வியாழன், 28 ஏப்ரல், 2016

பெருமை நிறைந்த புருஷோத்தம மாதம்!

புருஷோத்தமன்  என்றால்  ஒருவரே, அவரே  நம்  கிருஷ்ணன். அவர் பெயரில் ஒரு மாதம் உண்டு.  புருஷோத்தம மாதம்.  நமது பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாக கொண்டது. அவர் பெயரில் எப்படி ஒரு  மாதம்  அதிகமாக  உருவானது? அப்படி இருந்தால்  புருஷோத்தம மாதம் அதி உன்னதமானது என்று சொல்லவே வேண்டாமே. 

 
வருஷத்தில் ஒரு மாதம்  அதிகமாசம் என்று  பஞ்சாங்கக்காரர்கள் தீர்மானித்து   சொல்கிறார்கள்.  கிருஷ்ணன்  அதை எடுத்து அதற்கு தனிப் பெருமை கொடுப்போம் என்று எற்றுக்கொண்டுவிட்டான்.​


​சின்னதாக  மண்டையைக்  குழப்பும் ஒரு கணக்கு போடலாமா?   பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்துகொள்கிறான்.  சூர்யனைச் சுற்ற 365.2422 days (= பூமியின் சுற்று வேகம்  29.79 km ஒருவினாடிக்கு ). எனவே பூமியும்  சந்திரனும்  27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில்  1/12 மாசம்  என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை. சந்திரன் இன்னும் 2. 2  நாள்  சுற்றினால் தான் அது முழுமை பெரும் அல்லவா. இது பூமி சூரியனை கொஞ்சம்  வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ  தனது சுற்றை  27.3 நாளில் முடிக்கிறான்.  ஆனால்  பூமி, சூரிய,  கதியை  சார்ந்து பௌர்ணமியாக   சந்திரனுக்கு  29.531நாள் தேவை.  ஒரு சந்திர  வருஷ கணக்கில்   29.531 நாள்  சந்திர மாதங்கள்  = 354.372 நாட்கள் ஒரு சந்திர  வருஷத்தில்.  நமது கணக்கில்  (365.2422 - 354.372) =10.87 நாள்  வித்தியாசம் வருகிறது.   வசிஷ்ட சித்தாந்தம்  ஒவ்வொரு  32 மாதம் 16நாள்  8 கடி  க்கும் (1 கடி: 24 நிமிஷம்)   ஒருமுறை  அதிக மாசம்  இவ்வாறு ஏற்படுகிறது. `--  உங்களுக்கு  புரிகிறதா?   எது சுற்றுகிறது, பூமியா,  சந்திரனா, தலையா? 

பரிமேலழகர் போலவோ  நக்கீரர் போலவோ  பேசாமல்  கொஞ்சம் சாதாரணமாக சொன்னால்   நமது சந்திரமான  வருஷத்தில்  ஒரு பிரதமை முதல் அடுத்த அமாவாசை  வரை ஒரு சந்திரமான மாசம்.  ஒரு சௌரமான (சூரிய) வருஷத்தில் 13 அமாவாசை வந்தால்  சந்திரமான  மாசங்கள் 13 ஆகிவிடாதா?  எந்த மாசத்தில்  2 அமாவாசை வருகிறதோ  அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாசம்!!!  இந்த வருஷம் ஆணிமாசத்தில் 2 அமாவாசை.   முதலாவது அமாவாசைக்கு அப்புறம் பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாசம்  ஆஷாட அதிக மாசம்.


இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரஹத்தை அதிகரித்து  அளிக்கிறார் என்று நம்பிக்கை.

எப்படி  அஷ்டமி,  நவமி  போன்றவைலௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும்  ராமனும்  கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச் செய்தார்களோ அதுபோல்   ஒரு  மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக  செய்துவிட்டான்.  புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே.

புருஷோத்தம மாதத்தின் நன்மைகள்:-

பத்ம புராணம் மற்றும் கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது.


1 . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்:  ” அனைத்து சக்தியும் வாய்ந்த” புருஷோத்தம மாதத்தினை” எவர் பின் பற்றுகிறாரோ  அவரை நான் ஆசிர்வதிக்கிறேன். எவரொருவர் புருஷோத்தம விரதத்தினைப் பின்பற்றுகிறாரோ, அவர்களது கடந்த கால பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.  புருஷோத்தம விரதத்தினை , பின்பற்றாமல் எவராலும் உண்மையான “பக்தி தொண்டு “செய்ய முடியாது.  வேதங்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான சாதனைகளையும், வேத காரியங்களைக் காட்டிலும், புருஷோத்தம மாதத்தில் எடுக்கப்படும் விரதமானது அதிக பலனுள்ளது ஆகும். எவரொருவர், புருஷோத்தம விரதத்தினை எடுக்கின்றனரோ, அவர்கள், தங்களது வாழ்க்கையின் கடைசிக் காலத்திற்கு பிறகு எனது “நித்திய உலகமான கோலோகத்திற்கு” வந்தடைவர்.

2.”துர்வாஷ முனிவர் ”  :- புருஷோத்தம மாதத்தில் எவரொருவர் புனித நதியில் நீராடுகிறார்களோ, அவர்களது பாவங்கள் தொலைக்கப்படும். மற்ற மாதங்களின் பெருமைகள் எவையும், இந்த புருஷோத்தம மாத  மகிமையின் ஒரு பகுதிக்கு  கூட நிகராகாது.  இந்த புருஷோத்தம மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்,தான தர்மங்கள் வழங்குவதினாலும் , “ஹரே கிருஷ்ணா” மகா மந்திரத்தை உச்சாடனம் செய்தலினாலும், ஒருவரது அனைத்து துன்பங்களும் அழிந்து விடும். இதன் மூலம் ஒருவர்   எல்லாவிதமான பூரணத்துவமும் பெற்று, அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறார்.

3. ஒரு “புருஷோத்தம விரதமானது” “ஆயிரம் மடங்கு கார்த்திகை விரதத்திற்கு” சமமாகும்.

4. வால்மீகி முனிவர்:- புருஷோத்தம மாத விரதத்தினை ஒருவர் எடுப்பதன் மூலம், ஒருவருக்கு 100″அஷ்வ மேத யாகத்தினை” செய்வதினால் உண்டாகும் பலன் கிடைக்கும்.  அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், புருஷோத்தம மாதத்தின் உடலில் தான் சங்கமமாகின்றது.  எவரொருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனரோ, அவர்கள் ” கோலோக” விருந்தாவனத்திற்கு செல்வது உறுதி. 

5.  இம்மாதத்தின் போது “புனித தாமில்” வசிப்பவர்களுக்கு, 1000 மடங்கு பலன்கள் கிட்டும்.

6. “நைமி சாரண்யா” முனிவர்கள்:-  “கருணை மிகுந்த புருஷோத்தம மாதமானது, பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றும் “கல்ப விருட்ச மரமாகும்”

7.  எவரொருவர், இந்த புருஷோத்தம மாதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் விக்ரஹங்களை வழிபடுகின்றனரோ அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கப் பெரும்.

8. எவரொருவர் புருஷோத்தம விரதத்தினை பின் பற்றுகிறார்களோ, அவர்களின் “கெட்ட கர்ம வினைகள் அனைத்தும் எரிந்து அவர்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணருக்கு நேரிடையாக சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

9.  புருஷோத்தம மாதமே,ஆன்மீக வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும், ஏனெனில்,பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரே நேரிடையாக ஒருவர் செய்த தவறினை மன்னித்து விடுகிறார்.

10. நாரத முனிவர் :- “புருஷோத்தம மாதமே!  மற்ற அனைத்து மாதங்களிலும்  பின்பற்றும் விரதங்கள் மற்றும் சாதனைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது ஆகும். ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இம்மாதத்தின் பெருமைகளைக் கேட்டாலே, அவருக்கு உடனடியாக கிருஷ்ண-பக்தி கிடைக்கப் பெற்று , அவரது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபெருகின்றனர். எவரொருவர், இப்புருஷோத்தம விரதத்தினை, முறையாகப் பின் பற்றுகின்றனரோ, அவர்களுக்கு கணக்கிலடங்கா “சுக்ருதியும்” ஆன்மீக உலகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த புருஷோத்தம விரதம் எப்படி  பண்ணுவது?

சாத்வீகமாக இரு. பிரம்மச்சர்யம் அனுஷ்டி .  தரையில் படுக்கமுடிந்தால்  படுக்கலாம்.
) சூர்யோதயத்துக்கு முன்  குளிக்கலாம்.  முடிந்தால்  எங்காவது ஒரு புனித  க்ஷேத்ரத்தில், குறைந்தது  இந்த மாதத்தில் 3 நாளாவது.
 கிருஷ்ணனை நினை. அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவி. கேள். அவன் நாமங்களை சொல், ஹரே கிருஷ்ணா  மூல மந்திரம்  கொஞ்சம் சொல்.  (24, 32, 64  என்ற எண்ணிக்கையில்).
 ராதா கிருஷ்ணா  படத்துக்கு  சிறிய  நெய்  தீபம்.  ரோஜா, தாமரை மலர். துளசி மாலை  சூட்டலாம்.
தினமும்  ஸ்ரீமத் பாகவதம்  சிறிது பாராயணம், படிக்கலாம்.  (10 வது காண்டம், 14வது அத்தியாயம், பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில்  15வது அத்தியாயம்.

 பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில்   ஸ்ரீ  ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ  நந்தனந்தனாஷ்டகம்,




​ கண்ணில் ​தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம்.  ராதா க்ருஷ்ண பஜனையோ  பிரார்த்தனையோ  அதி விசேஷம்.
 ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால்  ''இந்த மாதம்  எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன்.  பொய்  பேசமாட்டேன்''  --   இது முடியுமா???
​முடிகிற  ஒன்று வேண்டுமானால் சொல்கிறேன்.   எவர் சில்வர் தட்டு வேண்டாம். இந்த ஒரு மாதம் மட்டும்  வாழை இலையில் சாப்பிடுவோம்.(முடிந்தால் தரையில் அமர்ந்து).  
பசுவுக்கு கீரையாவது தானம் கொடுப்போம்.  முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
இந்த ஒரு மாதம்  முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
 ஒருமாதத்தில் யாரும்  ஹிப்பியாக முடியாதே. 
கடுகு எண்ணெய்  வேண்டாம். ஒரு வேளை  ஆகாரம்.  மத்யானமோ  சூர்யாஸ்தமனத்துக்கு பிறகோ.  பால்  பழங்கள், சாதுர்மாச்யத்தில்  உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே: 

 
கோவர்தன தரம்  வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
​கோகுலோத்சவம் ஈசானம் 
​கோவிந்தம் கோபிகா ப்ரியம் 

​கிருஷ்ணனை நினைக்க  இப்படியும் ஒரு வசதி இருக்கும்போது அதை கையகப் படுத்திக் கொள்வோமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக