தம்பதிகள் பிரிவதை தடுக்கும் அசூன்ய சயன விரதம்
ஆவணி (சிராவண) மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.
பிறகு,
"லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான் ததா
களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’
(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பத்ம புராணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக