ஆந்திரபிரதேசம் ஆதிலாபாத் மாவட்டம் பஸாராவில் உள்ள சரஸ்வதி தலம் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கே தல தீர்த்தமாக கோதாவரி நதி துலங்குகிறது. கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். ஆலயத்தின் முன்புள்ள மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தைத் தரிசித்துவிட்டு உள்ளே நுழையும்போது, அங்கு சூர்யேஸ்வரசுவாமி சிவலிங்க ரூபத்தில் நமக்கு தரிசனம் தருகிறார். இந்த லிங்கத்தின்மேல் தினமும் சூரிய கிரகணங்கள் படுவதால், சூரியன் வழிபடும் சிவபெருமான் என்ற பொருளில் இவர் ஸ்ரீ சூர்யேஸ்வர சுவாமி என்றானார். சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த பஸாரா ஆலயத்தைச் சுற்றி எட்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திர, சூர்ய, வியாச, வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவ தீர்த்தங்களாகும்.
வால்மீகி முனிவர் இத்தலத்து சரஸ்வதிதேவியை வழிபட்ட பின்னரே ராமாயணத்தை எழுத ஆரம்பித்தாராம். இதற்கு சாட்சியாக இங்கே வால்மீகி முனிவரின் சந்நதியும் அருகில் அவரது சமாதியும் உள்ளன. அருகிலேயே மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். புராண காலத்தில் வேதவியாச மகரிஷி கோதாவரி நதி தீரத்துக்கு வந்து தவம் புரிந்தபோது, சரஸ்வதிதேவி அவர்முன் தோன்றி, முப்பெரும் தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டாளாம். அதன்படி வியாசர் மூன்று சிலைகள் அமைத்துப் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. முதலில் அவர் பெயராலேயே இத்தலம் வியாசபுரி என்று வழங்கப்பட்டு, பின்னர் வஸாரா என்று மாறி தற்போது பஸாரா என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் முப்பெரும் தேவியர் இருப்பினும், இங்கு முக்கியமாக வணங்கப் படுபவள் ஞான சரஸ்வதியே! இவளை வணங்க கல்வியும் ஞானமும் கைகூடுகின்றன. எப்பொழுதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதி தேவி சிலையிலிருந்து வழித்தெடுக்கப்படும் மஞ்சளே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைச் சிறிதளவு எடுத்து உண்டால் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெருந்தேவியரின் அம்சமாகக் காட்சிகொடுத்து குமராஞ்சலா மலைப்பகுதியில்.
தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதிதேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த திவ்ய தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்க அதிக அளவில் மக்கள் வந்து கூடுகின்றனர். குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று இந்த ஆலயம் விழாக்கோலம் பூணுகிறது. மகாசரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண் பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் சரஸ்வதிதேவியை வழிபட்டுவிட்டு வியாச முனிவர் தவம் செய்த குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
தத்தாத்ரேயருக்கும் இங்கே ஆலயம் இருப்பதால், பஸாரா கிராமம், தத்ததாம் என்றும் அழைக்கப்படுகிறது. சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ந்ருஸிம்ம பாரதி (14ம் நூற்றாண்டு) சுவாமிகள் பாத யாத்திரையாக இங்கு வந்தபோது தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்தாராம். தனிச் சந்நதியில் ஆலயப் பிராகாரத்தில் வீற்றிருக்கும் இந்த தத்தாத்ரேயரை வணங்க ஞானம் கைகூடுமென்று நம்பப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் புனித கோதாவரி நதியின் அருகில் பஸாரா ஞான சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. நிஜாமாத் நகரிலிருந்து 30 கி.மீ, ஹைதராபாத்திலிருந்து 220 கி.மீ. தொலைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக