வியாழன், 7 ஏப்ரல், 2016

ஆவணி மாத ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி பூஜை!



ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ:
ஸூதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ
:
கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ
:
விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி

ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா!
 
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!
 
 
 

எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடலே இவ்வுலகம். பரந்த இப்பிரபஞ்ச வெளியெங்கும் இயங்கும் இயக்கமெல்லாம் அவன் தன் தேவியுடன் நிகழ்த்தும் அருளாடலே. சிவனும் சக்தியும் இணைந்து எப்போதும் அருளாட்சி புரிவது போலவே, இவ்வுலகில் ஆணும் பெண்ணும் இணைந்து, இயைந்து, இல்லறம் என்ற நல்லறம் பேணுமாறு செய்வதே திருமணம் என்ற உயரிய சடங்கின் நோக்கம்.

திருமணம் என்பது வெறும் ஊரும் உறவும் கூடி நடத்தும் சம்பிரதாயமோ, திருவிழாவோ அல்ல. அது இரு குடும்பங்களின் கூட்டுறவு. வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இரு ஆத்மாக்களின் சங்கமம். கூடி வாழ்தலில் காணும் இன்பம் கோடி பெறும் என்பதை உணர்ந்து, வருங்கால சந்ததிகளுக்கு தம் வாழ்வின் மூலம் உணர்த்துவது என்பது எளிதான காரியமில்லை. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்வாங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் செய்து காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

இருவர் இணைந்து வாழத்தொடங்கும் போது கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பு. ஆனால் வேறுபாடுகள் விரிசல் ஆகாமல் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட இருவர் கையிலுமே இருக்கிறது. தனி மரம் தோப்பாகாது. தனித்தனியாக வாழ்வது வாழ்வாகாது.

'நீ கண், நான் பார்வை. நீ மொழி, நான் வார்த்தை' என்று இருக்க வேண்டிய மண‌வாழ்வு 'நீ தனி நபர், நான் தனி நபர், என் வாழ்வு என் தனிப்பட்ட விஷயம்' என்றிருப்பது இப்போது பெரும்பாலும் சாதாரணமாகிவிட்டது. குடும்பம் என்ற மகத்தான அமைப்பு சிதையாமல் காப்பது இப்போது மிக முக்கியம்.

இறையருளின்றி எதுவும் நடக்காது .தம்பதிகளுக்குள் ஒற்றுமை என்றென்றும் இருக்க, குடும்பத்தின் ஆணி வேரான பெண்கள் ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது நமது சம்பிரதாயங்களில் முக்கியமான இடம் வகிப்பதாகும்.

திருமண தினத்தில், மணமகள் மணமேடைக்குச் செல்லும் முன்பாக, கௌரி தேவியைப் பூஜிப்பது சம்பிரதாயம். கணவனோடு இணைந்து வெற்றிகரமாக இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி, தேவியைப் பூஜித்த பின்பே திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது.

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திருஅவதாரமான ஸ்ரீ ருக்மணி தேவியே, தன் மணநாளில், தனக்கு கணவனாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவே வரவேண்டுமென தேவியைத் தொழுது தன் எண்ணம் ஈடேறப் பெற்றாள்.

வெண்மை நிறமே 'கௌவர்ணம்' எனப்படுகிறது. அத்தகைய வெண்மை நிறத்தவளாக இருப்பதால் தேவி 'கௌரி' எனப்படுகிறாள். மலை(கிரி)மகள் என்று அறியப்படுவதாலும், தேவியை கௌரி என அழைக்கிறார்கள்.

ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது அனைத்து தேவதைகளையும் பூஜிப்பதற்குச் சமம் என்கின்றன புராணங்கள். நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, 108 வடிவங்களில் கௌரி தேவியை வடிவமைத்துப் பூஜிக்க வழி செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதையும் சற்று எளிமைப்படுத்தி, ஷோடச கௌரியாக, 16 வடிவங்களில் நாம் பூஜிக்கத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கௌரி ரூபத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த தினங்கள் பூஜிக்க ஏற்றது.

தக்ஷனின் மகளாக, தாக்ஷாயணி என்ற திருநாமத்துடன் அவதரித்த தேவி, தக்ஷ யாகத்தின் அக்னி குண்டத்தில், தன் தந்தை செய்த சிவ அபராதத்தை சகிக்காது தன் உயிரைத் தியாகம் செய்தாள். தன் மறுபிறப்பில் , ஹிமவானின் தவத்தின் பலனாக, அவருக்குப் புத்திரியாக திருஅவதாரம் செய்து அருளினாள்.

அன்னது ஓர் தடத்து இடை அசலம் அன்னவன்

மன்னிய கௌரி தன் மகண்மை ஆகவும்

தன்னிகர் இலா வரன் தனக்கு நல்கவும்

முன் உற வரும் தவம் முயன்று வைகினான்.
(ஸ்ரீ கந்த புராணம், பார்ப்பதிப்படலம்).
 

இவ்வாறு அவதரித்த தேவி, இறைவனை மணாளனாக அடையும் பொருட்டு, கடும் தவம் புரிந்தாள். ஒவ்வொரு வித மரத்தடியிலும் ஒரு குறிப்பிட்ட காலம் அமர்ந்து தவம் செய்தாள்.ஆகவே ஒவ்வொரு கௌரி விரதங்களையும் அந்தந்த குறிப்பிட்ட மரத்தடியில் அமர்ந்து செய்வது சிறப்பு. ஆனால் இக்காலத்தில் அவ்வாறு இயலாது. ஆகவே, அந்தந்த மரக் கிளைகளை தருவித்து, கௌரிதேவியின் பிரதிமையுடன் சேர்த்து பூஜிக்கலாம்.

கீர்த்தி கௌரி, ஸ்ரீ பல(பலால) கௌரி, ஸ்ரீ ஹரிதாளிகா(விபத்தார) கௌரி, ஸ்ரீ கஜ கௌரி, ஸ்ரீ ஞான கௌரி, ஸ்ரீ மாஷா கௌரி, ஸ்ரீ சாம்ராஜ்ய மஹா கௌரி, ஸ்ரீ சம்பத் கௌரி என ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் கௌரி விரதங்கள் எண்ணற்றவை. அவரவருக்கு வேண்டிய பலனைப் பொறுத்தும் அவரவர் குடும்ப வழக்கங்களைப் பொறுத்தும், கௌரி விரதங்களை அனுசரிக்கலாம்.

கிட்டத்தட்ட, மாதத்திற்கு ஒன்றாக குறைந்து, 12 கௌரி விரத பூஜைகள் ஒரு வருடத்தில் கொண்டாடப்படுகின்றன. கௌரி விரத பூஜைகளில் பிரதானமாக அறியப்படுவது தீபாவளி அமாவாசையன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதமும் விநாயக சதுர்த்திக்கு முன் தினம் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரதமும் ஆகும்.

கௌரிதேவியாம் பார்வதி தேவி, தவமிருந்து சிவனாரின் உடலில் சரிபாதியைத் தனக்காக‌ப் பெற்ற தினம் கேதார கௌரி விரத தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம், இந்த ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரத பூஜையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை, பிரளய காலத்தின் முடிவில், உலகெங்கும் சூழ்ந்திருந்த அலைகடலில் ஒரு ஸ்வர்ண லிங்கம் தோன்றியது. அதில் ஈசனை தேவர்கள் யாவரும் பூஜிக்க, அதிலிருந்து, பொன்மயமான சிவனாரும் உமையம்மையும் தோன்றி அருள் புரிந்தனர். இது நிகழ்ந்த நாள், ஆவணி மாதம் வளர்பிறை திருதியை நன்னாளாகும். ஆகவே, அன்று ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும்.தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும்.

 

ஸ்வர்ண கௌரி விரத மஹிமை:

இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய் மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப் படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.

ஒரு முறை, ஸ்கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார்.

முன்னொரு காலத்தில், ஸரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.

ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.

அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.

முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.

இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.

முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே, அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள்.ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருக்க ஒட்டாது விரட்டினார்கள்.

பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.

ராணியானவள், எந்த வேளையிலும் கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்

அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.

எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.

இக பர நலன்களை அடைந்து வளமாக வாழ்வர்.

ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் முறை!

 

விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

பூஜைக்குத் தேவையானவை:

கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.

மாவிலை தோரணங்கள்,

மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்(இயன்றால்).

பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம்,

புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிக‌ள்,

திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி.

தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).

பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.

தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். மற்ற நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில் போளி நிவேதனங்களில் பிரதான இடம் பெறுகிறது. தாமரைப்பூவின் இதழ்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பது விசேஷம்.

விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.

மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.

வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

 

முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.

தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.

 

நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும்.

பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.
 

பூஜைப் பலன்களை தேவிக்கு சமர்ப்பித்து அர்க்யப் பிரதானம் (உத்திரிணியால்

பால், நீர் கலந்த தீர்த்தத்தை கிண்ணத்தில் சமர்ப்பித்தல்) செய்யவும். ஒரு பழம், சந்தனம், அக்ஷதையைக் கையில் வைத்துக் கொண்டும் அர்க்யம் விடலாம்).

சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.

பூஜை முடிந்தபின், அருகிலுள்ள,கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. பூஜைப் பிரசாதங்களைக் கட்டாயம் விநியோகிக்க வேண்டும். இதன் காரணம், பிரசாதம் பெறுபவர்களில் ஒருவராக பகவானும் எழுந்தருளி, பிரசாதத்தை ஏற்று நம் விருப்பங்களை ஈடேற்றி வைப்பார். பின் நாமும் பிரசாதத்தை பக்தியுடன் உண்ண வேண்டும்.
 

இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.

மறு நாள், தேவிக்கு சுருக்கமாக,புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.

தமிழ்நாட்டில் கனுப்பண்டிகையை ஒட்டி, உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர் செய்வது போல், கர்நாடகாவில் கௌரி பண்டிகையை ஒட்டி சகோதரிகளுக்கு புடவை உள்ளிட்ட வரிசைப் பொருட்களைத் தந்து வாழ்த்துவது வழக்கத்தில் இருக்கிறது. பிறந்த வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பதும் உண்டு.

சில வீடுகளில், மறுநாள் விநாயக சதுர்த்தியாக இருப்பதால், மூன்றாம் நாளே, விநாயகரையும் தேவியையும் சேர்த்து உத்யாபனம் செய்வார்கள். மண் பிரதிமையாக இருப்பின் நீர் நிலைகளில் சேர்த்து விடலாம்.

ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜித்து, நமது நாட்டுப் பாரம்பரியத்தின் வேர் போன்ற குடும்ப ஒற்றுமை சிறந்தோங்க வேண்டி, வெற்றி பெறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக