புதன், 9 நவம்பர், 2016

சகலமும் அருள்வாள் சாமுண்டி!


துர்க்கை மகிஷாசுரன் என்னும் அசுரனை  அழித்த கதையை மார்கண்டேய புராணம் கூறுகின்றது. அதோடு, லலிதா ஸஹஸ்ர நாமம் என்ற சக்தியின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபாடும் நடைபெற்றிருக்கிறது.

மகா பாரதத்தில் சக்திக்குரிய பல நாமங்களைக் குறிப்பிடும் துர்கா தோத்திரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தேவி உபநிடதம், தேவியின் பெருமையைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

 சும்பன், நிசும்பன் என்ற அசுரர் கள் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து அரிய பல வரங்களைப் பெற்று மூவுலகங்களுக்கும் தலைவர்களாக  விளங்கினர். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி, தேவேந்திரப் பட்டினத்தைப் பறித்துக்கொண்டு அவர்களை துரத்தினர். தேவர்கள் பராசக்தியை சரணடைந்தனர்.

அவர்களுக்கு அபயமளித்த தேவி இளமங்கையாக, ஸர்வ லட்சணங்களும் கொண்டு சும்ப-நிசும்பரின்  பட்டினத்திற்கு அருகிலிருந்த மலையின் மீது அமர்ந்து தவம் செய்தாள். தேவியின் தோற்றப் பொலிவில் மயங்கிய சும்ப-நிசும்பரின் ஒற்றர்கள் ஒரு  பெண் பேரழகுப் பெட்டகமாய் தனித்திருப்பதை அவர்களிடம் கூறினர்.

அதைக் கேட்டு மயங்கிய அசுரர்கள் தனது சேனாதிபதிகளான சண்ட-முண்டரிடம் அப்பெண்ணை அழைத்து வருமாறு பணித்தனர். அதன்படி அவர்கள்  அன்னையை இழுத்துச் செல்ல முற்பட, தேவியின் வலது தோளிலிருந்து அழகிய ஒரு பெண் கத்தி, கேடயத்துடன் தோன்றினாள். அவள் பார்வதியின்  கருத்தையறிந்து ஒரு நொடியில் சண்டன், முண்டனின் தலைகளைக் கொய்தாள். அதனால் மகிழ்ந்த அன்னை ‘இன்று முதல் உன் திருநாமம் ‘சாமுண்டி’. ஸப்தமாதர்களில் ஒருத்தியாக குவலயத்தோர் உன்னை வழிபடுவர்’ என்று  வரமருளினாள். இவள் ‘சிவகாளி’ என்றும் அழைக்கப்படுவாள்.

சிவந்த நிறத்தினள். அழகானவள். கோபம் கொண்ட முகத் தோற்றம் கொண்டவள். ரக்த  சாமுண்டி, பிரம்ம சாமுண்டி எனவும் போற்றித் துதிக்கப்படுபவள். தேவாதி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றி பெற அருள்பவள்  இந்த சாமுண்டி தேவி.

தாருகன் என்ற அசுரன் தாருமதியின் புதல்வனாய்ப் பிறந்தான். அவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்து தேவர்களால் மரணம் ஏற்படாத வரத்தையும்,  அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். அவன் துன்பம் தாங்காமல் தேவர்கள்  பிரம்மனிடம் முறையிட்டனர். சினம் கொண்ட பிரம்மா ‘நீ ஒரு பெண்ணால் மரணமடைவாய்’ என தாருகனை சபித்தார்.

மகாசக்தியான தேவி, ப்ரம்மாதி தேவர்களின் துதியால் கருணை கொண்டு ப்ராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, இந்த்ராணி, வாராஹி, கௌமாரி  ஆகியோரோடு போர் புரிந்தனர். அப்போது அவர்கள் உடலிலிருந்து பீறிட்டெழுந்த ரத்தத் துளிகளிலிருந்து எழுந்த அசுரர்கள் பரமனை எள்ளி நகையாடினர்.

அதனால் சினம் கொண்ட மகேஸ்வரன் ஸம்ஹார மூர்த்தியாய் மாறி நெற்றிக் கண்ணைத்  திறந்தார். அதிலிருந்து தோன்றினாள் பத்ரகாளி. மலை போன்ற கருத்த தேகம், ஆயிரம் முகங்கள், நெருப்பைக் கக்கும் ஒளி பொருந்திய கண்களுடன்  உலகை நடுங்க வைக்கும் பேரொலிச் சிரிப்புடன் தோன்றினாள்.

அவளுடைய உக்ர ரூபத்தைக் கண்ட பார்வதி அவளை சுய உருக்கொள்ள பணித்தாள். அவ்வாறு சுயஉரு அடைந்த அவளிடம் ‘ஷண்மாதாக்களோடு நீயும் சேர்ந்து எழுவராய், ஸப்தமாதாக்களாய் உலகை பரிபாலனம் செய்து வருவாய்,’ என  வாழ்த்தினாள்.

சப்த கன்னியரில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாள்; நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்து, சுகங்களைத் தருவாள். தேவகணங்கள் புடைசூழ மஹா வித்யா ரூபிணியாய் சாமுண்டி தேவி தாரகனுடன் போர்புரிந்து அவனை வதைத்தாள். இதை தேவி மஹாத்மியம் 700 துதிகளால் விளக்குகிறது.

இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும்  முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவள். பயங்கர தோற்றம் கொண்டவள். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவள். பாம்புகளை உடலில்  அணிந்திருப்பாள். ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண் களைக் கொண்டிருப்பாள். விரித்த சடையில் கபாலம் தரித்தவள். மூன்று கண்கள், கோரைப்பற்கள் கொண்ட வாய், மண்டை யோட்டு மாலை  அணிந்தவள். திருக்கரங்களில் சூலாயுதமும், கபாலமும் ஏந்தி இருப்பாள். இத்தேவி பிடாரி (பீடா=துயரம், ஹாரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில்  வணங்கப்
பட்டாள்.

 உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட  பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள். தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதிகோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது.

 மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும் தாய்மையின் உருவமாக  கொண்டாடப்பட்டதே சப்த மாதர் என்ற சப்த மங்கையர் என்ற சப்த கன்னியர் வழிபாடாகும். சப்தமாதர் வழிபாடு இன்றும் கிராமப்புறங்கள் மட்டுமின்றி  நகர்புறங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

த்யானம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டிதாத்யேயே சாமுண்டா ரக்தவிக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ   ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்னா சுபா!
ரக்தாபா கல சணட முண்ட தமணீ தேவி லலா போத்பவா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ராணா சோத்யதா

மந்த்ரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ:  சாமுண்டா ப்ரசோதயாத்

தேவி மஹாத்மியத்தில் சாமுண்டா!

தம்ஷ்ட்ரா கரால வதனே சிரோமாலா விபூஷணே
சாமுண்டே முண்ட மதனே நாராயணீ நமோஸ் துதே.

தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம்  கொண்டவள். சண்டா என்று சங்கு புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள்.

இவள் சீற்றம் கொண்டால் ஊரில் கலகம் உண்டாகும். காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர்  அபிஷேகம் செய்தும் அவல், சேமியா திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் தேவி மனம் குளிர்வாள்.

இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும் எளிதில் தீரும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக