புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளி!

தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர் திருமலைநாயக்கர். வாராணாசியில் தீபாவளியை ஐப்பசி(துவா) பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். மராட்டிய மன்னன் வீர சிவாஜிக்கு சத்ரபதி பட்டம், தீபாவளி நாளில்தான் வழங்கப்பட்டது. ஆந்திராவில் தீபாவளி குமுதினி மகோத்சவம் என்ற பெயரில் நடக்கிறது. அன்றைய தினம் எருமை மாட்டை குளிப்பாட்டி மகிழ்வர். பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசத்தில் வழங்கும் கதையின்படி, சீதையை ராவணனின் சிறையிலிருந்து மீட்டு ராமபிரான் அயோத்தி திரும்பிய தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. 

வடமாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளியின் போது பசுவின் சாணத்தில் குடை போன்ற உருவங்கள் செய்து அவற்றை பூக்களால் அலங்காரம் செய்து, தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர். குஜராத்தில் தீபாவளி அன்று தான் புது வருடப் பிறப்பு நாள். வியாபாரிகள் புதுத் கணக்கைத் தொடங்கும் நாள் இது.  கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான். ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது. காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது. மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார். சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார். பஞ்சாபில் தீபாவளி நசிகேதனுக்கு எமதர்மராஜன் உயிர்ப் பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரமும் அளித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நரகாசுரனுடைய பட்டத்து யானையின் பெயர் சுப்பிரதீபம் என்கிறது பாகவத புராணம். தராசின் இருதட்டுகளும் சமநிலையில் இருப்பதுபோல தீபாவளி மாதமான ஐப்பசியில் மட்டும் இரவும் பகலும் சமஅளவில் இருப்பதால், அந்த மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. தீபாவளியன்று சிவன் பார்வதியுடன் தாயக்கட்டம் ஆடியதாக ஆதித்திய புராணம் கூறுகிறது. நரகாசுரனுடைய சேனாதிபதியான முரன் என்பவனை வதைத்தாலேயே கண்ணனுக்கு முராரி என்ற பெயர் வந்தது. இலங்கையில் தீபாவளியை சீதை விடுதலை பெற்ற நாளாக கருதி, அன்று லட்சுமி பூஜை செய்கிறார்கள். ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் தீபாவளியன்று பெருமாளுக்கு மட்டுமல்ல, ஆழ்வார்களுக்கும் புதிய வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.
பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; கால விவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. இமாசல மக்கள் தீபாவளியன்று பசுக்களை அலங்கரித்து மகிழ்வர். மத்தியப் பிரதேச மக்கள் தீபாவளியன்று குபேர பூஜை செய்வர் தீபாவளியன்று ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்

கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசத்தில் சாணம் அல்லது மாவினால் மகாபலியின் உருவம் செய்து வைத்து பூஜை செய்து அலாய பலாய தூர்ஹோ, ராஜா பலி ராஜ்ய லௌட்டோ(துன்பம் தொலையட்டும் நோய் நீங்கட்டும். ராஜா பலியின் ஆட்சி அகலட்டும்) எனக் கூறி வழிபடுகிறார்கள். வங்காளத்தில் கம்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த மகா துர்கையின் உக்ரத்தை சிவபெருமான் அடக்கிய நாளே தீபாவளி என்று கூறுகிறார்கள். மத்தியபிரதேசம், டில்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மகாலக்ஷ்மி தன் கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நன்னாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஆகாச பைரவ ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.
சகோதரப் பாசத்தை விளக்கும் தீபாவளி
எமதர்மன் உயிர்களைக் பறிப்பவன் என்பதால் செல்லும் இடம் எங்கும் அவனை வெறுத்தார்கள். ஒருசமயம் எமன், தன் சகோதரி எமியைக் காண அவள் வீட்டிற்குச் சென்றான். சகோதரனைக் கண்ட எமி மனமெல்லாம் பூரிப்போடு அவனை வரவேற்று நெற்றியில் திலகமிட்டு பலவகையான இனிப்புகள் மற்றும் உணவுகளால் உபசரித்தாள். அன்று முழுவதும் அவள் வீட்டில் தங்கியிருந்து, அவளது அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டான் எமன். புறப்படும்போது சகோதரியை வாழ்த்திச் சென்றான். அன்றைய தினம் ஒரு தீபாவளிநாள் என்றும், தீபாவளியன்று எவர் தன் சகோதரியிடமிருந்து நெற்றிக் திலகம் பெறுகிறாரோ அவரை எமன் துன்புறுத்துவது இல்லை எனவும் சொல்கிறது, வடநாட்டுக் கதை ஒன்று. இன்றும் சகோதர சகோதரிகள் இனிப்பு வகைகளைப் பகிர்ந்து கொண்டு திலகமிட்டு மகிழ்வது அங்கே வழக்கமாக உள்ளது.
மகாபலிக்காக கொண்டாடும் தீபாவளி
மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மூன்று அடி நிலம் தானமாகத் தருமாறு மகாபலிச் சக்கரவர்த்தியிடம் கேட்டார். மூன்றாவது அடிக்கு தனது தலையை தந்த மகாபலியை அழுத்தி  அவனை பாதாள உலகுக்கு அரசனாக பூமிக்கு அடியில் அமர்த்தினார் விஷ்ணு. தாயுள்ளம் படைத்த லட்சுமிதேவிக்கு அவன் பாதாள இருளிலே அடைந்து கிடப்பது கண்டு மனம் தாளவில்லை. மாபலிக்கு ஒளி தாருங்கள் என்று தன் கணவனான விஷ்ணுவிடம் வேண்டினாள். இதனால் ஆண்டுதோறும் ஆச்வின மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று மகாபலி மண்ணுலகுக்கு வரட்டும்; அன்று அவனுக்காக பூவுலக மாந்தர் அனைவரும் தீபம் ஏற்றி ஒளி பரப்பட்டும் என்று அருளினார் பரந்தாமன். அந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என ஒரு கதை நிலவுகிறது.
தீபாவால் வந்த தீபாவளி
ராஜகுமாரி தீபா சத்தியமே உருவானவள். அவளது தந்தை, இந்த தேசத்தின் வளத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்டபோது, தீபாவின் மூத்த சகோதரிகள் இருவரும் மன்னராகிய தங்களது மாண்புதான் இதற்கு காரணம் என்று கூறினர். ஆனால் கடைசிப்பெண்ணான தீபாவோ, திருமகளின் அருளால் தான் இவ்வளவு சுபிட்சங்களும் கூடியுள்ளன என்றாள். மன்னனுக்கு சினம் மூண்டது. மகளை நாட்டை விட்டு காட்டுக்குத் துரத்தினான். தீபா நாட்டை விட்டுச் சென்றதிலிருந்து வளங்கள் யாவும் குறையத் தொடங்கின. மழையில்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கின. காட்டிற்குச் சென்ற மங்கை, லட்சுமிதேவியைக் குறித்து தவமிருந்தாள். மகாலட்சுமி அவள் முன் தோன்றி, நீ இன்றே உன் நாடு திரும்பு, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்றாள். தீபா தன் நாடு திரும்பியதும் நாடு பழைய நிலையை அடைந்தது. மகளின் பெருமையையும், திருமகளின் அருளையும் உணர்ந்த மன்னன் ஆலயம் முழுவதும் விளக்கேற்றி வைத்தான். இதை நினைவூட்டும் வகையில் தீபாவளி விழா கொண்டாடப்படுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
சிவனை வழிபட்ட குபேரன்
தீபாவளி அன்று சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களைப் பெற்றார் குபேரன். இந்தப் புராண சம்பவம் கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாக புராணம் சொல்கறது. எனவே இக்கோயிலில் தீபாவளியன்று பலவித பட்சணங்களுடன் குபேர பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தில்
வாமன புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், துலா மாத மகாத்மியம் ஆகியன தீபாவளியை வெகுவாக சிறப்பிக்கின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச தேய்பிறை திரயோதசி முதல் வளர்பிறை பிரதமை வரையிலான நாட்கள் தீபாவளியுடன் தொடர்புடையன என்கின்றன புராணங்கள். தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகாலம் தோன்றிய தினம்-திரயோதசி; மறுநாளான சதுர்த்தசி அன்று மகாலட்சுமி வெளிப்பட்டாள்; அமுதமும் கிடைத்தது. அதேபோல், நரகாசுரன் வதைக்கப்பட்டதும், மகாபலி பாதாளம் சென்றதும் இதே தினத்தில்தான்!
லட்சுமி தேவியை வரவேற்க ரங்கோலி
வட மாநிலங்களில் சில பகுதிகளில் ரங்கோலம் எனப்படும் வண்ணக் கோலமிட்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இது வெள்ளை, மஞ்சள், கொக்கோ என்னும் மூன்று வண்ணங்களைக் கொண்டது. லட்சுமி தேவியை வரவேற்கவே இவ்வாறு வண்ணிக் கோலமிடுகின்றனர்.
திருஷ்டி கழிக்கும் வடை
ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. குஜராத் பகுதியில் வசிப்பவர்கள் குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவு, நோய் நொடி, ஏவல், சூனியம் போன்றவை நீங்கும் பொருட்டு தீபாவளிக்கு மறுநாள் வீட்டில் உளுந்து வடை தயாரித்து அந்தி வேளையில் நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அவற்றைக் எறிந்துவிட்டு திரும்பிப் பாராமல் வந்துவிடுவது வழக்கமாக உள்ளது.
கர்வசவுத் விரதம்!
தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் கேதார கவுரி விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அதேபோல் வடமாநிலங்களில், நவராத்திரி பிறகு வரும் பவுர்ணமி தினத்தன்று கர்வசவுத் என்ற பெயரில் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் கடும் உபவாசம் இருக்கும் பெண்கள், இரவில் மொட்டை மாடியில் நின்று ஜல்லடைத் தட்டு வழியாக பவுர்ணமி நிலவை தரிசித்துவிட்டு, கணவன் தரும் பழச்சாறு அருந்தி, தங்களது விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
வளமை சேர்க்கும் தீபாவளி
பீகார் பகுதியினர் தீபாவளி நாளில், பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டுக் கொளுத்துவர். இதனால், வறுமை விலகி வளமை சேரும் என்பது நம்பிக்கை. மூதேவியே விலகி ஸ்ரீதேவியை வருக! என வேண்டுவர்.
தங்க பைரவர்
காசியில் தங்கத்திலான கால பைரவர் உற்சவ விக்ரகம் உள்ளது. தீபாவளி நாளன்று மட்டுமே இந்த உற்சவர் பவனி வருகிறார். அன்று இவரை தரிசிப்பது அதிசிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
தீபோற்சவம்
தீபாவளியை பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன ஞான நூல்கள். பவிஷ்யோத்ர புராணம்- தீபாவளிகா என்றும்; காலவிவேகம் மற்றும் ராஜமார்த்தாண்ட நூல் சுகராத்திரி என்றும்; காமசூத்ரா- கூட ராத்திரி என்றும், நீலமேகம் புராணம் தீபோற்சவம் என்றும் குறிப்பிடுகின்றன. தஞ்சை-சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் ஆகாச பைரவி ஜபம் என்ற ஓலைச்சுவடிகளில் தீபாவளி மற்றும் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.
தீபாவளியன்று ராமாயணம்
குலு பள்ளத்தாக்கில் தீபாவளி தினத்தன்று ராவண உருவத்தின் மீது வண்ணக் கோலமிட்டு அதை எரிப்பது வழக்கம். அன்றைய தினம் ராமாயணத்தின் பல்வேறு சம்பவங்கள் குறித்து நாடகங்கள் நடத்தப்படும். மலை வாழ் மக்கள் குன்றுகளில் கோயில் கொண்டுள்ள தெய்வங்களை பேரிகை முழக்கத்துடன் ஊர்வலமாக ராமபிரானை தரிசிக்கக் கொண்டு வருவார்கள்.
மோனி தீபாவளி
வட மாநிலங்களில், தீபாவளியன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஐதிகம். அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கு எரியும். அந்த விளக்கில் படியும் புகைக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் கண் மையைத்தான் ஆண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இதை மோனி தீபாவளி என்கிறார்கள்.
நாய்கள் கொண்டாடும் தீபாவளி
நேபாள நாட்டில் தீபாவளி ஒட்டி கொண்டாடப்படும் விழாவில் நாய்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நாய்களுக்கு மாலை அணிவித்து அவற்றின் நெற்றியில் திலகமிட்டு வழிபடுகின்றனர்.
சத்பூஜா!
மத்தியப் பிரதேசம், இமாலயம் போன்ற இடங்களில், தீபாவளித் திருநாளை உழவர்களுக்குரிய தினமாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், புதுக்கதிர் அறுத்து எடுத்து வந்து இறைவனுக்கு சமர்பித்து வழிபடுவதுடன், மாடுகளை அலங்கரித்து அவற்றுக்கும் பூஜை செய்து வழிபடுவார்கள். பீகார் மாநிலத்து பெண்கள், தீபாவளிக்கு 7-ம் நாள் சத்பூஜா என்ற பெயரில் சூரியனை பூஜிக்கின்றனர். புதிய முறத்தில் ஐந்து வகை பழங்கள் வைத்து , சூரியனுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.
தீபாவளி அன்று எல்லா நீரும் கங்கையே...!
உலகில் உள்ள நதிகள் அத்தனையிலும் புனிதமானது கங்கையே என்கின்றன புராணங்கள்.
ந கங்கா முத்ரஸம் தீர்த்தம்
ந தேவா  கேசவத் பர: என்ற ஸ்லோகம், கங்கைக்கு நிகரான தீர்த்தமில்லை கேசவனுக்கு சமமான தெய்வமில்லை என்கிறது. மகாவிஷ்ணுவின் திருவடியில் உருவாகி, மகேஸ்வரனின் திருமுடியில் தங்கி பெருமை பெற்றது கங்கை. கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு புனித நதிகளுள் முதன்மையானது கங்கையே. கங்கைக் கரையில் அமர்ந்து ஒருமுறை ஜபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கங்கையை தரிசிப்பது, அதில் நீராடுவது, கங்கை நீரை அருந்துவது என எல்லாமே சகல பாவங்களையும் போக்கும் எவர் கங்கையை மனதால் நினைக்கிறாரோ அவரது இல்லத்தில் மகாலட்சுமி நீங்காது இருப்பாள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் கங்கையின் மகிமையை.
தீபாவளிக்கு முந்தைய நாளினை நீர் நிரப்பும் திருநாளைக் கொண்டாடுவது சில இடங்களில் வழக்கமாக உள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் நல்ல நேரம் பார்த்து தூய்மையான பாத்திரத்தின் வெளிப்புறம் விபூதி தடவி தூய்மையான குங்குமம் இட்டபின் பாத்திரத்தில் நீரை நிரப்புவர். அந்த நீரில் ஆல், அரசு, பலா, வேம்பு மரப்பட்டைகளை இடுவர். மறுநாள் அதாவது தீபாவளி தினத்தின் அதிகாலையில் அந்த நீரை சுட வைத்து அதில்தான் எண்ணெய் நீராடுவர்.
தீபாவளித் திருநாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம் உள்ளது. அதனால் உங்கள் வீட்டில் வழக்கமாக நீங்கள் குளிக்கும் நீர் கூட அன்றைய தினம் கங்கா தேவியின் அம்சம் நிரம்பியதாக இருக்கும். தீபாவளி நாளன்று எள் செடிகள் நிரம்பிய தில த்வீபத்தில் திருமகளின் திருமணம் நடந்தது என்பதால் அன்று நல்லெண்ணெயில் திருமகள் வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் அதிகாலையில் எழுந்து, தைலை லட்சுமி, ஜலே கங்கா தீபாவளி வசேத் என்று சொல்லிவிட்டு எண்ணெயையும். நீராட வெந்நீரும் எடுத்து வையுங்கள். புனித கங்கையை மனதால் துதித்து, உங்கள் பாவங்கள் எல்லாம் தொலைந்து புண்ணியம் சேருவதாக நினைத்தபடி நீராடுங்கள்.
கங்கே ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நதிம் குரு
கங்கை உள்ளிட்ட ஏழு புனித நதிகளும் இந்த நீரில் எழுந்தருளி புனிதமாக்கட்டும் என்ற இந்தத் துதியையும் சொல்லலாம். தீபாவளியன்று பூவுலகில் உள்ள எல்லா நீரும் கங்கையை. கங்கா ஸ்நானம் செய்யுங்கள். புனிதம், புண்ணியத்தோடு திருமகள் அருளும் உங்களுக்குக் கிடைக்கும். மேலும்
விஷ்ணோ: பாதப் ஏஸுதாஸி
வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத
ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர கோட் யோர்த்த கோடீச
தீர்த்தானாம் வாயுப்ரவீத்
திவிபுவ்யந்தரி÷க்ஷச தானிமே
ஸந்து ஜாஹ்னவி!
என்று பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக