சனி, 27 பிப்ரவரி, 2016

மாசிமக தீர்த்தவாரி!


மாசி மகத்தில் மாமனாரான சமுத்திரராஜனுக்கு மகாவிஷ்ணு கடற்கரையில் காட்சி தந்ததுபோல, ஈசனும் மீனவர் தலைவனுக்கு மாப்பிள்ளையானதாக புராணம் கூறுகிறது. ஒரு காலகட்டத்தில் அம்பிகையானவள் மீனவ குலத்தில் அவதரிக்க நேர்ந்தது. இறைவன், அம்பிகையை மணக்க தகுந்த காலம் கனிந்தபோது, மீனவர் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடத்திற்குச் சென்றார். அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிலங்கத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி தந்ததுடன், மீனவப் பெண்ணாக இருந்த அம்பிகையை மணம்புரிந்தார்.

மீனவர் தலைவன் ஈசனிடம், "தாங்கள் அடிக்கடி தரிசனம் தர அருள்புரியவேண்டும்' என்று வேண்டவே, அதன்படி ஈசன், "மாசி மகத்தன்று கடல்நீராட வருவேன்' என்றுஅருளினார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. இத்தலம் காரைக்காலிலிருந்து பொறையார் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு அருகில் இன்னொரு தலம் உள்ளது. அது திருவேட்டங்குடி என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் திருமேனியழகர்; அம்பாள் சாந்தநாயகி. சம்பந்தர் பாடிய திருத்தலம். இத்தலத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்குதான் ஈசன் மாசி மகத்தன்று மீனவ வேட மூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். அப்போது காளிக்குப்பம், மண்டபத்தூர், அக்கம்பேட்டை ஆகிய கடலோர ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்கு சீர்வரிசைகள் அளித்து சிறப்பு வழிபாடுகள் செய்வர்.

மீனவர் தலைவனுக்கு ஈசன் மாப்பிள்ளை யானதுபோல், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரி ராஜப் பெருமாளும் "மாப்பிள்ளை' அந்தஸ்தை மாசி மகத்தில் பெறுகிறார்.நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியிலுள்ளது திருப்புகலூர். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருத்தலம் திருக்கண்ணபுரம். மூலவர் சௌரிராஜப் பெருமாள்; தாயார் கண்ணபுரநாயகி. மாசி மகத்தையொட்டி, கிழக்குக் கடலிலுள்ள கருடபர்வதத்திற்கு காட்சி தரும் வகையில், திருமலைராயன் பட்டினக் கடற்கரையில் எழுந்தருள்கிறார் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். அப்போது அவருடன் சுற்றுவட்டாரக் கோவில்களிலுள்ள பெருமாள்களும் வீதியுலா வருவார்கள்.

திருக்கண்ணபுரத்திலிருந்து அதிகாலையில் தங்கப் பல்லக்கில் புறப்படும் சௌரிராஜப் பெருமாள், திருமருகல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் செல்வார். வழியெங்கும் வெண்பட்டு மற்றும் ரோஜா மாலையுடன் பக்தர்கள் காத்திருப்பார்கள். அங்கே திருமலைராயன் பட்டினம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீரகுநாதப் பெருமாள், ஸ்ரீவிழிவரதராஜப் பெருமாள், நிரவிஸ்ரீ கரிய மாணிக்கம் பெருமாள், காளைக்கோவில்- பத்து ஸ்ரீநித்தியப்பெருமாள் முதலான பெருமாள்கள் காத்திருப்பார்கள். பிறகு, அனைவரும் ஒன்றுகூடி மாலை 5.00 மணிக்கு கடலில் தீர்த்தவாரி காண்பர். இதை ஒரு பெருந்திருவிழாபோல கொண்டாடுவர்.

ஒருசமயம், இந்திரனின் நண்பனான உபரிசிரவசு எனும் வேந்தனுக்கு திருமகள் மகளாக அவதரித்தாள். அப்போது திருமகள் பெயர் பத்மினி. இந்த பத்மினியை திருமால்திருமணம் செய்துகொண்டதால், ராமபிரானை மிதிலை நகரத்து மக்கள் மாப்பிள்ளையாகக் கொண்டாடி மகிழ்ந்ததுபோல், திருமலை ராயன் பட்டினத்து மீனவர்கள் ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை "மாப்பிள்ளை' என்று அழைத்து சீர்வரிசைகள் செய்து மரியாதை செய்கின்றனர்.ஈஸ்வரனும் பெருமாளும் இணைந்து மாசி மகத்தில் தீர்த்தவாரி காணும் திருத்தலங்களும் உள்ளன.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் ஸ்ரீஉலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் இருவரும் ஒன்றுகூடி தீர்த்தவாரி காண்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதே போல புதுவையில் மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான ஆலயங்களில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அன்று கடற்கரை திருவிழா கோலம் காணும். அனைத்து சுவாமி களும் வந்ததும், தீர்த்தவாரி விழா நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, கடலில் நீராடி புனிதம் பெறுவர்.

நாகை மாவட்டம், பொறையார் தலத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீகோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீகோதண்டராமர் அருள்புரிய, சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதரும் காட்சிதருகிறார். அவருடன் ஸ்ரீதேவியும் எழுந்தருளியுள்ளார். அடுத்த சந்நிதியில் பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.இத்தலத்தில் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது. அந்நாளில் பொறையார் ஸ்ரீகோண்டராமர், அதே திருத்தலத்திலுள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர், தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோர் சூழ்ந்துவர, தரங்கம்பாடி கடற்கரையில் தீர்த்தவாரி விழா மூன்று தலத்து உற்சவமூர்த்திகளுடன் நடைபெறும். ஒரே சமயத்தில் இவர்களை வழிபட பாவங்கள் நீங்கி புனிதம் சேரும் என்பர்.

சிவபெருமானும் திருமாலும் கடற்கரையில் தீர்த்தவாரி காண்பதுபோல், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலிலும் மாசி மகத்தன்று தீர்த்தவாரி விழா நடைபெறும். இதனையொட்டி ஸ்ரீசெந்திலாண்டவர் மற்றும் ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த விழாவினையொட்டி நடைபெறும் உருகுசட்ட சேவை பிரபலம். மேலும், பச்சைசார்த்துதல், சிவப்பு சார்த்துதல், வெள்ளை சார்த்துதல் என விதவிதமான அலங்காரங்களில் அருளும் செந்தூர்முருகன், மாசி மகத்தன்று கோவில் எதிரேயுள்ள கடற்கரையில் தீர்த்தவாரி காண்பார். அப்போது பக்தர்களும் நீராடி புனிதம் பெறுவர்.பொதுவாக மாசிமகத்தன்று கும்ப கோணத்தில் அமைந்துள்ள அமிர்தகுளமான மாமாங்கக் குளத்தில் நீராடுவது சிறப்பு. 

அதுவும் இந்த வருடம் மகாமகம் என்பதால் மிகவும் போற்றப்படுகிறது. அங்குசெல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெறலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக