புதன், 20 ஏப்ரல், 2016

நலம் நல்கும் ராமநவமி!


ராமபிரான் சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில், புனர்பூச நட்சத்திரத்தில் திருஅவதாரம் செய்தார் என்பதால், எல்லா திருமால் தலங்களிலும் ராமநவமியை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர். ராமாயண நவாஹம் என்று, பிரதமை முதல் நவமி திதி வரையில் கர்ப்ப உற்சவம் நடத்துவர். சில இடங்களில் நவமியில் ஆரம்பித்து ஜனன உற்சவம் என்னும் பெயரில் ஒன்பது நாட்கள் விழா நடத்துவர். தாயின் வயிற்றில் 12 மாதங்கள் கர்ப்பவாசம் செய்தவர் ஸ்ரீராமன் என்பர்.

"உலகத்தை மகிழ்விப்பவனே! ஜானகியின் பிராணநாயகனே! நீ வெற்றியுடன் விளங்குவாய்.

ஆகாயத்தின் தலைவனான சூரியனின் நற்குலத்தில் தோன்றியவனே! மன்னர் மன்னனே!

நற்குணங்களின் உறைவிடமே! தேவர்களால் வணங்கப்படுபவனே! மங்களத்தை அளிப்பவனே!

எப்பொழுதும் அனைவருக்கும் ஆனந்தத்தை அளிப்பவனே! அளவிட முடியாதவனே!'

என்றெல்லாம் ஸ்ரீதியாகராஜசுவாமிகள் போற்றித் துதிக்கும் ஸ்ரீராமனின் திருப்பாதங்களைப் பணிவோம்.

ராமநவமியை அடுத்த தேய்பிறை நவமியில் அவதரித்தவள் சீதாபிராட்டி. ஜனக மகாராஜன் யாகம் செய்வதற்காக நிலத்தை உழுதான். அப்போது கலப்பையில் சிக்கிய பெட்டியிலிருந்து வெளிப்பட்டவள் சீதை. கலப்பைக்கு சீதா என்று பெயர். கலப்பையால் வெளிப்பட்ட தேவிக்கு சீதை என்று பெயர் அமைந்தது. இந்த இடம் சீதாமடி என்ற பெயரில், பாட்னாவிலிருந்து சுமார் எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜனகன் ஆண்ட நாடு விதேஹம் என்பதால் சீதை வைதேகி எனவும் அழைக்கப்பட்டாள். மிதிலை தலைநகராக விளங்கியதால் அவள் மைதிலி. எனவே நவமி திதி சீதையின் வழிபாட்டுக்கும் உகந்த நாள்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக