புதன், 9 நவம்பர், 2016

சர்வ மங்களம் அருளும் மாகேஸ்வரி!


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மாகேஸ்வரி. மகேஸ்வரனான பரமசிவனின் பத்தினியானதால் மாகேஸ்வரி என்றானாள்.

இத்தேவி சர்வ மங்களத்தையும் அருள்பவள். இவள் வாகனம் எருது. தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது. சகலவிதமான ஞானம், வற்றாத ஆற்றல், அளப்பரிய சக்தி போன்றவற்றின் மொத்த உருவமே மகேஸ்வரன். அந்த மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி. சிவபிரானைப் போன்றே முக்கண் ஐந்து திருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள்.

பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், கொடிய விஷங்கள் கொண்ட நாகங்களை தன் கைகளில் வளையல்களாகவும், கங்கணங்களாகவும் பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். வெள்ளை நிறமுடையவள். தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள்.

உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும்-போகமும் அருள்பவள்!
 
 
 
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் உலகில் செய்வதற்கு அரிதான சம்ஹாரம் எனும் தொழிலைச் செய்கிறார். வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள் என தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றில் கூறப்பட்டுள்ளது.

மகம் என்றால் வேள்வி என்றும் ஒரு பொருள் உண்டு. யாகங்களைக் காப்பவளாக இத்தேவி விளங்குகிறாள். யாகங்கள் முறையாக நடைபெற்றால்தான் நாட்டில் மழை பொழியும். வேளாண்மை பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதனால் வேள்விகள் முறையாக நடைபெறவும், நடைபெறும் வேள்விகளால் உலகமக்கள் பயனடையச் செய்பவளாகவும் இத்தேவி விளங்குகிறாள்.
 
 
லிங்கோத்பவ மூர்த்தி முதல் கங்காதர மூர்த்தி வரை ஈசன் பல்வேறு வடிவங்களில் உலகைக் காத்தருள்கிறான். அந்த அனைத்து வடிவங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் சக்தியாய் திகழ்பவள் இந்த தேவி. மகேஸ்வரரின் மனைவியாய் உள்ளதாலும், மகான்களின் மனக் குகையிலும் உறைவதாலும் மாகேஸ்வரி எனப்படுகிறாள் என்கிறது தேவிபாகவதம்.

இத்தேவி கயிலையங்கிரியில் வாசம் புரிவதில் விருப்பமுள்ளவள். கயிலாசம் என்றால் ஸப்தம் வாசம் செய்யும் இடம் எனப் பொருள்படும். முனிவர்களின் வேத கோஷத்தாலும், சிவ கணங்களின் நாத கோஷத்தாலும் இவள் வாசம் புரியும் இடம் கைலாயமாயிற்று.

நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம் கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும். குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் எளியவர்க்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள்.

இந்த அம்பிகையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர். இவள் கையில் உள்ள சூலாயுதம் சிறப்பு பெற்றது.. இத்தேவி கோபம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், ஆச்சரியம் என்ற தீய குணங்களின் குரோதத்தைப் போக்கி அருள்கிறாள்.


ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அசுரர்கள் பிரம்மதேவனிடம் மூவுலகையும் வெல்லும் வரம் பெற்று தேவர்களுக்கு தொல்லை கொடுத்தனர். திருமாலும், பரமனும் அவர்களுடன் நெடுங்காலம் போரிட்டு, அவர்களை வென்று தன் பவனம் எனும் இடத்திற்கு வந்தனர். தங்களுக்கு கிடைத்த வெற்றி பராசக்தியினால்தான் என்பதை உணர்ந்தும், தங்கள் வீர சூர பராக்கிரமங்களால் தான் வெற்றி கிட்டியது எனத் தற்பெருமை பேசிய அரியையும், அயனையும் விட்டு அவர்கள் சக்திகள் அகன்றன. சக்தி அகன்றதால் இருவரும் செயல்பட முடியாதபடி சோர்ந்தனர்.
 
அதைக்கண்டு பதறிய நான்முகன் தன் புதல்வர்களான மனு, சனகர் போன்றவர்களையும், தட்சனையும் அழைத்து தவம் புரிந்து மீண்டும் இருவருக்கும் பராசக்தியை அவரவர் சக்திகளாக இருக்கும்படி வரம் வாங்கிவரப் பணித்தார். அதன்படி அவர்கள் தவம் புரிய அவர்கள் தவத்தை மெச்சிய பராசக்தியும் அவர்கள் விரும்பிய படியே வரங்களை அளித்தாள்.

அப்போது தட்சன் தேவியைத் தன் புதல்வியாகப் பிறந்து வளர வரம் வேண்டினார். அதை ஏற்று அவன் மகளாய்ப் பிறந்த பராசக்தி தக்க சமயத்தில் பரமனை மணந்தாள். பின் தட்சன் தான் செய்த வேள்வியில் சிவனை அவமரியாதை செய்ததுடன், நிந்தனையும் செய்ததால் கோபத்தால் கோபம் கொண்ட தாட்சாயணி தன் உயிரை விட்டதாக தந்த்ர சாஸ்திரம் கூறுகிறது. அவள் பிரிவைத் தாங்கமுடியாத பரமனும் கலங்கினான். சிவனின்றி சக்தியும் சக்தியின்றி சிவனும் இல்லை எனினும், சொல்லும், பொருளும், வானும் நிலவும் போல் ஒன்றியுள்ள அவர்கள் உலகத்தோர் உய்யவே இருவர்போல் தோற்றமளிக்கின்றனர்.


 
பரம்பொருள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் எனத் திகழும்போது மாயையான பராசக்தி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்றாகிறாள் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். சக்தியின்றி மும்மூர்த்திகளும் ஏதும் செய்ய இயலாது என்பது சாக்த வழிபாட்டின் திண்ணமான கருத்தாகும்.தாட்சாயணியின் சித்கலா ரூபமான உடலை சுமந்து கொண்டு எங்கும் திரிந்த பரமனிடம் திருமால் நான் இந்த கலைகளைப் பிரித்து பாரதத்தில் ஆங்காங்கே சக்தி பீடமாக்குகிறேன் என்று கூறி அந்தக் கலைகளை புவியெங்கும் ஸ்தாபித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அருளாட்சி புரிந்து சக்தி பீடங்களாகத் திகழ்ந்து வணங்குவோர் வாழ்வில் வளம் தந்து அருளும் மாகேஸ்வரியைத் துதிப்போம்.

யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர:

எனும் ஸ்ருதி வாக்யத்தில் குறிக்கப்பட்ட மகேஸ்வரன் த்ரிகுணாதீதமாதும் நிர்குணமானதுமான வடிவமுடையர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப்போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிட முடியாத பெருஞ் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.

ப்ருஹதஸ்ய சரீரம்யத் அப்ரமேயம் ப்ரமாணத:
தாதுர் மேஹதி பூஜயாம் மஹாதேவி தத: ஸ்ம்ருதா என்கிறது தேவி புராணம்.

மாகேஸ்வரி தியான ஸ்லோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ  ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மாகேஸ்வரி மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
ஓம் -ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

மாகேஸ்வரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

 
தியான ஸ்லோகம்

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சுசோபிதாம்;
 
வரதா பய ஹஸ்தாம்
தாம் ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

ஒரு முகம், முக்கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறமாக இருப்பவளும், மிகவும் அழகாகப் பிரகாசிப்பவளும், அபய முத்திரையைக் கொண்டவளும், மான், மழு இவைகளை ஏந்தியவளும், ரிஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும் மகாதேவியுமான மாகேஸ்வரியை வணங்குகின்றேன்.
அவள் எனக்கு மங்களங்களை அருள்வாளாக.

தேவி மஹாத்மியத்தில் மாகேஸ்வரி துதி:

த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
நாராயணி நமோஸ்துதே.

மாகேஸ்வரி வடிவம் கொண்டு திருசூலமும், பிறைமதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணியே உனக்கு நமஸ்காரம்.

இந்த அம்பிகையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக