாரத்தில் மிகப்பெரிய சுதை வடிவில் ஜடா முனி உள்ளார். விசேஷ காலங்களில் இவருக்கு வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

ஆலயத்தின் வெளியே வலப் புறமாக சாலையையொட்டி செங்கல் சந்நதிகளில் வாமுனி, செம்முனி இருவரும் வரப்பிரசாதிகளாக சுதை வடிவில் அருள்புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்குள் நவகிரகங்களுக்கும், அனுமனுக் கும் சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் பிரசாதமாக பச்சைநிற குங்குமம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஆடிமாத திங்கட்கிழமைகளே விசேஷமாகும். நாடெங்கிலுமுள்ள பல பெருமக்களின் குலதெய்வமாக இந்த அம்மன் திகழ்கிறாள். ஆலயம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர் பக்தர்கள் காது குத்துதல், திருமணம், பொங்கல் வழிபாடு ஆகியவற்றை இங்கே நடத்துகிறார்கள்.

பச்சையம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்து சிறந்த பலன்களைக் காண்கிறார்கள்.

மகிமை மிகுந்த இந்தத் தலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆரணி, வேலூர், செய்யார் போன்ற இடங்களிலிருந்து  இங்கு வருவதற்கு பேருந்து வசதியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக