புதன், 29 ஜூன், 2016

ஆண்டாளின் செல்லக் கிளி!



கொஞ்சம் ஆண்டாளின் கிளி பற்றியும் தெரிந்துக் கொள்வோமா ?

இதற்குப் பெயர் கல்யாணக் கிளி … அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள் … தூது சென்று வந்தக் கிளியிடம் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று ஆண்டாள் கேட்க , கிளியும் … உங்கள் கையில் நான் என்றும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க …. ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருப்பது ஐதீகம் ….



அரங்கனிடம் காதல் தூது சென்றதால் , இந்தக் கிளிக்கு , கல்யாணக் கிளி என்று பெயர் வந்தது .

இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள் … எப்படிச் செய்கிறார்கள் தெரியுமா ?

அது ஒரு தனிக்கலை , அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .

சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் . ஏழு இலை என்று சொல்லப் படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும் .

நந்தியாவட்டை இலைகளை கிளியின் இறக்கைகளுக்கும் பயன் படுத்துகிறார்கள் . கிளி உருவாக பயன் படுத்தப் படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன .

கிளி அமர்ந்திருப்பது போல காண்பிப்பதற்கு , நந்தியாவட்டை பூக்களே கிளியின் கால்களாக அமைக்கப் படுகின்றன . இறக்கைகளுக்கு முதலில் பனைஒலையும் , அதன் மேல் இலைகளும் போர்த்தப் படுகின்றன .

கிளியின் வால் பகுதிக்கு , வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன . கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர் .

சிவப்பு நிற மாதுளம் பூ , கிளியின் மூக்கிற்கு பயன் படுத்தப் படுகிறது . 

இவ்வாறான ஒரு கிளியைத் தயாரிக்க 4 மணி நேரம் ஆகிறது ….

தினமும் , அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தினர் இவ்வாறு பிரத்யேகமாக தயாரிக்கும் கிளியை மாலை நேரம் பூஜையின் பொழுது ஆண்டாளுக்கு சாற்றுகிறார்கள் ….திருமலையிலும் , திருவரங்கத்திலும் நடக்கும் பிரம்மோத்சவம் காலங்களில் , ஆண்டாளுக்கு சாற்றப் பட்ட இக்கிளி தான் இங்கிருந்து பிரத்யேகமாக எடுத்துச் செல்லப் பட்டு பெருமாளுக்கும் சாற்றுவார்கள் …

இது தவிர்த்து , அதே மாதிரியான கிளிகள் அங்கு பலரால் தயாரிக்கப் பட்டு விற்கப் படுவதுமுண்டு .





கிளி கொஞ்சும் ஆண்டாள்!













திருத்தங்கல் “நின்ற நாராயணப்பெருமாள்”



பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்என்று புகழ்பாடினர்.

பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்என்று பாராட்டினர்.

நீளாதேவியின் தோழிகள்,”எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை நாரம்என்பர். இதனால் தான் பெருமாளுக்கு நாராயணன்என்ற சிறப்பு திருநாமமே ஏற்பட்டது. உலகிலுள்ள எல்லாரும் உச்சரிக்கும் நாமம் நாராயணன் நாமம். தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச்செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள்என்றனர்.

விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள்,

'நீயே எனக்கு என்றும் பிரியமானவள். உன்னால்தான் நான் ஸ்ரீயம்பதியாக விளங்குகிறேன்.நீயே பெரிய பிராட்டி என்ற பெயருடன் விளங்குவாய்' என்று கூற, தேவியும் மனமகிழ்ந்து 'தாங்கள் இம்மலையில் பாற்கடல் போல சே ஷ சயனத்தில் என்னுடன் எப்போதும் எழுந்தருளி இருக்க வேண்டும்' என வேண்ட, நாரணரும் 'நீ தவம் இருந்த இவ்விடம் இனி ஸ்ரீக்ஷேத்திரம் என விளங்கும்'எனப் பணித்து அங்கேயே எழுந்தருளி விட்டார். 

கணவரின் பின்னால் வந்த பூதேவியும், நீளாதேவியும் மகாலக்ஷ்மியிடம் மன்னிப்பு வேண்ட தேவியும் அவர்களை தழுவி ஏற்றுக் கொண்டாள். திருவாகிய  லக்ஷ்மி தேவி இங்கு  தங்கியதால்  இத்தலம் திருத் தங்கல்  என்றாயிற்று.

ஆலமரத்தை தலமரமாகக் கொண்ட இவ்வாலயத்தில் , வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடை பெறுகின்றன.  'திருத்தங்கல் கண்டால் மறுத்தங்கல்  கிடையாது' என்ற பழமொழி  இத்தலத்தை தரிசிப்பவர்க்கு இனி மறு பிறப்பு கிடையாது என்பதைத் தெளிவாகச் சொல்லி இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.


திருத்தங்கல் பெருமாள் கோயில் தங்காலமலைமீது அமைந்துள்ளது.


ஆலயத்திற்கு சில  படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப் பதுமைகள் காட்சி தரும் முதல் கட்டில் அர்த்த மண்டபத்தில்  பெருமாள் போக சயனராக  தேவியருடன் பள்ளி கொண்ட பெருமாள் ஸ்ரீரங்கநாதராக ஆனந்தக் காட்சி தருகிறார். ஆண்டாளைத் திருமணம் செய்ய வந்த ஸ்ரீரங்கத்து அழகிய மணவாளரே இங்கு தங்கி பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றதாக வரலாறு. பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் மனத்தை மயக்குகிறார்!


மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு.



சோமச்சந்திர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் கருவறையில்  பதினோரு திருவுருவங்களுடன் நின்ற கோலத்தில் சுதையாலான மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்”  காட்சி தருவது எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பு. மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்”  தான் அருள் புரிந்த அத்தனை பேருடனும் கர்ப்பக்கிரகத்தில் காட்சி தருகிறார்! மூலவரின் வலப்பக்கம் அன்ன நாயகியாகிய ஸ்ரீதேவி, அம்ருத நாயகியாகிய பூதேவி, மார்க்கண்டேய ரிஷி, கருடன், அருணன் (சூரியனின் சாரதி) ஆகியோரும்,

இடப்பக்கம் அனந்த நாயகி என்ற நீளாதேவி, ஜாம்பவதி, அநிருத்தன், உஷை மற்றும் பிருகு மகரிஷி ஆகியோருடன் நடுவே வலது திருக் கையால் தன் திருவடிகளைக் காட்டிக் கொண்டு 'என் பாதங்களைச் சரணடைவோரை நான் கைவிட மாட்டேன்' என்பது போலும், இடக்கையை ஒயிலாக இடுப்பில் வைத்துக் கொண்டும்,அற்புதமான தரிசனம்  தருகிறார். இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம்.


உற்சவர் திருத்தங்கலப்பன் எனப் படுகிறார். அவரும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கு விசே ஷ நாட்களில் தைலக் காப்பு நடைபெறும்.

பிரகாரச் சுற்றில் ஆண்டாளும், தாண்டவக் கண்ணனும் எழுந்தருளியுள்ளனர்.



இரண்டாம் கட்டில் நான்குகால் மண்டபம், வாகன அறைகள் உள்ளன.

இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார்.



இங்கு  உயர்ந்து நின்ற திருக்கோலத்தில், வலக்கையில் அபய முத்திரையும், இடக் கையைத் தொங்க விட்டும் நின்ற நிலையில் தரிசனம் தரும் தாயாரின் அழகு எந்த ஆலயத்திலும் காணக்   கிடைக்காத காட்சி.

நாம் வேண்டுவதை உடன் நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதி இந்த அன்னை. திருமணம், பிள்ளைப்பேறு, வேலை என்று எதை வேண்டிக்கொண்டும் அம்மனுக்கு ஒன்பது கஜம் நூற்புடவை வாங்கிச்  சாத்துவதாக வேண்டிக் கொண்டால் அவை விரைவில் நிறைவேறுமாம்.இந்த நாச்சியாருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. தாயாருக்கு ஆராதனம் தொடங்கிய பின்பே பெருமாளுக்கு தொடங்கும்.


இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியன தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவிலைப்போல் இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

ஒரு சமயம் கங்கை முதலான 61 நதி மங்கையர் இந்த மலையில் தங்கியிருக்கும் நாராயணரிடம் 'எங்களில் நீராடுவோரின் பாபங்கள் நிறைந்த எங்களை அப்பாபச் சுமையில் இருந்து விடுபட அருள வேண்டும்' எனக் கேட்டனர். பகவானும் 'இக்கோயிலின் வாயிலிலுள்ள பாபநாச தீர்த்தத்தில் நீராடினால் உங்கள் பாபங்கள் நீங்கும். இக்குளக் கரையில் செய்யும் தேவகாரியங்கள்  ஒரு கோடியாகப் பலன் பெறும். இதில் நீராடுவோர் முக்தி அடைவர்' என்று அருளினார். இங்குள்ள பாபநாச தீர்த்தம் மிக
விசே ஷமானது.


இங்குள்ள பாஸ்கர தீர்த்தம் ஒரு அந்தணரை அறியாமல் கொன்றதால் சூரிய தேவனுக்கு ஏற்பட்ட  பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய சிறப்பு பெற்றது. ஊருக்கு வடக்கே ஓடும் அர்ச்சுன நதியும் இவ்வாலய தீர்த்தமாகப் போற்றப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் சமயம் இங்கு வந்தபோது அர்ச்சுனன் கங்கையை நினைத்து பூமியில் வருணாஸ்திரத்தை விட கங்காதேவி பெருக்கெடுத்து வந்தாள். இந்நதி மிகப் புனித நதியாகும்

மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக்கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள்.
சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான்

அப்போது அசரீரி தோன்றி,”வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்என ஒலித்தது. இதைக்கேட்ட வாணன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து,  திருத்தங்கலிலேயே கண்ண பிரான் தாமும் மனைவியருடன் திருக் கல்யாணக் காட்சி தந்தருளி அவ்விடத்திலேயே அனைவருடனும் ஆலயம் கொண்டார்.

சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,”ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்எனக் கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கித் தவமிருந்தது

தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், “உனது விருப்பம் என்ன?” எனக் கேட்டார். அதற்கு ஆலமரம்,”தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீது பள்ளிகொண்டருள வேண்டும்எனக் கேட்டது. அதற்கு பெருமாள்,”திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் திருமகளைத் திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.

காலவரிஷி முனிவரின் குமாரராகிய சிந்துமாமுனிவருக்கு பிரம்மனின் அருளால் சுகிருதி, விகிருதி என்ற புதல்விகள் பிறந்தனர். சிந்துமாமுனிவர் தன் பெண்களிடம்,”உங்களுக்கு ஏற்ற மணவாளனை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்என்றார். சுகிருதி சூரியபகவானையும், விகிருதி சுசர்மா என்பவனையும் கணவனாகத் தேர்ந்தெடுத்தார்கள். சூரியனை கணவனாக அடைய சுகிருதி கடும் தவம் இருந்தாள். அப்போது சண்டகோஷன் என்ற அரக்கன் அவளைத் தூக்கிச் சென்றான். வருந்திய அவள், சூரியனிடம் தன்னைக் காத்தருள வேண்டி கதறினாள். சூரியன் தன் சக்திகளில் ஒன்றான சண்டசக்தியை அரக்கனை நோக்கி ஏவினார்

அப்போது, அரக்கன் சுகிருதியை விட்டுவிட்டு ஒரு பிராமணர் அருகில் சென்று நின்று கொண்டான். அரக்கனை அழிக்க வந்த சண்டசக்தி பிராமணனையும் சேர்த்து அழித்து விட்டது. இதனால் சூரியனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. வருந்திய சூரியன் பெருமாளை வேண்டினார். பெருமாள்,”ஸ்ரீ யாகிய மகாலட்சுமி தவம் செய்யும் திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடினால் உனது தோஷம் நீங்கும்என்றார். சூரியனும் அதன்படி நீராடி பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) நீங்கப் பெற்றார்.



கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.


அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அருணன், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன

ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 48வது தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசத்தில் 5வது தலம். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானது. இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

இத்தலம் பூதத்தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சித்ரா பௌர்ணமி, வைகாசியில் வசந்தோத்சவம்,ஆனியில் பிரம்மோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, சித்ரா பௌர்ணமி, பங்குனியில் திருக்கல்யாண உத்சவம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தியும், பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புளியோதரை படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தாம் விரும்பும் வாழ்க்கைத் துணையை மணக்க விரும்புவோரும், இனிய தாம்பத்திய வாழ்க்கையை விரும்புவோரும் வழிபட வேண்டிய இறைவன் இவர். இத்தனை சிறப்புகளோடு திகழும் இந்த ஆலயத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டியது அவசியம்.


இவ்வாலயம் விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

ஆலய நேரம். காலை 6--9  மாலை 4--8 
தொடர்புக்கு...9442665443, 9443570765






திங்கள், 27 ஜூன், 2016

திருமழிசை திருமங்கைவல்லித் தாயார்!



திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப் படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை' எனப் பெயர் வந்தது. அத்துடன் இந்தத் தலத்தின் திருமகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந்து இருப்பதால் `திரு' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை' என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் தோன்றினார்.



ஆலயம்: ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள் கொண்டது.

தலதீர்த்தம்: திவ்யமானதும், பாவம் போக்குவதுமான பிருகு தீர்த்தம்.

தலவிருட்சம்: பாரிஜாத மரம்.

தலமூலவர்: ஜெகன்னாதப் பெருமாள், ருக்குமணி, சத்யபாமா சமேதரராக கிழக்கு முகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய முனிவரும், பிருகு முனிவரும் உடன் அமர்ந்து சேவிக்கிறார்கள்.



அருள்மிகு திருமங்கைவல்லித் தாயார்!

இவரை நம்பிக்கையுடன் வேண்டும் பக்தர்களுக்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும், புத்திர பாக்கியத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தருகிறார். திருவே உருக்கொண்டிருக்கும் இந்தக் தாயாரை வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் பெற முடிகிறதாம்.



 பிராகார தேவதை!

கருணையே வடிவாக பிராகார தேவதையாக இந்தத் தலத்தில் ஸ்ரீவைஷ்ணவி திருமாலின் சங்குச் சக்கரங்களைத் தாங்கி நின்று சேவைசாதிக்கிறாள். விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் வைஷ்ணவி தேவிக்கு பூமாலை வழிபாடும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலத்தில் விசேடத் திருமஞ்சனப் பிரார்த்தனையும் செய்தாலே போதுமாம்.


அருகிலேயே ஸ்ரீ அழகிய சிங்கர் சன்னதியில் லட்சுமி தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.அடுத்தடுத்து ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீவைஷ்ணவர்களின் ஒப்பற்ற குருவான ஸ்ரீமத் மணவாள சுவாமிகள் சன்னதியும் இருக்கிறது.

பெருமாள் கோவிலின் மத்தியில் பிரதானமாகக் காட்சி தரும் இந்த விநாயகரின் வயிற்றின் நடுப்பகுதியில் ராகுவும், கேதுவும் இணைந்துள்ளது.இவரை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.


முக்கிய திருவிழாக்கள்

இங்குப் பிரதி ஆண்டும் ஆனிமாதம் ஸ்ரீஜெகன்னாதப் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்ஸவமும், தைமாதத்தில் மக நட்சத்திரத்தில் ஸ்ரீதிருமழிசை ஆழ்வாரின் திருஅவதார மகோத்ஸவமும், மாசி மாதத்தில் 3 நாட்கள் தெப்போத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.



இந்தத் தலத்தின் உயர்வையும், மேன்மையையும் நமக்கு விளக்க இதோ ஒரு புராண கால நிகழ்வு!

ஒரு முறை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் முதலிய பிரம்மரிஷிகள் சத்ய லோகத்திற்கு சென்றனர். அங்கு பிரம்மதேவரைச் சந்தித்து ஈரேழு உலகங்களிலும் சிறந்த உலகமான பூவுலகில் தவம் செய்ய எங்களுக்கு ஒரு உயர்வான இடத்தைத் தாங்கள் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

உடனே நான்முகன் தேவ சிற்பியான சதுர்முகனை அழைத்து ஒரு துலாக்கோல் கொண்டு வரும்படி சொன்னார். ஒரு தட்டில் திருமழிசைத் தலத்தையும், இன்னொரு தட்டில் உலகின் மற்ற பகுதிகளையும் வைத்து எடை போடச் சொன்னார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து உலகில் தனது சிறப்பான இடத்தை முனிபுங்கவர்களுக்கு உணர்த்தியதாம். உலகில் எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் வாய்ந்தது திருமழிசை என்பதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தனராம்.




பைநாகப் பாயை சுருட்டிக்கொண்ட வைகுந்தன்!

திருமழிசை ஆழ்வாரும் , இவர் சீடர் கணி கண்ணனும் காஞ்சியில் இருந்தனர். அப்பொழுது இவருக்கு பணிவிடைகள் செய்த ஒரு வயதான மாதுவை இளம் மங்கையாக்கினார். அவள் பேரழகில் மயங்கி மணம் புரிந்த அந்த நகரின் மன்னனான பல்லவராயன் தன்னையும் ஆழ்வாரிடம் வாலிபனாக்கும்படி கேட்டார். ஆனால் அவர் அதை மறுத்துவிட கணி கண்ணனாரையும் காஞ்சி நகரை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார் அங்குக் கோவில் கொண்டு இருந்த வைகுந்த வாசனைப் பார்த்து

``கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்
பைநாகப்பாய் சுருட்டிக் கொள்''

என்று பாட, வைகுந்த வாசனும் தம் பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வார் பின்னாடியே சென்று விடுகிறார். மற்ற தேவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுவிட காஞ்சி மாநகரமே இருட்டில் மூழ்கி விடுகிறது. தன் தவறு உணர்ந்த மன்னன் அவர்கள் காலில் விழுந்து வேண்ட, ஆழ்வார் தன் பின்னாடி வந்த வைகுந்த வாசனை ``நீயும் உன் பைநாகப் பாய் படுத்துக் கொள்'' என்று பாட வைகுந்த வாசனும் திரும்பிச் சென்று ஆலயத்துக்குள் படுத்துக் கொண்டாராம்!

ஆலயம் செல்லும் வழி:
சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ் மூலமாக ஆலயத்துக்கு செல்லலாம்!



நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்!



கல்யாணப் பெண்ணைப் போல சந்தோஷத்துடனும், அழகுடனும், வெட்கத்துடனும், நளினத்துடனும், கருணையுடனும், காதலுடனும், கனிவுடனும் காட்சி தரும் திருநெல்வேலி காந்திமதி அம்மனை முதல் முறை பார்ப்பவர்கள், மெய்சிலிர்த்துப் போவார்கள். அம்மனின் எழிலில், வேண்டுதல் கூட மறந்து போய்விடும். தெய்வத் திருமணத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்படும்.

மணப்பெண்ணின் அலங்காரத்தைப் பார்க்கலாமா? தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து கண்களில் மைதீட்டி நெற்றியில் குங்குமம் தரித்து எப்போதும் அழகு கொஞ்சும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியை தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Yengal Kula Naayagiyeh Gaandhimathi, Amman thuthi lyrics Tamil-English, எங்கள் குல நாயகியே காந்திமதி, அம்மன் பக்தி துதி

அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார்.


அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.




நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்ற கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்து தட்டி அமுக்கியது போல அடி பரந்து குட்டையான அமைப்பு!

திருத்தலக் குறிப்பு:


தல மூர்த்தி :
நெல்லையப்பர்
(வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)


தல இறைவி :

காந்திமதி அம்மை
(வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)


தல விருட்சம் :

மூங்கில்

தல தீர்த்தம் :

மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.

திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென் காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது.


சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி நகரின் மத்தியில் 850 அடி நீளமும் 756அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். அந்தக் காலத்தில் அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் தனித் தனியாகத்தான் இருந்தன. புராணப்படி முழுவதும் கண்ட ராம பாண்டியனாலும், ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறனாலும் இவை கட்டப்பட்டன. கி.பி.1647ல் வடமலையப்ப பிள்ளையன், இரண்டு கோயிலையும் ஒன்றாக இணைக்க, சங்கிலி மண்டபத்தை அமைத்தான் என்கிறது வரலாறு.



இதோ அந்தக் கதை:

அந்தக் காலத்தில் மூங்கில் காடாக இருந்தது இந்தப் பகுதி. அருகில் இருந்த ஒரு தொழுவத்திலிருந்துதான் அரசனுக்கு தினசரி பால் போகும். அந்தக் கடமையைச் சரிவர செய்து கொண்டிருந்தார் ஓர் ஆயர். அவர் செல்லும்போது மூங்கில் காட்டில் தினசரி அவரது கால் தடுக்கி குடங்கள் கீழே விழுந்து பால் கொட்டிற்று. தரையில் முளை விட்டிருந்த மூங்கில்தான் இதற்குக் காரணம் என்று எண்ணிய ஆயர், கோடரியால் மூங்கிலை வெட்ட, ரத்தம் கிளம்பிற்று.பதறிப்போய் மன்னரிடம் சொல்ல, அரசன் ராமபாண்டியனும் விரைந்து வந்து பார்க்க, அங்கே சிறிதாய் ஒரு லிங்கம் இருப்பது தெரிந்தது.


பரிதவித்த மன்னன் அந்த லிங்கத்திற்கு ஓர் ஆவுடையார் அமைக்க, லிங்கம் அதற்கேற்ப வளர்ந்தது. மீண்டும் ஒரு ஆவுடையார் என்று மன்னனும் 21 பீடங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்க லிங்கமும் அதற்கேற்ப வளர்ந்தது. சோதித்தது போதும் என்று மன்னன் ராமபாண்டியன் கைதொழ, சிவபெருமான் அவனுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார். ``ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, `முழுவதும் கண்ட ராம பாண்டியன்' என்று அழைக்கப்படும்'' என்று ஆசி வழங்கினார்.

அந்த முழுவதும் கண்ட ராம பாண்டியன் கட்டியதுதான் இந்தக் கோயில்.



மூங்கில் என்றால் வேணு. எனவே வேணுவனநாதர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

தல விருட்சம் மூங்கில்தான்!

நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதிகம்.

 ``நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்'' என்று இறைவனே கூறியிருக்கிறார் என்றால், இதன் சிறப்பை சொல்லி மாளாது.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி. இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது!

இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.



கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள்.
ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை.
கி.பி.7ம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது.



இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது.

நேரே சென்றால் வேணுவனநாதர் என்னும் மூங்கில் முளையில் தோன்றிய ஈசனைக் காணலாம். மன்னனுக்காக 21 பீடங்களைத் தாண்டியும் உயர்ந்து ஜோதி வடிவில் காட்சி தந்த ஈசன் இவர்தான். இவரே அருள்மிகு நெல்லையப்பர்.



நெல்லையப்பருக்கு அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதி அமைந்திருக்கிறது. வேணுவனநாதர் வெளிப்படுவதற்குமுன் தோன்றிய திருமூலநாதர் சன்னதியும் மிக முக்கியமானது. மேற்புறப் பிராகாரத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் அருள்புரியும் நடேசரையும் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.

பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை
5. திருநெல்வேலி - தாமிரசபை


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை


வேணுவனநாதர், நெல்லையப்பர் ஆனதும் ஒரு கதை.

இந்த ஊரின் பெயர் தோன்றியதும் அதே கதையில்தான்! ராம பாண்டியனின் பிற்காலத்தில் 12 வருடங்கள் மழையில்லாமல் போய், பெரும்பஞ்சம் இங்கே ஏற்பட்டது. மக்கள் பசியால் தவித்தார்கள். இறைவனுக்கே நைவேத்தியத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அப்போது, வேதசர்மா என்ற பக்தர் பிட்சையெடுத்தாவது கொஞ்சம் நெல்லைச் சேகரித்து, இறைவனுக்குப் படைத்து வந்தார். இறைவன் அவரை மேலும் சோதிக்க எண்ணினான். கைவசம் இருந்த கைப்பிடி நெல்லை, கோவில் சன்னதியிலேயே உலர்த்திவிட்டு வெளியில் சென்றார் வேதசர்மா. அப்போது திடீரென பெருமழை பெய்தது. நெல், மழைநீரில் மிதந்து போய் விட்டால், இறைவன் பட்டினி கிடப்பாரே என்று ஓடோடி வந்தார் வேதசர்மா.

அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. தான் உலர்த்திய நெல்லைச் சுற்றி மழைநீரே ஒரு வேலியாக உயர்ந்து நிற்க, நெல்லுக்கு மட்டும் வெய்யில் அடிப்பதைக் கண்டு நெக்குருகிப் போனார். நெல்லைக் காத்ததால் அன்று முதல் வேணுவனநாதருக்கு `நெல்வேலி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் திருநெல்வேலி ஆயிற்று. பஞ்சமும் பறந்து போயிற்று.

தன்னை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும் என்பதை உணர்த்தவே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும்  4-ம் நாளன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி  நடைபெறும்.



திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.



எங்கள் குல நாயகியே காந்திமதி
எம்மை வாழவைக்கும் அருள்நிதியே காந்திமதி பொங்கிவரும் பேரெழிலே காந்திமதி 
புவனமெல்லாம் காப்பவளே காந்திமதி 
உன் பாதம் சரணடைந்தோம் காந்திமதி உலகாளும் ஈஸ்வரியே காந்திமதி அன்பர்கட்கு அருள்பவளே காந்திமதி அருள் மழையின் மறுபெயரே காந்திமதி 

இன்பங்கள் தருபவளே காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி சன்னதியில் நின்றார்க்கு காந்திமதி சங்கடங்கள் தீர்த்திடுவாய் காந்திமதி

நெல்லையப்பர் மகிழ்தேவி காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி தொல்லைதனைப் போக்கிடுவாள் காந்திமதி தொழுது உன்னை பணிந்திடுவோம் காந்திமதி.




திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:

மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***


நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.
திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில்  அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம்.

திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள். மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.

ஏராளமான தெய்வங்கள், ஏராளமான கல்வெட்டுகள், ஏராளமான தலப் பதிகங்கள் என்று இங்கே எல்லாமும் ஏராளம்... தாராளம். நெல்லையப்பரையும், காந்திமதியையும் வணங்கினால், நிச்சயம் பசிப்பிணி போகும்.

அப்புறம் ஒன்று, இனிமையான நெல்லையப்பரின் தரிசனத்தை முடித்த கையோடு கோயில் வாசலில் மாலையில் கிடைக்கும் இருட்டுக் கடை அல்வாவையும் ஒரு கை பாருங்கள்.

நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ.  ``கோயில் நேரம்?'' ``காலை 6 - 12.30, மாலை 5.30-9''







ஞாயிறு, 26 ஜூன், 2016

பொன்விளைந்த களத்தூர் ஹயக்ரீவர்!


ஜகத்குரு ஆதிசங்கரர் பசியாற,தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி யையும் தந்த ஏழை மூதாட்டிக்காகக் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி, தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிவித்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்தப் புனிதச் சம்பவம் நிகழ்ந்தது கேரளத்தில்.

ஆனால் நம் தமிழகத்திலேயே செங்கற்பட்டுக்குப் பக்கத்தில் பகவானே, தங்கமழையை... அல்ல தங்கத்தையே பூமியில் விளையச் செய்த அற்புதம் நிகழ்ந்த ஊர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அதுதான் பொன்விளைந்த களத்தூர்!

அழகிய சின்ன கிராமம். வரிசையாக மூன்று சின்னச் சின்ன கோயில்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெருமாள். பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். நான்கு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு பெருமாள் கோவிலும் உண்டு.

களத்தில் அதாவது வயலில் பொன் விளைந்ததால் இந்த ஊர் பொன் விளைந்த களத்தூர். அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து சென்று விழுந்ததால் அந்த ஊரின் பெயர் பொன்பதர்க் கூ(ட்)டம்!

ஆக நான்கு பெருமாள் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வறுமை அகன்று செல்வம் சேரும். வணங்குபவர்களின் இல்லங்களில் பொன் முதலான ஐஸ்வர்யங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலில் இந்த ஊரில் பொன் விளைந்த கதையைத் தெரிந்துகொள்வோமா?

700 வருடங்களுக்கு முன்னால்...



வைணவ ஆச்சார்யாரான தூப்புல் நிகமாந்த மகாதேசிகன், ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் இந்தக் களத்தூரில் ஒருநாள் தங்கினார்.

அவர், தன்னுடன் எப்போதும் ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் கொண்டு வருவார். அதற்கு இருவேளையும் பூஜை செய்வார்.

அன்றைய தினம், மாலை பூஜையின்போது நிவேதனத்திற்குப் பிரசாதம் எதுவும் கிடைக்காததால் துளசி தீர்த்தத்தையே ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகி உறங்கப் போனார்.

அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். சிறந்த பக்திமான்.

அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நெல்லை விளைவித்து அந்த வருமானத்தில் அரையும் குறையுமாக அவன் வாழ்ந்து வந்தான்.

மறுநாள், அவன் களத்தில் நெல் அறுக்கவேண்டிய நாள். யாராவது திருடர்கள் கதிரை அறுத்துவிடுவார்களோ அல்லது காட்டு மிருகங்களால் பயிருக்கு ஏதாவது சேதம் வந்துவிடுமோ என்ற கவலை அவனுக்கு. அதனால் அன்றிரவு தன் நிலத்தைப் பார்வையிடக் கிளம்பினான்.

அவன் நினைத்தது நடந்தது. பளபளவென ஒரு பெரிய வெள்ளைக் குதிரை, அந்தக் குடியானவனின் நிலத்தில் திருப்தியாக மேய்ந்து கொண்டிருந்தது.

கோபம் கொண்ட அவன், குதிரையைத் துரத்த, அது நாலுகால் பாய்ச்சலில் விரைய, இவன் இரண்டு கால் பாய்ச்சலில் எகிற... கடைசியில் அந்த அபூர்வ வெள்ளைக்குதிரை தூப்புல் நிகமாந்த மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது.

சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம் அவன் விஷயத்தைச் சொல்ல, மகாதேசிகனுக்கு உடல் சிலிர்த்தது. மேய்ந்தது சாதாரண குதிரையல்ல துளசிதீர்த்தம் போதாத, குதிரைமுகக் கடவுளான ஹயக்ரீவனின் லீலை அது என்று புரிந்தது.

மெய்சிலிர்த்துப் போன மகாதேசிகன் ``பகவானின் காட்சி கண்ட புண்ணியப் பிறவியப்பா நீ'' என்று அவனிடம் சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு களத்துக்கு விரைந்தார்.

அங்கே அந்த அற்புதம் நிகழ்ந்திருந்தது. வெள்ளைக்குதிரை நெல்லை மேய்ந்த இடங்களில் எல்லாம் காணாமல் போன நெல் மணிகளுக்கு பதிலாகப் பொன்மணிகள் நிலத்திலே விளைந்திருந்தன.


பொன் விளைந்த களத்தூர்!

அத்தனை மகத்துவம் மிக்க இந்த ஊரில் உள்ள மூன்று வைணவ ஆலயங்களில் முதலாவதாக உள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயத்திற்குள் நுழைவோமா?


Moolavar : Vaikunta Vaasa Perumal 
Goddess : Ahobila Valli Thaayar
Utsavar : Lakshmi Narasimha
Temple Time : 8am-11am and 5pm-730pm

அழகிய இந்த ஆலயத்தில்தான் நெல்லைப் பொன்னாக்கிய ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்.
 அகோபிலவல்லி தாயார் 
மூலவர் லட்சுமி நரசிம்மர். உடனே சிங்கமுகத்துடன் பெருமாள் காட்சி தருவார் என்று நினைக்காதீர்கள். `சிங்க முகத்துடன் சேவை சாதித்தால் என்னைப் போன்ற குழந்தைகள் பயப்படுவார்களே' என்று பிரகலாதன் கேட்டதற்கிணங்க, சாந்த சொரூபியாய், அழகு ரூபத்துடன் நரசிம்மர் காட்சியளித்தாரே, நினைவிருக்கிறதா? அப்படித்தான் அகோபிலவல்லி நாயகியுடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.



இவருக்கும் ஒரு கதை உண்டு.

108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கடல் மல்லையில் இருந்தவர் இந்தப் பெருமாள்! 1000 ஆண்டுகளுக்கு முன்னால், அன்னியர்களால் கடல்மல்லை (மாமல்லபுரம்) கோயிலுக்கு ஆபத்து வந்தபோது, கவலை கொண்ட பக்தர்களிடம் நரசிம்மரே அசரீரியாகப் பேசினார்.

``கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. என்னை இங்கிருந்து எடுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் செல்லுங்கள். கருடனும் என்னுடன் பறந்து வருவான்.

அந்தக் கருடன் எந்த ஊரில், எந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறானோ அந்த இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்யுங்கள்'' என்று கூறினார்.

அவ்வாறு கருடன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த ஆலயம். அதாவது பகவான் லட்சுமி நரசிம்மரே தானாக வந்து விரும்பி அமர்ந்து கொண்ட இடம் என்பதால், இதன் சிறப்பைச் சொல்லியா ஆகவேண்டும்?

ஒரு பிரதோஷ நேரத்தில்தான் நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்கிறார் என்பதால் அந்த நேரத்தில் நரசிம்மரை சாந்தப்படுத்த, ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் நரசிம்மருக்கு இங்கே திருமஞ்சனம் உண்டு.

அகோபிலவல்லித் தாயார், ஆண்டாள், கோதண்டராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்கள்.


அடுத்து அமைந்திருப்பது கோதண்டராமர் (பட்டாபிராமர்) திருக்கோயில்.

இங்கே மூலவர் பட்டாபிராமர், பட்டாபிஷேகக் கோலத்தில் சீதாப்பிராட்டியை இடது மடியிலும், லட்சுமணனை வலது புறமாகவும் வைத்துக்கொண்டு சேவை சாதிக்கிறார். கருவறையிலேயே ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்.



ஸ்ரீனிவாசப் பெருமாளும், திருமகள், நிலமகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.




Moolavar : Chathur Bhuja Rama East Facing Sitting Posture
Utsavar : Kothandarama with Sita, Lakshmana and Anjaneya
Temple Time : 730am-830am and 5pm-6pm


மூன்றாவதாக அமைந்திருப்பது தர்ப்பசயன சேதுராமர் திருக்கோயில்.

ராமபிரானை இந்த ஆலயத்தில் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் (பட்டாபிஷேகக் கோலம்) படுத்த நிலையிலும் (தர்ப்ப சயனம்) ஆக மூன்று கோலத்திலும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.

இந்த மூன்று கோயில்களைப் பார்த்தால் மட்டும் போதாது இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னின் பதர்கள் விழுந்த பொன்பதர்க் கூடத்திற்கும் சென்று வரவேண்டும். அங்கேதான் ராமபிரான் நான்கு கரங்களுடன் தான் ஓர் அவதார புருஷன் என்பதை நிரூபிக்கிறார்.

எந்த சக்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாதாரண மனிதனாக, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக பகவான் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ஆனாலும் தான் யார் என்பதை கௌசல்யாதேவி, திரிசடை, ஆஞ்சநேயர், ராவணன், மண்டோதரி மற்றும் தேவராஜ மகரிஷி ஆகியோருக்கு மட்டும் நான்கு கரங்களுடன் காட்சி தந்து `நானே மகாவிஷ்ணு' என்பதை அடையாளம் காட்டினார்.

அப்படி ஓர் அற்புத தோற்றத்தில் ராமர் இங்கே காட்சியளிக்கிறார்.



நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் அபய, வரத முத்திரை கொண்டு `பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறேன்.கேட்கும் வரங்களையெல்லாம் தருகிறேன்' என்பதுபோல சேவை சாதிக்கும் காட்சி என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன இனிமை!

நீங்கள் பொன்விளைந்த களத்தூர் சென்று லட்சுமி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், சேதுராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கையும் ஒரே நாளில் தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வறுமைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் அது உதவும்.

எங்கே? எப்படி?

பொன்விளைந்த களத்தூருக்கு எப்படி செல்வது?

``செங்கல்பட்டு புது பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ. தூரம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்?

நரசிம்மர் கோயில் : 9-11, 5-7.

கோதண்டராமர் கோயில் : 9-10, 6-7

தர்ப்பசயனராமர் கோயில் : 8-9, 5-7.

சதுர்புஜராமர் கோயில் : 7-8, 5-6.


தொடர்புக்குத் தொலைபேசி எண்?``044-27441142''