வெள்ளி, 27 நவம்பர், 2015

வட மாநிலங்களிலும் கொண்டாடப்படும் சாத் என்கிற சஷ்டி விரதம்

           
                                     
தமிழ்க்கடவுள் முருகனை வட மாநிலத்தவர் "கார்த்திகேயன்' என்ற பெயரில் அழைப்பதோடு, இந்த சஷ்டி விரதத்தை "சாத்' என்ற பெயரில் தீவிரமான சிரத்தையுடன் மிகவும் பிரபலமான ஒரு விரதமாக அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்க் கையில் மிகச் சிறந்த புண்ணியங் களைப் பெற முடியும் என்று வடநாட்டு மக்கள் நம்புகின்றனர். பீகார், மத்தியப் பிரதேச மாநிலங் களில் பல இடங்களிலும், உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளிலும் இந்த விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்த மறுநாளான பிரதமையன்று "சாத்' விரதம் துவங்கி தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களுமே விரதத்தின் முக்கிய அங்கமாக, "விரதம் அனுஷ்டிப்பவர்கள் பொய் பேசக்கூடாது' என்ற கட்டுப்பாடு நிலவுகிறது.

ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் மூன்றாவது நாள் முடிந்து நான்காம் நாள் விரதத்தை ஆரம்பிக்கின்றனர். இந்த மூன்றாம் நாளை "நகான் கானா' (குளித்து விட்டு சாப்பிடுதல்) என்றே அழைக்கின்றனர். விரதத்தின் முதல் நாள் "கர்ணா' என்று அழைக்கப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் தண்ணீர்கூட அருந்துவதில்லை. பூஜைக் குரிய நிவேதனம் தயாரிக்க புதிய பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இறைவனுக்குப் படைக்கப் படும் கீர், பூரி போன்றவற்றுக்குக்கூட புதிய கோதுமை வாங்கி வீட்டிலேயே சுத்தமாக அரைத்து மாவாக்கி அவற்றைச் செய்கின்றனர்.

இந்த "சாத்' விரதத்தின்போது பல பகுதிகளிலும் சூரிய பகவானும் வழிபடப்படுகிறார். இந்த விரத நாட்களில் கார்த்திக் பகவானுக்குரிய (முருகன்) பூஜையில் முதலில் "கணேஷ்கி' (விநாயகருக்கு) தனி பூஜை உண்டு. விரதம், பூஜை ஆகியவை முடிந்த பின்னர் "போக்' எனப்படும் சிறப்பு விருந்து உண்டு. இந்த விருந்து உண்ணும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்ற ஐதீகம் உள்ளது. ஒருவரையொருவர் பெயர் சொல்லிக்கூட கூப்பிடுவதில்லை.

அப்படி யாராவது மறந்து போய் அழைத்து விட்டால், விரதம் அனுஷ்டிப்பவர் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விரதத்தை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டுமாம். பீகார் மாநிலத்தில் இந்த சாத் விரதம் மிகவும் பிரசித்தமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாட்களில் சூரிய பகவானுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.

சூரிய பகவானை வழிபடும் "சாத்' விரதத்தின் மூன்றாம் நாள் முதல் மக்கள் ஒரு புதிய முறத்தில் கொப்பரைத் தேங்காய், கரும்புத் துண்டுகள், வெள்ளை முள்ளங்கி, இனிப்புகள், மலர்கள், முளைவிட்ட தானியங்கள், "கஜுரி' எனப்படும் மைதா இனிப்பு ஆகியவற்றோடு, சூல்டா என்ற இளஞ்சிவப்பு வண்ணக் காகிதங்களையும் வைத்து அருகிலுள்ள ஆறு, நீர்நிலைகளுக்கு மாலை நேரத்தில் சென்று, தண்ணீரில் நின்றபடியே முறத்தை இரு கைகளில் ஏந்தி சூரிய பகவானை வணங்கி, முறத்தில் உள்ள பொருட்களை சூரியனுக்கு அப்படியே தண்ணீரில் அர்ப்பணித்து விடுகின்றனர்.

பின் அமைதியாக கரையில் அமர்ந்து சூரிய வழிபாடு செய்கின்றனர். இந்த சூரிய வழிபாடு "சாத்' விரதத்தின்போது ஒரு சமுதாய விழாவாகவே கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நீர்நிலைகளின் கரைகளிலேயே அவர்கள் தங்கிவிடுகின்றனர். முறத்தில் வைக்கப்படும் எஞ்சிய பொருட்களை பிரசாதமாக உண்டு மகிழ்கின்றனர். பொழுது புலரும் வேளையில் மீண்டும் சூரிய பகவானை வரவேற்று வணங்கி அவர்கள் வீடு திரும்புகின்றனர். "கந்த சஷ்டி' என்ற கார்த்திகேய வழிபாட்டினையொட்டிய விரதம், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஒரு முக்கியமான பக்திச் சிரத்தையோடு அனுஷ்டிக்கப்பட வேண்டிய விரதமாக விளங்கி வருகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக