வியாழன், 21 ஏப்ரல், 2016

கோலாகல வாழ்வருளும் கோபாலசுந்தரி!


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை ராஜராஜேஸ்வரியை பக்தர்கள் பல்வேறு வடிவங்களில் ஆராதிக்கின்றனர். தேவியின் திவ்யமான பல்வேறு வடிவங்களுள்  கோபாலசுந்தரியின் திருவடிவமும் ஒன்று.

இத்திருவடிவத்தில் கண்ணனே லலிதா திரிபுரசுந்தரியாகவும் லலிதா திரிபுரசுந்தரியே கண்ணனாகவும் அருட்கோலம் காட்டியருள்கின்றனர்.

இத்தேவியின் தியானத்தில் திருப்பாற்கடலிலுள்ள கற்பகவனத்தில் நவரத்தின மண்டபத்தின் நடுவில் ஸ்ரீபீடத்தில் எழுந்தருளி சங்கு, சக்கரம், புல்லாங்குழல், கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம் போன்றவற்றை ஏந்தி பிரம்மாதி தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவளுமான கோபாலசுந்தரியைப் போற்றுவோமாக எனக் கூறப்பட்டுள்ளது. பூர்வஜென்மத்தில் செய்த சிறந்த புண்ணியத்தின் பயனாகவே இந்த ஜன்மாவில் கோபாலசுந்தரியை உபாசிக்கும் பாக்கியம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூவுலகங்களிலுமுள்ள மந்திரங்கள் அனைத்திற்கும் ஸ்ரீவித்யா தலைமை மந்திரமாக போற்றப் படுகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் அருளும் கண்ணன், இத்தேவியின் வடிவமாகவே போற்றப்படுகிறார். உற்சவ ராஜகோபாலனின் திருவடியின் கீழ் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் லலிதையைப் போன்றே அருட்கோலம் கொண்டுள்ளவர் இந்த மூர்த்தி.

தான் எடுக்கும் ஒவ்வொரு திருவடிவத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு பலனை தன் உபாசகர்களுக்கு அருள்கிறாள் தேவி.   லலிதையின் கரும்பு வில் காமீகாந்தனின் பாதத்தில் நிலை பெற்று காமாக்னி தோன்றுவது, காமம் இல்லையேல் உலகமில்லை, சிருஷ்டியும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

  அடியார்களின் காமங்கள் எனும் விருப்பங் களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும், யாவரும் விரும்பும் அதிசுந்தரத் திருமேனி கொண்டதாலும் கோபாலனாம் கோபாலசுந்தரி, காமீ காந்தா எனப் போற்றப்படுகிறாள். திருமாலுக்குப் பற்பல நாமங்கள். விருப்பம் எதுவாயினும் உண்மையாக எளிதில் நிறைவேறுவதால் அவன் ஸத்யகாமன். முக்தியை விரும்புவோரின் காமங்களையும் துயர் புரிவோரின் காமங்களையும் அழிப்பதால் காமஹா; காமனாகிய பிரத்யும்னனின் பிதா என்பதாலும் சாத்வீகர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாலும் காமக்ருதன், பக்தர்களுக்கு காமங்களை அவர்கள் வேண்டியதற்கும் விரும்பியதற்கும் மேலாக அளிப்பதால் காமப்ரதன் எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் காமபாலன், அடியார்களின் காமங்களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும் யாவரும் விரும்பும் அதியற்புத சுந்தரத் திருமேனி கொண்டதாலும் காமீகாந்தன்.

 நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் இந்த கோபாலசுந்தரியை ஸம்மோஹனகிருஷ்ணன் எனும் திருப்பெயரில் தரிசித்து அருள் பெறலாம்.

  சிவசக்தி ஐக்கிய வடிவான அர்த்தநாரீஸ்வர வடிவம் அடியார்களுக்கு அருள்வது போல் கண்ணனும் லலிதையும் கோபாலசுந்தரியாக அடியவர்க்கு அருள்கின்றனர். கண்ணனும் தேவியும் ஒன்றே என்பதை ‘கோப்த்ரீ கோவிந்த ரூபிண்யை நமஹ’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமமும் போற்றுகிறது.

  இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருக்கோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். மழலை வரம் வேண்டுவோர்க்கு தப்பாமல் அந்த வரம் பூர்த்தியாகும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும். அனைத்து சம்பத்துக்களையும் அளிக்கும். சகல சித்திகளும் கைவரும். தரித்திரர்கள் இத்தேவியை உபாசித்தார்களானால், குபேர வாழ்வு பெறலாம்.

  பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும் ரத்ன கிரீடமும் மயில்பீலியும் தரித்து அருளும் கோபால சுந்தரி, வணங்குவோர் தீவினைகளை அகற்றிஆத்மஞானமும் அருள்பவள்.

  ஷட்கோண யந்திரத்தில் ஓங்காரமாகவும் ஒய்யாரமாகவும் நின்று குழலூதி உலகைக் காக்கும் கோபாலசுந்தரியைப் பணிந்து சகல நலன்களையும் பெறுவோம்.


கோபாலசுந்தரி தியானம்

1. க்ஷீராம்போநிதி மத்ய ஸம்ஸ்தித
லஸத் த்வீபஸ்த கல்பத்ருமோ
த்யானோத்யத்மணி மண்டபாந்த
ருதிதஸ்ரீபீட பாதோஜகம்
தோர்தண்டை: அரிசங்கவேணு ஸ்ருணி
ஸத்பாசேஷூ சாபாசுகான்
பிப்ராணம் கமலாமஹீ விலஸிதம்
வந்தேருணாங்கம் ஹரிம்.

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரணபூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்த்ரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் ஸாங்குஸஞ்ச புஷ்பபாணம்ச  பங்கஜம்
இக்ஷு சாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம்  புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானுலிப்தாங்கம் புஷ்பவஸ்த்ர த்ர குஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே.

பாற்கடலில், கற்பக விருட்சத்தின் நடுவில் மணி மண்டபத்தில் ஒய்யாரமாக குழலூதியபடி, தன் கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று வணங்கப்படும் கோபாலசுந்தரியை நமஸ் கரிக்கிறேன்.
கிருஷ்ணனும், தாமரைக் கண்ணனும், சர்வாலங்காரங்களுடன் திகழ்பவனும் த்ரிபங்கி நிலையில் லலிதையோடு பேரழகாய் அருட்கோலம் காட்டுபவனும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கோபாலனாம் கிருஷ்ணனை வணங்குகிறேன். 
இந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமானவை.
 இதை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் பெருஞ்செல்வம் கிட்டும். மழலைவரம் வேண்டுவோர்க்கு அந்த பாக்கியம் பெறுவார்கள். கண்ணனின் திருவருளும் லலிதா பரமேஸ்வரி
யின் பேரருளும் கிட்டும்.

2. கோதண்டம் மஸ்ருணம் ஸுகந்தி விசிகம்
சக்ராப்ஜ பாசாங்குசம்
ஹைமீம் வேணுலதாம் கரைச்ச தததம்
ஸிந்தூர புஞ்ஜாருணம்
கந்தர்ப்பாதிக ஸுந்தரம் ஸ்மிதமுகம்
கோபாங்கனா வேஷ்டிதம்
கோபாலம் ஸததம் பஜாமி வரதம்
த்ரைலோக்ய ரக்ஷாமணீம்
        - க்ருஷ்ண கர்ணாம்ருதம்.

விசித்திரமான வில்லையும் நல்ல மணமுடைய புஷ்ப பாணத்தையும் சக்கரத்தையும் சங்கத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் பொன்மயமான கொடி போன்ற குழலையும் ஏந்தி, அடர்ந்த நிறம் கொண்டவனாய், மன்மதனைக்காட்டிலும் பேரழகு கொண்டவனாய், புன்முறுவல் பூத்த முகத்தினனாய், கோபியர்களால் சூழப்பெற்றவனாய், மூவுலகையும் காப்பவனாய், வேண்டியதை எப்போதும் அருளும் கோபாலனாய் திகழ்பவனை தியானிக்கிறேன்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக