சனி, 30 ஏப்ரல், 2016

பகை விலக்கி மங்களம் தரும் ஸ்ரீ சுதர்சனர்!

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும் சிறப்பு பெற்றதுமாகத் திகழ்வது சக்கராயுதம். சக்கராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் என்று போற்றப்படுகிறார். வைணவர்கள் சுதர்சனரை சக்கரத்தாழ் வார் என்று வழிபடுவார்கள். விஷ்ணுவின் சக்கர அம்சத்திற்கு சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திர மூர்த்தி, மந்திரமூர்த்தி என்று பல சிறப் புப் பெயர்கள் உள்ளன.

திருமால், தன் சங்கல்பத்தினால் சக்கராயுதத்தை தனக்கு நிகராக உருவாக்கி, தன்னுடைய உருவத்தையும் சக்தியையும் அளித்திருக்கிறார். திருமாலின் சேனாதிபதியான ஸ்ரீசக்கரத்தினை பருதி, நேமி, எஃகம்,  வளை, ஆழி, திகிரி என்றெல்லாம் அழைக்கின்றனர்.

பெருமாளின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர் யாமி, அர்ச்சை ஆகியவற்றில் சக்கரத்தாழ்வார் உடனிருக்கிறார். மகாவிஷ்ணு பூமியில் அவதரிக் கும்போதெல்லாம் சக்கரத்தாழ் வாரும் சில அவதாரங்களில் வெளிப்பட்டும், சில அவதாரங் களில் மறைந்தும் தன் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். காக்கும் தொழில் புரிபவர் திருமால். அவர் தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

சக்கராயுதம்- அதாவது சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார். குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். மேலும், மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் என்னும் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடை முறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால்  நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது; தீராத நோய்களைத் தீர்க்கும்; போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். சுருங்கக்கூறின், எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய சுவாமி தேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார் என்பதை இவ்வரலாறுகள் உணர்த்துகின்றன.

பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. இதேபோல் திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக