புதன், 26 அக்டோபர், 2016

தனம் வர்ஷிக்கும் தன திரயோதசி!

பவுர்ணமியில் இருந்து 13வது நாள் வரும் திரயோதசி  தன்தேராஸ். அதாவது, தன திரயோதசி.

வட இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு கொண்டாட்டம்..... தீபாவளியை ஒட்டி வருகிற இந்த நிகழ்வு, செல்வத்தையும் வளத்தையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிற ஒரு நாள். இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் செல்வந்தர்களாகவும் குபேரர்களாகவும் வாழ்க்கைத் தரம் உயர்வதாக அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வட இந்தியர்களுக்கு உண்டு.

அந்த தன திரயோதசி தினத்தன்று விரதம் இருந்து தெற்கு நோக்கி விளக்கேற்றி தனலட்சுமி பூஜையும் செல்வங்களைப் பரப்பி குபேர பூஜையும் செய்வது வட இந்தியர்களிடையே காலங்காலமாகத் தொடரும் வழக்கம். தீபாவளிக்கு முதல் நாள் வரும் இந்தப் பண்டிகையை சின்ன தீபாவளி என்றே அவர்கள் அழைப்பார்கள்.

மருத்துவ கடவுள் என அழைக்கப்படுகிற தன்வந்திரி அவதரித்த நாள் இது. மருத்துவ கண்டுபிடிப்புகளையும் புதிய மருத்துவமனை திறப்புகளையும் கூட அந்த நாளில் வைத்துக் கொள்வதையே பலரும் விரும்புகிறார்கள்.

தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தையாவது வாங்காமல் இருக்க மாட்டார்கள். புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை என்று பளபளப்பான எதையாவது வாங்குவது அவர்களது வழக்கம்.

இதோ தன திரயோதசி நேபாளத்தில் டிஹர் விழா என கொண்டாடப்படுகிறது. ‘எம தீப் தின்’ என்கிறார்கள். அதாவது, எமனுக்கு தீபம் ஏற்றும் நாள் என அர்த்தம்.

தன்வந்திரி அவதரித்த நாள் என்பதால் தன்வந்திரி ஜெயந்தி என்றும் இதற்கொரு பெயர் உண்டு.

தீபாவளியை ஒட்டி வரும் பூச நட்சத்திர தினம், குரு பூசம் அல்லது ரவி பூசம் என அழைக்கப்படும். அதுவும் திரயோதசி அளவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்றும் தங்க நாணயங்கள் வாங்கி, கடவுள் சிலையில் ஒட்டி, வழிபடுவது வட இந்தியர்களின் வழக்கம்.

அனைத்து வட இந்திய வியாபாரிகளும், தங்கம், வெள்ளி, வைரம் விற்போர், பாத்திரம் விற்போர் அந்த நாளன்று லட்சுமி படத்தை வைத்து புதுக் கணக்கு போடுவதுபோல கணக்குப் புத்தகங்களை வைத்து அதன் மீது தங்கக் காசுகளைப் பரப்பி, அதன் மேல் வெள்ளிக் காசுகளை வைத்து, இனிப்புகள் வைத்து வியாபார இடங்களில் பூஜை செய்வார்கள். பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வார்கள்.

சென்னையில் அதிகளவில் வட இந்திய வியாபாரிகள் இருக்கும் பாரிமுனையில் தீபாவளியைவிட அதிகக் கொண்டாட்டத்துடன் இந்த நாள் களைகட்டும். அதே போல அவர்களது வீடுகளிலும் இந்தக் கொண்டாட்டம் அமர்க்களப்படும். 

பிறந்த வீட்டிலிருந்து பெண்களுக்கு தங்க, வெள்ளிக் காசுகளும் அன்பளிப்புகளும் கொடுப்பதையும் முக்கிய சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கிறார்கள். தன்தேராஸ் கொண்டாட்டத்தின் பிரமாண்டத்தைப் பார்க்க வேண்டுமானால் தீபாவளி சீசனில் வட இந்தியாவுக்கு ஒரு முறை விசிட் செய்யலாம். முடியாதவர்கள் பாரிமுனை, சவுகார்பேட்டை வரையிலாவது சென்று வரலாம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக