சனி, 2 ஜனவரி, 2016

திருத்தணி திருப்படி திருப்புகழ் திருவிழா!

            
 திருத்தணி ஸ்ரீசுப்பிர மணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.  இக்கோவிலுக் குச் செல்லும் படிக்கட்டு கள் 365 என்பதால், ஓராண்டின் 365 நாட்களை நினைவு கூர்ந்து இங்கே ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தைப்பூசம், விசாகம், ஆடிக்கிருத்திகை ஆகிய திருவிழாக்களைப்போல் திருப்படித் திருவிழாவும் ஒரு முக்கியமான உற்சவமாக ஜனவரி முதல் தேதியன்று கொண்டாடப் படுகிறது. இந்தத் திருப்படி உற்சவத்தினை 31-12-1917 இரவு மற்றும் 1-1-1918 ஆகிய நாட்களில் முதன்முதலில் துவக்கி வைத்தவர் "வள்ளிமலை' சுவாமிகள் என்று கூறப்படுகிறது.



ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஏராள மானோர் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மற்றும் ஜனவரி முதல் தேதி காலையில் ஆங்கிலேயே அதிகாரிகளைப் பார்த்து, பழங்கள் முதலானவற்றைக் கொடுத்து "ஹேப்பி நியூ இயர்' என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இதைக்கண்ட"அர்த்தநாரி' என்ற இயற்பெயர் கொண்ட வள்ளிமலை சுவாமிகள், "நம்மை அடிமைப் படுத்தி ஆளும் அந்நியர்களைப் பார்த்து வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்கிறார்களே! அதற்கு மாற்றாக இந்நாளில் நம்மை நலமுடன் வாழவைக்கும் முருகப் பெருமானை தரிசித் துப் பலன் பெறலாமே.... தெய்வ வழிபாடுகளில் ஈடுபடலாமே' என்று எண்ணினார். அதன் விளைவுதான் திருத்தணித் திருத்தலத்தில் "திருப்படி உற்சவம்' ஆரம்பமானது. டிசம்பர் 31-ஆம் தேதி மலையின்மீது விளக்கு ஏற்றியும், ஜனவரி முதல் தேதி படிப்பூஜையும் நடைபெறலாயிற்று.


 


மலைமேல் அமைந்துள்ள கோவிலில் டிசம்பர் 31-ஆம் தேதி மலை தீபம் ஏற்றுவார்கள்.  திருப்படி திரு விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு திருப்படிக்கும் சிறப்பு பூஜை செய்து மஞ்சள் குங்குமம் பூசி வெற்றிலை பாக்கு, பூக்கள்,  பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்படும்.

 

 நூற்றுக்கணக்கான பஜனைக் குழுவினர், டிசம்பர்  31 அன்று  அதிகாலை சரவணப் பொய்கையில் புனித நீராடிய பின் ஒவ்வொரு திருப்படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ் பாடல் பாடியவண்ணம் 365 படிகள் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.

 அதேபோல் பெண் பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் மலைக்கோயிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.

படிப்படியாக ஏறிச்சென்றால், அதுவும் படிப் பூஜை செய்த வண்ணம் ஏறிச் சென்று இறைவனை தரிசித்தால், படிப்படியாக முன்னேற்றம் கிட்டுமென்ற நம்பிக்கையில் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அடிவாரத்திலிருந்து மேலே செல்ல வாகன வசதி இருந்தாலும், பக்தர்கள் இந்நாளில் 365 படிகள் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கவே விழைகிறார்கள்.


 
 
விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளித் தேரில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மலைக்கோயிலை வலம் வருவார். நள்ளிரவு 12.01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெறும்.

 தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்புத் தரிசனம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு தங்கத் தேரில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலை வலம் வருவார்.

 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மலைக்கோயிலில் உள்ள திருப்புகழ் பஜனை மண்டபத்தில், பல்வேறு பஜனை குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து பாடப்படும். விழாவையொட்டி, 31-ஆம் தேதி இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.

திருத்தணியில் நடைபெறும் "திருப்படி' உற்சவம்போல் பழனி, சுவாமிமலை, திருப் பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய முருகன் திருத்தலங்களிலும்; திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், குன்றத்தூர், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய மலைக் கோவில்களிலும் படிப்பூஜை விழா அக்கோவில்களின் சிறப்பு நாட்களில் நடை பெறுகிறது. திருப்படி வழிபாடு மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வும், சகல பாக்கியங்களும் பெற்று சுகமுடன் வாழலாம் என்பது ஆன்றோர் கூற்று.

திருத்தணி முருகர் திருப்படி திருவிழாவை தரிசித்து திருவருள் பெறுவோம்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக