சனி, 28 நவம்பர், 2015

சௌபாக்ய சுந்தரி விரதம்



பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.

அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் இவ்விரதத்தில் அன்னையை சௌபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும்.

தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

இவ்விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

இது அகண்ட வரதானம் பெற்றுத் தரும் விரதங்களுள் ஒன்று.

ஒரு சமயம் சில யோகினி தேவதைகள் பார்வதி தேவியின் தோழியரான ஜெயா, விஜயாவிடம்  "தேவியை மகிழ்வித்து வரம் பல பெற சுலபமான விரதம் எது? எனக் கேட்க, அவர்கள் "சௌபாக்ய சுந்தரி" விரதத்தை விரிவாகக் கூறினார்கள். எவ்விரதத்தை அனுசரிப்பதால் குடும்பம் செழித்து விளங்கும்.

விரத நாள்:

இவ்விரதம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை (அக்ஷய திருதியை) அன்றும், கார்த்திகை மாதம் தேய்பிறை திருதியை (கார்த்திகை பௌர்ணமிக்குப் பிறகு வரும் திருதியை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது.

விரத முறை:

விரத தினத்தில் அதிகாலை நீராடி  முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி  சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.

மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண் மை,  மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவக்ரகங்களை வணங்க வேண்டும்.

பின்னர் சிவ பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் ,  தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் யாரேனும் இருவருக்கு  உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.









 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக