வெள்ளி, 6 மே, 2016

அட்சய திருதியை செய்ய வேண்டியவை!

அட்சய திருதியை தினத்தன்று  10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண் ணியத்தை தேடித்தரும்.

இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை காலை, மாலை இரு நேரமும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளியும் வாங்கலாம்.  பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.

அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

(கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம். மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது.

அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.
 
அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை அவசியம் தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதாவது தங்கம் என்பது ஒரு உயிருக்கு பிரதிநிதியாக, சம அந்தஸ்து கொண்டது. நமது உயிரை மற்றவருக்கு தானமாக தர இயலாது என்பதால் உயிருக்கு சமமான தங்கத்தை தானம் செய்வதால் நம்மையே தானம் செய்த உயர்வும், பலனும் கிடைக்கும்.

ஏழைகளுக்கு தங்கம் கொடுத்தால் அளவிடற்கரிய பலன்கள் வந்து சேரும். அது முடியாத பட்சத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, மகன், மகள் போன்ற உறவினர்களுக்காவது தங்கம் தானம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் கொடுக்க முடியவில்லையா? கவலையேப்படாதீர்கள். உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும். ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம். உணவு செய்து கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிரும் போது உங்கள் வாழ்வு குளிர்ச்சி பெறும். இப்போது கோடைகாலம்.

உச்சக்கட்ட வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே ஏழை-எளியவர்களுக்கு செருப்பு, குடை, குளிர்பானம் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. அன்று ஆடு, மாடு போன்றவற்றுக்குக் கூட உணவு கொடுத்தும், தண்ணீர் கொடுத்தும் உதவலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

இத்தகைய தானத்தால், நமது மறைந்த முன்னோர்களுக்கு ஏற்படும் தாகம் தீர்க்கப்படும். அதோடு அவர்களுக்கு மேல் உலகில் நற்கதி உண்டாகும். எனவே அட்சய திருதியை தினத்தன்று தானம், உதவிகள் செய்ய தவறாதீர்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எதுவெல்லாம் தேவை, அவசியம் என்று நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது, ஆசைப்படுவது பல மடங்கு பெருகி, உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 
அட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்:

மேஷம்: விநாயகர், சுப்பிரமணியர்
ரிஷபம்: சாந்தரூப அம்பிகை
மிதுனம்: விஷ்ணு, மகாலட்சுமி

கடகம்: அம்பிகை சிம்மம்: சிவபெருமான்
கன்னி: விஷ்ணு, மகாலட்சுமி
துலாம்: துர்க்கை, அம்பிகை

விருச்சிகம்: கற்பக விநாயகர், முருகன்
தனுசு: தட்சிணாமூர்த்தி
மகரம்: விநாயகர், அனுமன்

கும்பம்: சனீஸ்வரன், அனுமன்
மீனம்: தென்முகக் கடவுள், நந்தீஸ்வரர்
 
அட்சய திருதியை அன்று 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்: 
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர் களும் தங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற கடவுளை வணங்க வேண்டும். இதனால் கடவுள் அருள் கிடைப்பது அதிகரிக்கும். வாழ்க்கையில் வளம் பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விபரம் வருமாறு:-

1. அஸ்வினி - விநாயகர்
2. பரணி - ஸ்ரீரங்கநாதர்
3. கிருத்திகை - ஆஞ்சநேயர்
4. ரோகிணி - சிவன்
5. மிருகசீரிஷம்-துர்க்கை

6. திருவாதிரை - பைரவர்
7. புனர்பூசம்-ராகவேந்திரர்
8. பூசம் - சிவன்
9. ஆயில்யம் - பெருமாள்
10. மகம் - விநாயகர்

11. பூரம் - ஸ்ரீரங்கநாதர்
12. உத்திரம் - ஸ்ரீஆஞ்சநேயர்
13. அஸ்தம் - சிவன்
14. சித்திரை - துர்க்கை
15. சுவாதி - பைரவர்

16. விசாகம் - ராகவேந்திரர்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - திருமால்
19. மூலம் - விநாயகர்
20. பூராடம் - ஸ்ரீரங்கநாதர்

21. உத்திராடம் - ஆஞ்சநேயர்
22. திருவோணம் - சிவன்
23. அவிட்டம் - துர்க்கை
24. சதயம் - பைரவர்
25. பூரட்டாதி - ராகவேந்திரர்
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி - பெருமாள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக