நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. இதை சிவபெருமானிடம் கேட்டார்கள்.
அதற்கு ஈசன், “யார் என்னுடைய அடியையோ அல்லது முடியையோ காண்கிறார்களா அவர்களே பெரியவர்கள்.“ என்றார் சிவபெருமான்.
சிவபெருமானின் அடியை காண்பதற்காக ஸ்ரீமகாவிஷ்ணு, வராக அவதாரமெடுத்து பூமியை துளைத்துக்கொண்டு சென்றார்.
ஆனால், சிவபெருமானின் அடியை காணமுடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் ஸ்ரீமகாவிஷ்ணு.
பிரம்மா, அன்னப்பறவையாக மாறி ஈசனின் முடியை காண பறந்துசென்றார்.
எத்தனை உயரம் பறந்தும் ஈசனின் முடியை காணமுடியாமல் சோர்வுற்றார் பிரம்மா. அப்போது, ஈசனிய் சிரசில் இருந்து ஒரு தாழம்பூ பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருந்தது.
அந்த தாழம்பூ சிவனின் சிரசில் இருந்துதான் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்ட பிரம்மா, தாழம்பூவை எடுத்துக்கொண்டு விஷ்ணு பகவானிடம் சென்று, “ஈசனின் முடியை கண்டேன். அதற்கு சாட்சி இந்த தாழம்பூ.” என்றார்.
தாழம்பூவும், ”ஆமாம்… பிரம்மா சொன்னது உண்மைதான்.” என்று பொய் சாட்சி சொன்னது.
அப்போது, சிவபெருமான் அங்கே தோன்றினார். பிரம்மாவும் தாழம்பூவும் பொய் சொல்கிறார்கள் என்பதால் கடும் கோபம் அடைந்தார்.
“படைக்கும் தொழிலில் உள்ள பிரம்மா பொய் சொன்னதால் இனி பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயம் இன்றி வழிபாடு இன்றி போகட்டும். பிரம்மாவுக்குகாக பொய் சாட்சி சொன்னதால் தாழம்பூ இனி சிவ வழிபாட்டுக்கு உகந்தது இல்லை.” என சிவபெருமான் சபித்து விடுகிறார்.
பிறகு விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலையாகும்.
அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும்.
சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர், சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி, பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார்.
உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான், சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன்.
சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி, தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான், சக்திதேவிக்கு காட்சி தந்து, தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
ஆகவே, கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும்.
திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள், மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள்.
பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை, ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது.
மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
அவ்வேளையில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சிகொடுத்ததுபோல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.
மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து, கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும், கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் .
இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும்.
இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து, சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.
அண்ணாமலைக்கு அரோகரா!
* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.
* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
* திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவர் சந்ததி தழைக்கும். அவருக்கும் மறுபிறப்பும் இல்லை.
* திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவர் பாக்கியவான் ஆகிறார்.
* கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.
* திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவர் கூட முக்தி அடைகிறார்.
* தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.
* கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான். அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக