சனி, 2 ஜனவரி, 2016

விநாயகர் காரிய சித்தி மாலை!






பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம். 1

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம். 2
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம். 3
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 4
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம். 5
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 6
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம். 7
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம். 8

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும். 9
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார். 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக