சனி, 24 அக்டோபர், 2015

அமர்நாத் குகையில் பனி லிங்கம் புராண வரலாறு!


அமர்நாத் குகையில் பனி லிங்கம் உருவாவதைக் குறித்துப் புராண வரலாறு கூறும் தகவல்:

சிவபெருமான் தவம் இயற்றவும், தனிமையை விரும்பியும், பார்வதிக்கு வேதத்தின் உட்கருத்தை விளக்கவும். பார்வதியுடன் இமயத்தில் ஒரு குகை நோக்கிப் புறப்பட்டார். அப்படிப்போகும் வழியில் உள்ள மாமலேச்சுரம், பகல்காம் சந்தன் வாரி, சேஷ்நாக், பஞ்சதரணி போன்ற ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் முறையே விநாயகர், நந்திபகவான், சந்திரன், நாகராஜன், கங்காதேவி ஆகியோரை நிறுத்தி யாரும் தம்மைப் பின் தொடராது. கவனிக்க ஆணையிட்டு, யாரும் கவனிக்காதவாறு உமையவளுடன் அமர்நாத் குகைக்குள் சென்றடைந்தார். பரமன் குகையின் வாயிலுக்குள் நுழைந்ததைக் கண்ட, கிளி ஒன்று தன் சேய்க்கிளியை விட்டு விட்டுப் பறந்து சென்று விட்டது. குகைக்குள் நுழைந்த பரமன், அங்கு அம்பாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேத ரகசியத்தைக் கண்மூடி சொல்லத் தொடங்கினார் பரமன், சொல்லச் சொல்ல பார்வதி தேவி உம்... உம்  என்ற சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பார்வதி தூங்கி விட பரமசிவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, உம்  என்ற சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது!

பார்வதி தூங்கிய பின்னும், பார்வதி போல் குரல் கொடுத்தது அங்கிருந்த கிளிக் குஞ்சு, இதனை அறியாத சிவ பெருமான் ரகசியம் முழுவதும் சொல்லி முடித்த பின், கண் திறந்து பார்க்க பார்வதி, தூங்குவதும், உம்  என்ற சப்தம் வருவதையும் கண்டார். சிவன் கண் திறந்தவுடன், பயந்து போன கிளி பறந்து வெளியே சென்று விட்டது. அந்தக் கிளியைப் பிடிக்க பரமசிவன் தொடரும் வேளையில் சிவ கணங்கள் இருவர் அங்கு மறைந்திருப்பதைக் கண்டார். இந்த ரகசியத்தை அவர்கள் மற்றவர்களுக்கு உரைத்து விடாமல் இருக்க, அந்த இரு சிவகணங்களையும் புறாக்களாக மாற்றினார். இன்றும் அந்த இரு புறாக்கள் மட்டும் குகையில் இருப்பதைக் காணலாம். அதற்குப் பின் சிவபெருமான், கிளியைத் தேடிப் புறப்பட்டார்.

குகையில் இருந்து பறந்து சென்ற கிளிக் குஞ்சு, பரமசிவன் தன்னைத் தொடர்ந்து வருவதால் எப்படியும் பிடித்துக் கொன்று விடுவார் என்ற பயத்தில் பரமன் சொன்ன வேதத்தினைக் கேட்ட சக்தியால் ஒளியாக (சிறுஜோதி) மாறி, தான் பறந்து வந்த வழியில் இருந்து வசிஷ்ட முனிவரின் குடிலை அடைந்து, அங்கிருந்த சாளரம் வழியாக உள்ளே புகுந்து, அருந்ததியின் கருவில் புகுந்து அடைக்கலமானது. வசிஷ்டரின் குடிலின் வாயிலை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தார். வசிஷ்டர் வாசலில் வேடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். ரிஷியே, இங்கே கிளிக் குஞ்சு ஒன்று வந்ததா? அதை நீங்கள் பார்த்தீர்களா? என்றார் வேடன் வேடத்தில் வந்த சிவ பெருமான் வேடனாய் நிற்பது சிவன் என்பதை அறியாமல் வசிஷ்டர், இல்லை  என்று பதிலுரைத்தார். சிவவேடனும் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, வசிஷ்டரின் மனைவி வயிற்று வலியால் துன்பப்பட்டாள் வயிறும், கர்ப்பிணிப் பெண் போல் பெரிதாக இருந்தது. வசிஷ்டர் தன் மனைவி அருந்ததி வயிறு பெரிதாகி துன்பப்படுகிறாள். என்று பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட அவர்கள் இது பரமனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்டு பரமசிவனிடம் முறையிடுமாறு ஆலோசனை கூறினார்கள். வசிஷ்டர், தன் மனைவி அருந்ததியுடன் பரமசிவனைச் சந்தித்தார். பரமன், அருந்ததியின் வலிக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு, அருந்ததியின் வயிற்றுக்கருகே சென்று , கிளியே, வெளியே வா  என்று அழைத்தார். வெளியே வர மறுத்த கிளி, அருந்ததியின் வயிற்றுக்குள் அமைதியாக இருந்தது.. மீண்டும், பரமசிவன், கிளியே நீ வெளியே வந்தால் பெரிதும் போற்றப்படுவாய்  என்று அருளினார்.

சிவபெருமானின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட கிளி, கிளி முகத்துடனும், மனித உடலமைப்புடனும் குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைதான் சுகப் பிரும்மம்  என நாம் போற்றி வணங்கும் தெய்வம் ஆவார். சுகபிரம்மர் வியாசரின் மைந்தன் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் பரம் பொருளின் திருவிளையாடலால் அருந்ததியின் கருவிற்குள் ஒளியாய்ப் புகுந்து கிளியாய் வெளிவந்த சுகபிரம்மரை வசிஷ்டரின் வழி வந்தவராகக் கருதி, பிரம்ம ரிஷி எனப் போற்றுவார்கள். நாளடைவில் அந்தக் கிளிக் குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனான், பிறப்பிலேயே தாமறிந்த வேத ரகசியத்தை நண்பர்களுக்கும் போதிக்க முயன்றான். ஆனால், ஈசன் அவர் முன் தோன்றி அவரை தடுத்து ஆட்கொண்டார்.

இன்று முதல் உனக்கு சுகப்பிரும்மம் என்று பெயர். உன்னை, நீ பிறந்த திருவோணம் நட்சத்திரத்தன்று வழிபட்டால், அவர்களுக்கு நினைத்தது நடக்கும். சுகமான வாழ்வு கிட்டும் என்று அருளினார். மகிழ்ச்சியடைந்த சுகப்பிரம்மர். பரம்பொருளே, தாங்கள் தேவ ரகசியத்தை உபதேசித்த அந்தக் குகையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள வேண்டும். என்று வேண்டினார். சரி என்று சம்மதித்த சிவபெருமான், சிராவண மாதத்தில் அந்தக் குகையில் மட்டும் வெண்மையாகக் காட்சி அளிக்கிறேன். என்னைக் கண்டு தரிசிக்கும் பக்தர்களுக்கு மறு பிறப்பு இல்லை. அதிலும் சுகப்பிரம்மராய் நீ அவதரித்த சிரவண மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தரிசித்தவர்கள் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழ்வர் என்று வரம் தந்தார். இதன்படியே சிரவண மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளுக்கு இடையில் ஒரு மாதம் பனிலிங்கமாகக் காட்சி தருகிறார், சிவபெருமான்.

இக்காலத்தில் முன் கூட்டியே திட்டமிட்டு அமர்நாத் பயணித்து பனி லிங்கத்தைத் தரிசித்தால் பெரும் பாக்கியம் கிடைக்கும். அதிலும், அமர்நாத் குகையில் திருவோண நட்சத்திரமும் பவுர்ணமியும் ஒன்றாக வரும். நாளில் பனி லிங்கத்தைத் தரிசிப்பதால், வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும், மறுமையில் சிவ முக்தியும், பெற்றுச் சிறக்கலாம். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 141 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் அமர்நாத் பனிக்குகை உள்ளது. இங்கு தான் ஒவ்வொரு வருடமும் பனி லிங்கம் உருவாகி பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து விடுகிறது.

இந்நாளில் தங்கள் ஊரில் உள்ள சிவன்கோயிலுக்குச் சென்று சிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும் என்பர்.

திருவோண நட்சத்திரத்தில் திருமால் தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்று கூறுவர். அதேபோல், ஆவணி திருவோணத்தில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்து சிவபெருமானின் அருளைப் பெறலாம். அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தைத் தரிசிக்க இயலாதவர்கள் தங்கள் ஊரில் உள்ள சிவன்கோயில்களுக்குச் சென்று சிவலிங்கத்தைத் தரிசித்தும் பலன் பெறலாம் என்பர்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக