வெள்ளி, 6 மே, 2016

அட்சய திருதியை ஓர் அற்புத பொன்னாள்!



அட்சய திருதியை என்று நாம் செய்கின்ற எந்த வொரு நற்காரியமும், செயலும பன்மடங்கு பெருகி நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதே உண்மை. அட்சயம் என்றால் என்றென்றும் வளர்வது, பூரணமானது குறையாதது, அழியா பலன் தருவது என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாசை அடுத்த வரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் அட்சய திருதியை நன்னாள் என்றழைக்கிறோம். இந்த நன்னாளில் நான் கிருதயுகத்தை பிரம்மன் படைத்ததாக பவிஷ்ய புராணம் சொல்கிறது. அட்சய திருதியை நன்னாளில் தான் ஐஸ்வர்ய லஷ்மி மற்றும் தான்ய லட்சுமி தோன்றினார்கள்.

மாலவனோடு திரு சேர்ந்து திரு மால் ஆன தினம் அட்சய திருதியை திதி. இது பொதுவாகவே லட்சுமி கடாச்சம் நிறைந்த நன்னாள். பரசு ராமர்  அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளில் தான். மஹாபாரதத்தில் திரவுபதி மானம் காக்க குறைவிலா சேலை வழங்கி கிருஷ்ண  பரமாத்மா பாதுகாத்த அட்சய திருதியை நாளில் தான்.

பாற்கடல் கடைந்த போது அமிர்தத்துடன் அவதரித்த திருமால், அகலுமில்லேன் என மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது திருதியை திதி நாளில் தான்.சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் காசியில் உள்ள அன்ன பூரணியிடம் தங்க அட்சய பாத்திரத்தில் ஸ்வர்ண கரண்டியில் பிச்சை பெற்றது திருதியை நாளில் தான்.

ராவணனால் விரட்டப்பட்ட குபேரன்  பெரும் தவம் புரிந்து ஈஸ்வரன் அருளாசிப்படி திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களை பெற்றது அட்சய திருதியை தான்.

வனவாசத்தின் போது தருமருக்கு சூரிய பகவான் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வழங்கியது அட்சயதிருதியை அன்று தான்.  குசேலருக்கு  கண்ணன் கூறிய அட்சயம் என்ற சொல்  குபேர வாழ்வு வழங்கியது அட்சய திருதியையில் தான்.

இத்தனை அற்புதங்கள் நிகழ்ந்த அட்சய திருதியை நாளில் நாம் விரதமிருந்து மஹாலட்சுமி மற்றும் குபேரனை வணங்கி நம் வீட்டிற்கு தேவையான செல்வங்களை வாங்கி கொள்ளலாம். 

அட்சய திருதியை வழிபாடும் தானமும் :

அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையில் கோலமிட்டு மகாலட்சுமி, மஹா விஷ்ணு இருவர்  இணைந்த படத்தின் மீது மாலையிட்டு விளக்கேற்றி பால், பாயாசம், பழம் போன்றவற்றை நிவேதனம் செய்து தூப, தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று நாம் வாங்கும் பொருள்களை விட தானம் செய்வதன் மூலமே நம் செல்வம் பன்மடங்கு பெருகும். அன்னதானம், கோதானம் போன்றவற்றுடன் நம்மால் இயன்ற நீர் மோர் கூட தானம் செய்யலாம்.

அட்சய திருதியை என்பது பல அற்புதங்கள் நடந்தேறிய நன்மை நிறைந்த பொன்னாள் என்பதால் நிறைய பேர் தங்கம் வாங்குகின்றனர். உப்பு, வாங்கி வீட்டில் வைக்கலாம். கைகுத்தல் அரிசி வாங்கி கொஞ்சம் துணியில் கட்டி நமது பொக்கிஷ அலமாரியில் வைக்கலாம்.

மஞ்சள் வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சர் வாங்குவது மிக சிறந்தது. கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். அட்சய திருதியை அன்று பூஜை செய்யும் போது மகாலட்சுமியின் முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வேண்டினால் இல்லத்தில் செல்வம் குறையாது வளம் பெருகும்.

தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது. எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நிச்சயமாக அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் தேடி வரும்.

அட்சய திருதியை நன்னாளில் தாங்கள் செய்வதுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிய பாடங்கள் படிப்பது, கலைகளில் இணைவது போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வாழ்க்கைக்கு உகந்த எல்லா செல்வங்களையும் வாரிவழங்கும் அட்சய திருதியை ஓர் அற்புத பொன்னாள்.

அட்சய திருதியை: ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் என்ன நிற ஆடை அணியலாம்:
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும். நட்சத்திரப்படி ஒவ்வொருவரும் அணிய வேண்டிய உடை நிறம் வருமாறு:-

1. அஸ்வினி- சாம்பல்
2. பரணி- வெள்ளை
3. கிருத்திகை- சிவப்பு
4. ரோகிணி- வெள்ளை
5. மிருகசீரிஷம்- செந்நிறம்

6. திருவாதிரை- கருப்பு
7. புனர்பூசம்- மஞ்சள்
8. பூசம்- நீலம்
9.ஆயில்யம்- பச்சை
10. மகம்- சாம்பல்

11. பூரம்- வெள்ளை
12. உத்திரம்- சிவப்பு
13. அஸ்தம்- வெள்ளை
14. சித்திரை- செந்நிறம்
15. சுவாதி- கருப்பு

16. விசாகம்- மஞ்சள்
17. அனுசம்- நீலம்
18. கேட்டை- பச்சை
19. மூலம்- சாம்பல்
20. பூராடம்- வெள்ளை

21. உத்திராடம்- சிவப்பு
22. திருவோணம்- வெள்ளை
23. அவிட்டம்- செந்நிறம்
24. சதயம்- கருப்பு
25. பூரட்டாதி- மஞ்சள்
26. உத்திராட்டதி- நீலம்
27. ரேவதி- பச்சை.
 
அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் விபரம் வருமாறு:-

1. அஸ்வினி- கதம்ப சாதம் தானம்.  மாணவர்கள் படிக்க உதவலாம்.
2. பரணி- நெய்தானம் தானம்.  
3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். .
4. ரோகிணி- பால் அல்லது பால் பாயாசம் தானம்.
5. மிருக சீரிஷம்- சாம்பார் சாதம் தானம்.

6. திருவாதிரை- தயிர் சாதம் தானம். 
7. புனர்பூசம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8. பூசம்- மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11. பூரம்- நெய் சாதம் தானம்.
12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
13. அஸ்தம்- பால் பாயாசம் தானம்.
14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.
15. சுவாதி- உளுந்து வடை தானம்.  உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.

16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19. மூலம்- கதம்ப சாதம் தானம்.
20. பூராடம்- நெய் சாதம் தானம்.

21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம்.
22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம்.  நெல் தானம்.
23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம்,  உணவு, உடை தானம் சிறந்தது.
27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக