விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து மகன்கள், ஒரே ஒரு மகள். அந்த மகள்தான் ருக்மிணி. அவளை அப்படியே மஹாலக்ஷ்மியின் அவதாரம் என்று பார்த்தவரெல்லாம் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்தக் கிளியைத்தான் ஒரு குரங்கின் கையில் பிடித்துக் கொடுக்க அவளுடைய அண்ணன் ருக்மி திட்டமிட்டான். ஆனால் தங்கையின் மனமோ கிருஷ்ணனிடம் சிறைப்பட்டிருந்தது & கிருஷ்ணனைப் பாராமலேயே!
ஆமாம், அரண்மனைக்கு வரும் முனிவர்கள், கிருஷ்ணனைப் பற்றி மன்னனாகிய தன் தந்தையிடம் சொல்வதையெல்லாம் ருக்மிணி செவிமடுத்திருந்தாள். அவனுடைய அழகு, கம்பீரம், வீரம் போன்ற எல்லா நற்குணங்களும் அவளை வசீகரித்திருந்தன. அவனே தன் நாயகன் என்பதை அவள் தீர்மானித்துவிட்டிருந்தாள். எப்போது பார்த்தாலும் அவனைப் பற்றியே சிந்தனை, பேச்சு எல்லாம்.
மன்னன் பீஷ்மகன், மகள் ருக்மிணியின் மனதைத் தெரிந்து கொண்டான். அவளுடைய விருப்பப்படியே கிருஷ்ணனுக்கே அவளை மணமுடிப்பதாக வாக்களித்தான். ருக்மிணி எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தாள்.
ஆனால் அண்ணன் ருக்மி இதற்கு சம்மதிக்கவில்லை. கிருஷ்ணன் மீது அவனுக்குத் தனிப்பட்ட கோபமும் பகையும் இருந்தன. தன் நண்பன் கம்சனை கிருஷ்ணன் வதம் செய்ததிலிருந்து ஏற்பட்ட பகை அது. இன்னொரு நண்பன் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் எதிரியாக இருப்பதால், கூடுதலாக வளர்ந்த பகை அது. அதனால், தான் பகைவனாகக் கருதும் கிருஷ்ணன், தனக்கு சம்பந்தி உறவு கொள்ளலாகாது என்று நினைத்தான்.
மாற்று ஏற்பாடாக மற்றும் ஒரு நண்பனான, சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தங்கையை மணம் செய்து கொடுக்கும் முடிவுக்கு வந்தான். மகனுடைய இந்த ஏற்பாட்டுக்கு மன்னனால் மறுப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. அவனுடைய பிடிவாதத்துக்கு அவர் பயந்தார். தன் மகளுக்குத் தந்த வாக்குறுதியையும் அவர் மறந்தார்; வேறு வழி தெரியாமல் மறந்தார்.
ருக்மிணி தவித்தாள். தந்தையும் தனக்கு எதிராக மாறிவிட்ட அவலத்தை நினைத்து அவதிப்பட்டாள். அண்ணனுடைய அராஜகத்துக்கு அப்பாவே அடிபணிந்தபோது, அபலைப் பெண்ணின் கெஞ்சல் அம்பலத்தில் ஏறுமா?
ருக்மியோ, தன்னை எதிர்ப்போர் யாருமில்லை என்ற ஆணவத்துடன், தன் தங்கைக்கும் சிசுபாலனுக்குமான திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டான். விதர்ப்பநாடு முழுவதுமே விழாக்கோலம் பூண்டது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா தேசத்து மன்னர்களுக்கும் திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ருக்மிக்கு ஆதரவாக அவனுடைய நான்கு சகோதரர்களும் இந்தத் திருமண ஏற்பாட்டில் அவரவர்க்கென்று பொறுப்புகளை பிரித்துக்கொண்டு, செயல்படத் துவங்கினர்.
யாருமே தனக்கு ஆறுதலாகவோ, பரிவாகவோ இல்லாத சூழ்நிலையில், தானே தன் வாழ்வுக்கு வழி தேடிக்கொள்ள வேண்டிய நெருக்கடியின் எல்லை விளிம்பில் நிற்பதை ருக்மிணி புரிந்துகொண்டாள்.
அண்ணனுடைய நண்பனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றால், அந்த கம்சன் வதம் செய்யப்பட வேண்டியவனாக இருந்ததுதான் காரணம். அவனுடன் நட்பு கொண்டதற்காக தன்னுடைய அண்ணன், அவனுக்காக வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்?
ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்தாள். பாழுங்கிணற்றில் தள்ளுவதற்குத் தன் குடும்பத்தாரே தீர்மானித்து விட்ட பிறகு, தெரிந்தே அதில் விழ தானும் தயாராகிவிடக் கூடாது என்று நினைத்து, தன் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்த அரண்மனை குரு ஒருவரை உடனடியாக அணுகினாள். அவள் கையில் ஓலைக் கடிதம்.
‘‘வந்து... இந்த ஓலையை என் ஜீவன் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்து உதவுவீர்களா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ருக்மிணி.
‘‘போன ஜென்மத்தில் ராமனுக்கு உதவிய அணில்பிள்ளை நானாகத்தான் இருந்திருப்பேன் அம்மா. இப்போது இந்த ஜென்மத்தில் உனக்கு உதவுகிறேன். தயக்கம் வேண்டாம் அம்மா. கொடு கடிதத்தை, கொண்டு சேர்க்கிறேன் கிருஷ்ணரிடம்’’ என்று சொல்லி ஆவலுடன் அவர் அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
துவாரகையை அடைந்தார் குருதேவர். கிருஷ்ணன் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டான்.
புன்சிரிப்புடன் கிருஷ்ணன் அந்த ஓலையை வாங்கிப் படித் தான். ‘‘பரந் தாமா, என்னை ஆட்கொண்ட வரே! தங்களுடைய நிறை குணங்களை கேள்விப்பட்டு என் மனதில் தங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். என் மனம் தெரிந்து என் தந்தையாரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் என் அண்ணன் ருக்மி என் விருப்பத்துக்குத் தடையாக நிற்கிறான். சேதி நாட்டு மன்னன் சிசுபாலனுக்கு என்னை மணமுடிப்பதில் தீவிரமாக இருக்கிறான். எனக்கு ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் அண்ணனுக்கு பயந்து அவனுடைய ஏற்பாட்டிற்குத் தலையாட்டி வருகிறார்.
‘‘இந்த நிலையில் என்னைக் காப்பாற்றத் தங்களை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை. உள்ளத்தை உங்களுக்குத் தந்துவிட்டபிறகு, இன்னொருத்தனைக் கரம் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்? தாங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. எங்கள் சம்பிரதாயப்படி, திருமணத்திற்கு முன்னால் கௌரி பூஜை செய்வதற்காக நான் ஆலயத்துக்கு வருவேன். அப்போது தாங்கள் என்னைக் காப்பாற்றி அல்லது கடத்திச் சென்று என்னை ஆட்கொள்ள வேண்டும்...’’
கிருஷ்ணன் குருதேவரைப் பார்த்தான். ‘‘ருக்மிணியின் உள்ளக்கிடக்கை எனக்குப் புரிகிறது. நான் அவளுடைய விருப்பத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம்’’ என்று உறுதியாகச் சொன்னான். குருதேவர் மனமகிழ்ச்சியுடன் விதர்ப்ப நாட்டிற்குத் திரும்பினார்.
‘‘ருக்மிணி, உன்னுடைய மனோரதம் நிறைவேறப் போகிறது. கிருஷ்ணர் உடனேயே வருகிறார். நிச்சயம் உன்னைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வார். ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதைத் தகர்த்தெறிய ஒரு போர்ப்படையே அவருடன் வருகிறதம்மா. உன் கவலை தீர்ந்தது’’ என்று சொல்லி ஆசிர்வதித்தார் குருதேவர்.
தான் கடிதத்தில் எழுதிக் கேட்டுக்கொண்டபடியே தன்னை மீட்டுச் செல்ல கிருஷ்ணன் வந்துவிட்டதை அறிந்த ருக்மிணி, அவனுக்குத் தோதாக கௌரி பூஜையை மேற்கொள்வதற்காக ஆலயத்துக்குச் சென்றாள். மனமுருக தேவியை வழிபட்டாள். அவளுடைய மனம் படபடத்தது. தன் வாழ்நாளின் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் நாள் அது என்பதில் சந்தேகமில்லை.
பூஜையை முடித்து ஆலயத்தைவிட்டு வெளியே வந்த ருக்மிணியை, சற்றுத் தொலைவில், ஒரு ஒளி, ‘‘வா, ருக்மிணி...’ என்று காதலுடன் அழைத்தது. ஓடிச் சென்று தஞ்சமடைந்தாள் ருக்மிணி. பேரொளியாகத் திகழ்ந்த கிருஷ்ணன், ருக்மிணியை அள்ளிக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தினான்.
இதைப் பார்த்துவிட்டார்கள் திருமணத்திற்காக வந்திருந்த அசுர அரசர்கள். நேராக ஓடிப்போய் ருக்மியிடம் விவரம் சொன்னார்கள். அவ்வளவுதான், கிருஷ்ணனை எதிர்க்க, ருக்மிணியை மீட்க, பெரிய படையே திரண்டது. எதிர்பார்த்ததுதானே? எதிரிப் படைகளை எதிர்கொண்டான் கிருஷ்ணன். அசுரர்கள் அலங்கோலமாயினர். புறமுதுகிட்டுத் தப்பித்துத் தத்தமது நாடுகளை நோக்கி ஓடலாயினர்.
ஆதரவாளர்கள் அனைவரும் அறுபட்டுப்போன நிலையிலும், ருக்மிக்கு உண்மை புரியவில்லை. தான் மஹாவிஷ்ணுவிடமே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை உணராமல் போரிட்டு, இறுதியில் அவனும் சிசுபாலனும் தப்பித்து ஓடினார்கள்.
ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை என்ற சூழ்நிலையில் கிருஷ்ணன் ருக்மிணியை அழைத்துக் கொண்டு வடமதுரைக்குச் சென்றான். அந்நாட்டு அரசன் உக்கிரசேனர், நகரையே பிரமாண்ட அலங்காரத்தில் மூழ்கடித்தார். அனைவரும் கிருஷ்ணன் ருக்மிணியை வரவேற்றார்கள்.
விதர்ப்ப நாட்டு இளவரசியை வடமதுரையில் திருமணம் செய்துகொண்டு, அவளைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றான் கிருஷ்ணன்.
சுபம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக