சனி, 27 பிப்ரவரி, 2016

அகிலமே ஆராதிக்கும் ஆன்மீகத் திருவிழா! - மகாமகம்


தஞ்சைத் தரணியை வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரித் தாயும், அரசலாறும் மாலையிட்டதுபோல் சூழப்பெற்றதுதான் குடந்தை மாநகரம்.

உலகில் சமயத்தை ஆணிவேராகக் கொண்டு முகிழ்த்த பண்டைய பண்பாட்டுடன் கூடிய இடங்கள் மிகச்சிலவே. அவற்றுள் ஒன்றுதான் கும்பகோணம்.

வானவியலின்படி சூரியன் 12 மாதங்களில் 12 ராசிகளைச் சுற்றிவருகிறது. சந்திரன் பூமியை 30 நாட்களில் சுற்றுகிறது. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு இடம் பெயர ஓராண்டு ஆகிறது. சிம்ம ராசியில் குருவும், சந்திரனும் வரும்போது, கும்ப ராசிக்குசூரியன் வருகிறது. அப்போது சூரியன் நேரடியாக குருவையும் சந்திரனையும் பார்க்கிறது. இந்நிகழ்ச்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடக்கிறது. இதனையே மகாமகம் என்றழைக்கிறோம்.

கும்பகோணம் நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகப் பெருவிழா, கடந்தமுறை 6-3-2004 அன்று சூரியன் கும்ப ராசியிலும், குரு சிம்ம ராசியிலும் அமைய, பௌர்ணமி திதி, மாசி மாத மக நட்சத்திரம், இடப லக்னம் சேரும் புனித நாளில் நடைபெற்றது. அன்றைய தினம் பதினான்கு உலகங்களிலும் உள்ள தேவர்கள் யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு. அதுபோலவே இந்த வருடமும் 22-2-2016-ல் வருகிறது.

இறைவனுடைய உபதேசங்களே வேத சாஸ்திரங்கள். அவற்றில் மனிதர்களின் பாவங்களைப் போக்கிக்கொள்ள பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவ்வழிகளில் தீர்த்த ஸ்நானம் மிகச்சிறந்த ஒன்றாகும். அதிலும் மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் புனித நீராடலுக்கு ஈடானது ஒன்றுமில்லை. இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்றுண்டு.

ஒருசமயம் கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகள் கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, ""எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச்செய்தவர்களும் நீராடி, எல்லா பாவங்களை யும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்துவருகிறார்கள். அந்தப் பாவங்களை நாங்கள் எங்குசென்று போக்கிக்கொள்வது'' என்று கேட்டார்கள். அப்போது இறைவன், ""திருக்குடந்தையில் மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் விலகுவதோடு, அவர்களிட மிருந்தும் பாவங்கள் விலகிவிடும்'' என்றார். உடனே ஒன்பது தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து திருக்குடந்தை வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடி, வடகரையிலுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் எழுந்த ருளி அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். 

மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றிவந்தால் பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். 

இந்த மகாமகக் குளத்தில் ஒருமுறை நீராடினால் கங்கைக்கரையில் நூறாண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும். 

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தின்வடபுறத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம் உள்ளிட்ட ஏழு கோத்திரங்களை யும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர்

வடபுறத்திலுள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது. இங்கு இடப லக்னத்தில் பல குமிழிகள் ஏற்படுவதைக் காணலாம்.


கிருத யுகத்தில் பிரம்மன் தவம் செய்தமை யால் மகாமகக் குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

திரேதா யுகத்தில் பாவங்களைப் போக்கியதால் பாபநோதம் என்று பெயர்.

துவாபர யுகத்தில் முக்தி அளித்ததால் முக்தி தீர்த்தம் என்று பெயர்.

கலியுகத்தில் நவகன்னியர் பூஜித்தமையால் கன்யா தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடல வனம் (கொரநாட்டுக்கருப்பூர்) ஆகியவை அமிர்தம் பரவிய பஞ்ச குரோச தலங்களாகும்.

மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்கள்இந்திர தீர்த்தம்- வானுலக வாழ்வளிக்கும்.அக்கினி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீக்கும்.யம தீர்த்தம்- யம பயம் போக்கும்.நிருதி தீர்த்தம்- பூத, பிரேத, பிசாசு குற்றம் நீக்கும்.வருண தீர்த்தம்- ஆயுள் விருத்தி தரும்.வாயு தீர்த்தம்- பிணிகள் அகலும்.குபேர தீர்த்தம்- சகல செல்வங்களும் உண்டாக்கும்.ஈசான தீர்த்தம்- சிவனடி சேர்க்கும்.பிரம்ம தீர்த்தம்- பிதுர்களைக் கரையேற்றும்.கங்கை தீர்த்தம்- கயிலை பதவி அளிக்கும்.யமுனை தீர்த்தம்- பொன் விருத்தி உண்டாக்கும்.கோதாவரி தீர்த்தம்- இஷ்ட சித்தி உண்டாக்கும்.நர்மதை தீர்த்தம்- திடகாத்திரம் உண்டாக்கும்.சரசுவதி தீர்த்தம்- ஞானம் அருளும்.காவிரி தீர்த்தம்- புருஷார்த்தங்களை நல்கும்.குமரி தீர்த்தம்- அசுவமேத யாகப் பலன்களைக் கொடுக்கும்.பயோடிவி தீர்த்தம்- கோலாகலம் அளிக்கும்.சரயு தீர்த்தம்- மனக்கவலை தீர்க்கும்.கன்னிகா தீர்த்தம்- துன்பம் நீக்கி இன்பத்தைச் சேர்க்கும். (இதில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளனவாம்.)தேவ தீர்த்தம்- சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவியைத் தரும்.

மகாமக தீர்த்தம் தனிப்பட்ட ஒரு தீர்த்தமல்ல; இறைவனின் அனுக்ரகத்தைப் பெற பல புனித தீர்த்தங்கள் ஒன்றுசேர்ந்தது

எந்த பரிகாரங்கள் செய்தாலும் தீர்க்க முடியாத பழி பாவங்கள் இக்குளத்தில் நீராடுவதால் தீயிலிட்ட பஞ்சுபோல் பொசுங்கிவிடும். சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களில் நீராடுவது மிகவும் விசேஷம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக