ஞாயிறு, 13 நவம்பர், 2016

(புரட்டாசி) வாழ்வில் உயர்வு தரும் 9 விரதங்கள்!

விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே மற்ற தமிழ் மாதங்களுடன் ஒப்பிடுகையில் புரட்டாசி மாதத்தில்தான் நிறைய பேர் விரதம் மேற்கொள்வதுண்டு.

அதற்கு ஏற்ப புரட்டாசி மாதத்தில் 9 விதமான விரத வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அந்த 9 விதமான விரதங்கள் பற்றி காணலாம்.

கேதார கவுரி விரதம் :

அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரையுள்ள 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். சாஸ்திர நியமங்களின்படி இந்த விரதம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவது எனினும், தற்போது ஐப்பசி மாத அமாவாசையன்று மட்டும் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
திருக்கயிலையில் சபா மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். தேவலோகத்தினர் இறைவனையும், தேவியையும் வணங்கிச் சென்றவண்ணமிருந்தனர்.

அப்போது பிருங்கி முனிவர், பிற முனிவர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தார். தம் வழக்கப்படி உமாதேவியைத் தவிர்த்துவிட்டு இறைவனை மட்டும் வலம்வந்து வணங்கினார்.

முனிவர் தன்னை வணங்காததால் கோபம்கொண்ட தேவி இறைவனை நோக்கி, “”திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் என்னை வணங்கும்போது பிருங்கி முனிவர் மட்டும் என்னை வணங்கு வதில்லையே’’ என்றாள்.

இறைவன், “”நாயகியே, உலகத்தில் காமியம், மோட்சம் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. காமியத்தை விரும்புபவர் உன்னையும் என்னையும் பூஜித்து உன்னருளால் போக போக்கியங்கள், அழகு, நிணம், குருதி, தசை முதலியவற்றைப் பெற்று உலக இன்பத்தை அனுபவித்து முடிவில் உனது பதவியையும் பெறுவர். மோட்சத்தை விரும்புபவர்கள் என்னை மட்டும் பூஜிப்பர். அத்தன்மையால் பிருங்கி முனிவர் என்னை மட்டும் வணங்குகிறார். நீ கோபம் கொள்ளாதே’’ என்றார்.

இதனைக்கேட்ட தேவி, “”எனது அம்சங்களை விட்டுவிட்டு அவர் மோட்சம் அடையட்டும்‘’ என்று கூறினாள். தேவி கூறியதைக் கேட்டு முனிவர் தன் தவ வலிமையால் தேவியின் அம்சங்களான தசை, குருதி, நிணம் முதலியவற்றை உதிர்த்து வெறும் எலும்புருவானார். சிவபெருமான் அவரது தவ வலிமைக்கிரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றையும், தேவை யான வலிமையையும் கொடுத்தருளினார்.

தன்னைத் துதிக்காத பிருங்கி முனிவரை இறைவன் ஆட்கொண்டதால் தேவியானவள் நாணி, கயிலாயத்தை விட்டிறங்கி பூவுலகிலுள்ள தண்டகாரண்யம் சென்றடைந்தாள். மழையின்மையால் வறண்டிருந்த தண்டகாரண்ய வனம் தேவியின் வருகையால் செழிப்புற்றது. வனத்தில் ஏற்பட்டிருந்த ரம்யமான மாற்றத்தைக் கண்டு, அங்கு தவம் செய்துகொண்டிருந்த கௌதம முனிவர் தேவியின் வருகையை உணர்ந்தார். தேவியை எதிர்கொண்டழைத்து வணங்கினார்.

கயிலையிலிருந்து தான் பூலோகம் வந்ததற்கான காரணத்தைக் கூறி தன் தவறை உணர்ந்தவளாய், “”என் நாயகரை இனி நான் எவ்வாறு அடையலாம்? அதற்கேற்ற விரதம் ஒன்றினைக் கூறுங்கள்’’ என்று முனிவரிடம் கேட்டாள். கௌதம முனிவர் கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறி, அவ்விரதத்தை அனுஷ்டித்தால் இறைவன் திருவருளைப் பெறலாம் என்று கூறினார்.

அதன்படி கௌரிதேவி கேதாரம் என்னும் தலத்தில் அந்தக் கரணங்களையும் ஐம்பொறிகளையும் அடக்கி விரதம் இருந்து “”ஐயனே, தங்கள் அடியார்க்கு யான் பேதமையால் செய்த குற்றத்தைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்‘’ என துதித்தாள். கௌரிதேவியின் பக்தியில் திருப்தியுற்ற இறைவன் தேவியை ஏற்றுத் தன் இடப்பாகத்தில் அமரச் செய்தார். தேவர்கள் கேதார கௌரி விரதத்தின் பெருமையை உணர்ந்து தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தனர்.

பார்வதிதேவி இவ்விரதத்தை அனுஷ்டித்து இறைவன் அருளால் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதால், கணவன்- மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழவேண்டும் என்பதையே இவ்விரதம் உணர்த்தும் தத்துவமாகக் கொள்ளலாம். “கேதார கௌரி விரதத்தை மேற்கொள் பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்‘ என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர்.

சித்தி விநாயக விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்களங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம் :

புரட்டாசி வளர்பிறை சப்தமியில, உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க, அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பிடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம்புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்பெறும்.
 
மஹாலக்ஷ்மி நிலைத்திருக்க!
 
1. ஸ்ரீஸுக்தம் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீஸுக்தம் என்பது வேதம் என்னும் உத்யானத்தில் பாரிஜாத மரம் போன்றது. வாக்குகளுக்கு அப்பாற்பட்ட லட்சுமியின் பெருமைகளை உணர சாதுக்களுக்கு ஸ்ரீஜுக்தம் கண்களாக அமைந்திருக்கின்றது என்கிறார் மகாகவி வேங்கடாத்ரீ. ஸ்ரீஸுக்தத்தில் லட்சுமி தன்னிடம் வந்திருக்க வேண்டும் என்று வேண்டப் பெறுகிறது. இது வேள்வியின் மூலம் மகாலட்சுமியின் அருளைப்பெறும் வழியை காட்டுகிறது. இது செய்ய இயலாதவர்கள் பாராயணம் செய்யலாம்.

2. பாராயணம்: கனகதாரா தோத்திரம் ஸ்ரீஸ்துதி போன்ற திருவருளும் தேவியின் பெருமை பேசும் திருநூல்களை தினமும் பாராயணம் செய்து வரலாம். பாராயணம் செய்யவும் இயலாதவர்கள் ஜபம் செய்யலாம்.

3. ஜபம்: வில்ல மரத்தடியில் அமர்ந்து ஹக்ரீவ மந்திரத்தை ஜபித்தாலும் திருவருளைப் பெறலாம்.

4. விரதங்கள்: சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருட்கண்ணோக்கம் பெறலாம். அவையாவன:

சம்பத் கவுரி விரதம் மங்ளகவுரி விரதம்
கஜ கவுரி விரதம் தனவிருத்தி கவுரி விரதம்
லலிதா கவுரி விரதம் துளசிகவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம்
சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம்
சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம்
மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு தரும்.

கபிலா சஷ்டி விரதம் :

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக