செவ்வாய், 26 ஜூலை, 2016

மகரம், கும்ப ராசிக்கு மாமியார் மருமகள் பிரச்னையைத் தீர்க்கும் இறைவன்


‘‘எனக்கு எல்லாருமே ஒண்ணுதான்’’ என்பதுதான் மகர ராசிப் பெண்களின் அடிப்படை குணமாக இருக்கும். பெற்ற தாய், தந்தையைப் போலவே மாமனார், மாமியாரையும் நேசிப்பீர்கள். புகுந்த வீட்டில் நுழைந்தவுடன் கள்ளங் கபடமில்லாமல் எல்லோரையும் நூறு சதவீதம் நேசிப்பீர்கள். மகரச்சனி என்பதால் வேகமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வீர்கள். அதேசமயம் சூழ்நிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் நீங்கள்தான். புகுந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவீர்கள். அதனால் எடுத்தவுடனே உணர்ச்சிகரமாக முடிவெடுக்க வேண்டாம். ‘‘இந்த வீட்ல இவங்க இப்படியெல்லாம் இருப்பாங்கன்னே தெரியாது’’ என்றெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில், பொதுவாகவே மகர லக்னம் அல்லது மகர ராசியில் பிறந்தவர்களின் மாமனார், மாமியாரிடையே எப்போதும் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல், இருவரிடமும் பேசிக்கொண்டு ஒட்டியும், ஒட்டாமலும் இருந்து விடுவது நல்லது.



உங்களின் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மகர ராசிக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதியான சனியும், சுக்கிரனும் நெருங்கிய நண்பர்கள். அதனால் உங்களின் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் மாமியார் எளிதாகப் புரிந்து கொள்வார். எல்லா விஷயத்தைப் பற்றியும் ஏதேனும் ஒரு கருத்து சொல்வார். எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கவே விரும்புவார். நீங்கள் அடிக்கடி புகழ்ந்து கொண்டே இருந்தால் போதும்... எல்லா வகையிலும் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் அவர் காதில் போட்டு வையுங்கள். ‘‘உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன்’’ என்று பேசுங்கள். ஏனெனில், துலாச் சுக்கிரன் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், ‘‘எங்கிட்ட சொல்லாம யாரும் எந்த காரியமும் செய்ய மாட்டாங்க’’ என்கிறமாதிரி பெருமை பேசுகிறவராக மாமியார் இருப்பார்.

கலாரசனை மிகுந்தவராக இருப்பார். ‘‘இந்த வீடு கட்ட ஆரம்பிச்சதுலேர்ந்து முடிக்கற வரைக்கும் எல்லாமே என் ஐடியாதான். பெயின்ட் கலர்லேர்ந்து டைல்ஸ் வரைக்கும் என் சாய்ஸ்தான்’’ என்று பேசுவார். அதேபோல தோட்டம், கொலு வைத்தல் போன்ற விஷயங்களில் எல்லாம் மிகுந்த ஆர்வம் காட்டுவார். பாரம்பரியமான விஷயங்கள் எதையும் விடாமல் பின்பற்றுபவராக இருப்பார். உங்கள் மாமியாருக்கு அவ்வளவாக வயது தெரியாது. அத்தனை தூரம் உடலையும் மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்கவே முயற்சிப்பார். ‘‘கஷ்டமெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி வாழ்க்கையை நிம்மதியா வச்சுக்கணும். வீட்லயே உட்கார்ந்திருக்காம நாலு ஊருக்கு போயிட்டு வாம்மா’’ என்பார்கள். அவரும் பிரயாணப் பிரியராக இருப்பார். ஆளுமையும், அன்பும் சம அளவில் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை பலவீனமாக இருந்தால்தான் மாமியார் கொஞ்சம் அதிக கெடுபிடிகளோடு இருப்பார். மற்றபடிக்கு மாமியார் குறித்து எந்தக் கவலையும் வேண்டாம்.
மகர ராசிக்காரர்களின் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். இங்குதான் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். மாமியாருக்கு சுக்கிரன் அதிபதியாக வருகிறார். தேவ குருவுக்கும், அசுர குருவான சுக்கிரனுக்கும் ஆகாது என்பதால், மாமனார் - மாமியாருக்குள் ஏதேனும் சிறு சிறு பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கும். அதில் நீங்கள் அவ்வளவாக தலையிடாமல் இருப்பது நல்லது. மாமனார் ஸ்தானத்திற்கு குரு அதிபதியாக இருப்பதால், சிறு சிறு விஷயங்களில் கூட அவர் நேர்த்தியை எதிர்பார்ப்பார். ‘‘வச்சது வச்ச இடத்துல இல்லேன்னா எனக்கு கோபம் வரும்’’ என்று கூறுவார். சில விஷயங்களை அவ்வப்போது குத்திக் காட்டுபவராக இருப்பார். ‘‘ஏம்மா... பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணுமே. மே மாசம் வந்துடுச்சே’’ என்று எல்லாவற்றிற்கும் முன்னதாகவே தயார்படுத்துவார். எல்லா விஷயங்களையும் தர்க்கரீதியாக அணுகுவார். ‘‘உன் மாமியாருக்கு வாழ்க்கைல இருக்கற கஷ்டங்கள் எதுவும் தெரியாது. அதனால அவ ஜாலியாத்தான் இருப்பா. ஆனா, கஷ்டத்தை தெரிஞ்சுக்கணும்’’ என்று அவ்வப்போது ஏதேனும் உபதேசிப்பார். உங்களுக்கு பொதுவாகவே மாமனார், மாமியார் பிரச்னைகள் அவ்வளாக இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். அடிப்படையாக வரும் சிறுசிறு உரசல்களை தாண்டி பெரியளவில் ஒன்றும் பாதிப்பு இருக்காது. 



உங்கள் ராசிக்கு மாமனாருக்கு உரியவராக மீன குரு வருகிறார். மாமியார் ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் வருகிறார். எனவே, அம்பிகை சந்நதியும், ஞானியரின் ஜீவ சமாதியும் ஒரே தலத்தில் இருப்பதுமான கோயில்களுக்குச் சென்றால் பிரச்னைகள் கரையும். அப்படிப்பட்ட தலமே திண்டிவனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே இருக்கும் திருவக்கரை ஆகும். இங்கு வக்ரகாளி அருள்பாலிக்கிறாள். அதேசமயம் கோயிலின் உள்ளுக்குள்ளே குண்டலினி சித்தரின் ஜீவ சமாதியும் உள்ளது. மிகுந்த அதிர்வலைகளோடு உள்ள சந்நதியாகும். வக்ரகாளியின் வெம்மையும், ஞானியரின் ஜீவசமாதி தரும் தன்மையும் ஒரு புதுமையான புத்துணர்ச்சியைத் தரும். இருவரையும் தரிசித்து வாருங்கள்... பிரச்னைகள் எளிதில் தீரும். 

கும்பம் என்பது குடத்தைக் குறிக்கும். உள்ளுக்குள் நீர் இருக்கிறதா இல்லையா என்பது நெருங்கிப் பார்த்தால்தான் புரியும். அதுவரை அது ஏதோ ஒரு பொருள் என்பதாகத்தான் கண்ணுக்குப் படும். அதுபோலத்தான் கும்பத்தில் பிறந்தவர்களும் இருப்பீர்கள். ‘‘இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு எப்படி அமைதியா இருக்கீங்க...’’ என்பார்கள் உங்களை. அதே சமயம், ‘‘அவங்க ரொம்ப அழுத்தமானவங்க. மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது. சரியான அமுங்குனி’’ என்று பேசவும் செய்வார்கள். இதுதான் கும்ப ராசியின் அடிப்படை குணாம்சம்.



புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது பூனை மாதிரி இருப்பீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களை வெளிப்படுத்துவீர்கள். பத்து நிமிடம் உங்களோடு பேசியதற்குப் பிறகுதான் உங்களைப் பற்றிய விஷயத்தை சொல்லவே ஆரம்பிப்பீர்கள். உங்கள் ராசிநாதனாக சனி பகவான் வருகிறார். மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறது. அதேபோல உங்களின் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. சனிக்கு செவ்வாய் எதிர்மறைக் கதிர்வீச்சாக இருப்பதால் எப்போதுமே ஒரு பனிப்போர் இருக்கத்தான் செய்யும். அல்லது மாமனார், மாமியார் இருவரில் ஒருவர் நோய்வாய்ப்பட்டவராக இருப்பார். எனவே, கும்ப ராசிப் பெண்களாகிய நீங்கள், இருவரையும் புரிந்து நடந்து கொள்வது நல்லது.

முதலில் மாமியார் ஸ்தானத்தைப் பற்றிப் பார்ப்போம். விருச்சிகச் செவ்வாயாக இருப்பதால் சூட்சுமமான ஆளுமைத் திறனோடு இருப்பார். மிகுந்த நுண்ணறிவோடு எல்லா காரியங்களையும் செய்வார். எளிதாக எதிரேயுள்ளவரின் மனதைப் படித்து விடுவார். விருச்சிகத்தில் சந்திரன் நீசமாவதால் எல்லா விஷயத்திலும் அனுபவத்தில் உள்ளதை மட்டுமே பேசுவார். அதனாலேயே, ‘‘என் அனுபவத்துல சொல்றேன்...’’ என்றே பல விஷயங்களைக் கூறுவார். பல விஷயங்களை உங்களுக்கு முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் திறன் பெற்றிருப்பார்கள்.

அதே சமயம் வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்தும் உங்களிடம் அடிக்கடி பேசியபடி இருப்பார்கள். ஆனால், ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பார். ‘‘நீ இந்த அர்த்தத்துல பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை’’ என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவார். அவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று திணிக்கவும் செய்வார். அவ்வளவுதான்! உங்களின் சொந்த ஜாதகத்தில் செவ்வாய் நேரடியாக சனி, ராகு பார்வை பெற்றிருப்பின், மாமியார் சிறுசிறு விஷயங்களைப் பெரிதுபடுத்துவார். கோபத்தால் வீட்டில் சண்டை வந்தபடி இருக்கும்.

மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. அரசாங்கத்துறையிலோ அல்லது சமூகத்தில் செல்வாக்குள்ள மனிதராகவோ இருப்பார். கண்டிப்பும் கறாரும் மிக்கவராக விளங்குவார். உங்களின் ராசியாதிபதியான சனியின் எதிர்மறை கதிர்வீச்சாகவே மேஷச் செவ்வாய் வருவதால், மாமனார் உங்களை எளிதில் புரிந்து கொள்ள மாட்டார். எப்போதுமே பெரிய இடைவெளி இருக்கும். பின்னாளில் சொத்துப் பிரச்னைகள் ஏதாவது வருவதை இந்த அமைப்பு காட்டுகிறது. எனவே, சில சமயம் முன்னரே வீட்டில் அமர்ந்து எல்லா விஷயங்களையும் பேசி விடுவது நல்லது. இம்மாதிரி செவ்வாய், சனி அமைப்பிருப்பதால் தனிக் குடித்தனம் செல்லவே யோசிப்பீர்கள். எனவே, ஒன்றுக்கு நான்கு முறை மாமனார், மாமியாரோடு ஒவ்வொரு விஷயத்தையும் பேசி முடிவெடுங்கள். பொறுமை, சாந்தம் என்பதுதான் உங்களின் பொதுவான இயல்பாக இருப்பதால், எல்லாவற்றையும் எதிர்கொள்வீர்கள். ஆரம்பத்தில் சில பிரச்னைகள் இருந்தாலும் போகப் போக எளிதாகும்.

தனுசு ராசியினருக்கு மாமனார் ஸ்தானத்திற்கு மேஷச் செவ்வாயும், மாமியார் ஸ்தானத்திற்கு விருச்சிக செவ்வாயும் வருகிறார்கள். இவ்வாறு முழுக்க முழுக்க செவ்வாயின் ஆதிக்கமாக வரும்போது முருகனின் பூரண ஆதிக்கமுள்ள கோயிலை வழிபடுங்கள். அப்படிப்பட்ட தலம்தான் திருவிடைக்கழி முருகன் கோயிலாகும். இத்தலத்தில் முருகன் குரா மரத்தினடியில் அமர்ந்து சிவனை பூஜித்தார். சிவனும், முருகனும் ஒருவரே என்பதை உலகிற்கே உணர்த்தும் தன்மை பெற்றது இத்தலம்.

குரா மரத்தின் கீழ் சிவலிங்கத் திருமேனியுடன், முருகப் பெருமானின் திருமேனியும் ஒருங்கே அருளும் அரிய தலம் இது. சனிக்குள் இலகும் சிவாம்சத்தையும், செவ்வாயின் அதிபதியான முருகனும் ஒன்றாக இருக்கும் தலம் என்பதால் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள். சனி, செவ்வாயின் பகைக் கதிர்வீச்சுகளின் வீர்யம் இதனால் குறையும். முருகப் பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது. சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடு துறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத்தேடுவோம்...)

புஷ்ப யாகம்!


கவானைத் தினமும் பக்தியுடன் பூஜிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவம் வேறு எதுவுமில்லை.

இப்பிறவியில் மட்டுமல்ல; இதற்கு முன் நாம் எடுத்துள்ள பல பிறவிகளில் செய்துள்ள பாவங்களையும், அத்தகைய பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும்,  தோஷங்களினால் ஏற்படும் துன்பங்களையும் போக்குகிறது, தினமும் நாம் பகவானைப் பூஜிப்பதால் ஏற்படும் புண்ணிய பலன்!



எம்பெருமானை நம் குழந்தை போல் பிரேமையுடன் பூஜிக்கவேண்டும். நம் குழந்தை மீது  நாம் எத்தகைய பிரேமையையும், பாசத்தையும் வைத்திருக்கிறோமோ, அதே பாசத்தையும் பிரேமையையும் நாம் ஆராதிக்கும் பெருமானிடம் வைக்கவேண்டும்  என்பது  பொருள்.



அவரவர் மனோபாவத்திற்கு ஏற்ப, பகவானை ஆராதித்து, அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்கவேண்டும். சிலர் எம்பெருமானின் திருமேனி விக்கிரகத்திற்கு உயர்ந்த  ஆடைகளை அணிவித்து ஆனந்தப்படுவார்கள். வேறு சிலர், உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவனது அழகு திருக்கோலத்தைத் தரிசித்து மகிழ்வர். வேறு சிலர்,  பகவானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து ஆனந்தப்படுவதுண்டு.



நறுமணம் கொண்ட அழகான தூய மலர்கள் நம் பாரத புண்ணியபூமியில் ஏராளமாகப் பூக்கின்றன. அவை  அனைத்தும் இறைவனின் நந்தவனமாகிய இப்பூமியில் மலர்கின்றவையே!



இத்தகைய மலர்களை மாலையாகத் தொடுத்து பகவானுக்கு அணிவித்து அவனது பேரழகைத் தரிசித்து ஆனந்திப்பது, அம்மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது ஆகியவை  பக்தர்கள் யுகம் யுகமாகச் செய்து மகிழும் புஷ்ப கைங்கர்யமாகும்.



உயர்ந்த ஜாதி மலர்களைக் கொண்டு பகவானைப் பூஜிக்கும் முறையை பெரிய அளவில் செய்வதற்கு புஷ்ப யாகம் என்று  பெயர்.


 
இத்தகைய புஷ்ப யாகம்  திருப்பதி-திருமலை ஏழுமலையானின் திருச்சந்நிதியில் புஷ்ப யாக உற்சவமாக மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  வருடத்தில் ஒருநாள் புஷ்ப யாகம் செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.



புஷ்ப யாகம்!

இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தினமும் எம்பெருமானுக்குச் சாற்றப்படும் மலர் மாலைகள் மற்றும் அர்ச்சனை, ஆராதனைகள்  ஆகியவற்றுக்கு உபயோகப் படுத்தப்படும் புஷ்பங்களில் குறைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். பல காரணங்களினால் பல திருக்கோயில்களுக்குத் தினமும் அர்ச்சனை செய்வதற்கு துளசி மற்றும் மலர்கள் எதுவும்  கிடைப்பதில்லை. இத்தகைய குறைகள் பகவானின் சான்னியத்தியத்தைப் பாதிக்கக்கூடும். இவற்றை சரிசெய்வதற்காகவே திருக்கோயில்களில் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.



புஷ்ப யாகம் செய்வது மிகவும் கடினமானது. உயர்ந்த, தரமான புஷ்பங்கள் நிறைய வேண்டும். மேலும், ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்த வேத விற்பன்னர்களைக்  கொண்டு புஷ்பத்தை முதலில் அக்னியில் பிரதிஷ்டை செய்து, அதன்பின் அந்தப் புஷ்பங்கள் அனைத்தும் எம்பெருமானின் திருமேனி மீது மந்திரப் பிரயோகத்துடன்  அர்ச்சிக்கப்படுகின்றன.



முதலில் துளசிகளைக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளில் அர்ச்சிக்கப்படுகிறது. அதன்பின்பு, உயர்ந்த பல நிறமுள்ள புஷ்பங்கள் அவரது திருவடிக்கும் கீழே இருந்து  ஆரம்பித்து, அவரது திருமார்பு அளவுவரை வேத மந்திரங்கள், மற்றும் திவ்யப் பிரபந்த பாசுரங்கள் முழங்க சாற்றிக்கொண்டாடப்படுகிறது.



மிகப் பெரிய அளவில்,  உயர்ந்த ஜாதிப் பூக்கள் அனைத்தும் பகவானின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்போது, புஷ்பங்களின் நிலை உயர்ந்து கொண்டே சென்று, பகவானின் விக்கிரக திருமேனியைச் சிறிது சிறிதாக மறைக்கும்போது, கூர்ந்து பக்தியுடன் கவனித்தால், எம்பெருமானின் உதடுகள் சற்று விரிந்து புன் னகை மலர்வதைக் காணமுடியும். புஷ்பயாகத்தினால் எம்பெருமான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.



இத்தகைய புஷ்ய யாகத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம் பக்தர்களுக்கு ஏற்படுவதை அனுபவத்தில் காணமுடிகிறது.



சூளைமேடு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் புஷ்ப யாகம்!

‘தர்மமிகு சென்னை’ என்று பெரியோர்களால் புகழப்பட்ட சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் மிகப் புராதனமான, ஏராளமான திருக்கோயில்கள் திகழ்கின்றன. இன்று சென் னை மாநகரம் செல்வச் செழிப்புடன், தெய்வ பக்தி, கலை, கலாசாரம் ஆகியவற்றில் கற்பனைகளையும் மீறிய அளவிற்கு முன்னேற்றமடைந்து, லட்சக்கணக்கான குடும்பங் களுக்கு இருக்க இடம் தந்து, உணவளித்து வாழ்வு தருவதற்கு இத்திருக்கோயில்களின் சக்தியே காரணமாகும்.



அத்தகைய உன்னதமான திருக்கோயில்களில் ஒன்றுதான், மிகப் புராதனமான சூளைமேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலாகும். நம் நாடு மற்றும் மக்கள் மேலும் நலன்கள் பல பெற்று நல்வாழ்வு பெறவும், உலகம் அமைதி பெறவும் இத்தி ருக்கோயிலில், ஏகாதசிகளில் தனி தெய்வீக சிறப்பு பெற்ற கைசிக ஏகாதசியானயன்று அதிக பொருட்செலவில் மகா புஷ்ப யாக வைபவத்தை நடத்துகின்றனர்.

 

ஸ்ரீ தன்வந்திரி சந்நிதி!
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் சந்நிதி அளவற்ற சக்தி வாய்ந்த சந்நிதியாகும். இப்பெருமானுக்கு நேர்ந்துகொண்டு, பலவித நோய்களிலிருந்து  பூரண குணமடைந்த பக்தர்கள் ஏராளம்.

 
பகவானைத் தரிசிப்பது ஒன்று! ஆனால் அவனை புஷ்ப யாகத்தில் அனுபவிக்கும்  பேரின்பம் இருக்கிறதே அதற்கு ஈடாக எதையும் கூறமுடியாது.

ஆண்டுதோறும் திருக்கோயில்களில் செய்துவரும் புஷ்ப யாகம், அன்னப்பாவாடை, பவித்ர உற்சவம், லட்சார்ச்சனை, லட்ச தீபம் ஆகியவை, அறிந்தோ, அறியாமலோ தி ருக்கோயில்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து பகவானின் சிலா மற்றும் விக்கிரக திருமேனியின்  மகத்தான சக்தியைப் பாதுகாக்கின்றன.



புஷ்ப யாகத்தை தரிசிப்பது முன்வினைப் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.

கிடைத்தற்கரிய இது போன்ற வைபவங்களில்  பக்தியுடன் பங்கேற்று உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்க  வைக்கும் புஷ்ப யாகத்தைத் தரிசித்து  அருள் பெறுவோம்!

 

 

 

 

 
 

அன்னப்பாவாடை மகோற்சவம்!

  

  அன்னப்பாவாடை என்பது அன்னத்தால் படையல் செய்வது.
 
இதில் சாதம், சர்க்கரைபொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம், பருப்பு, பழவகைகள், இளநீர் ஆகியவற்றை படையல் செய்வது ஆகும்.

இதில் சர்க்கரை பொங்கலின் மீது குளம் மாதிரி செய்து அதில் நல்ல சுத்தமான நெய்யை காய்ச்சி ஊற்றி நெய்க்குளம் செய்வார்கள். இதில் அம்மனது திருவுருவம் காட்சியளிக்கும்.

இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த பலனை தரும்.
 
அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும் என்பது பழமொழி. 
 
 
 அரிசி என்பதில் அரியும் சிவனும் இருப்பதாக கூறுவார்கள். அரிசியின் வடிவமும் லிங்க ஸ்வரூபம் தான். மற்றொருவகையில் சாளக்கிரம வடிவமாகவும் நோக்கினால் விஷ்ணு அரிசியில் உறைகிறார். அரிசியை இறைக்கக் கூடாது என்பார்கள்.
 
அன்னம் பரப்ரம்ம சொரூபம் என்பார்கள்.
 
ஐப்பசி பவுர்ணமியில் ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
உலகத்து உயிர்கள் அனைத்திற்கும்  அன்னம் என்பது உணவு. இந்த உணவை தரும் அன்னபூரணி வடிவினள் அன்னை. அத்தகைய அன்னைக்கு நன்றிக்கடனாக அன்னப்பாவாடை என்னும் படையல் செய்து வழிபடுவது நம் மரபு.
 
ஜீவராசிகளுக்கு படியளக்கும் பரப்பிரம்ம சொரூபிணியான அன்னைக்கு ஆண்டில் ஒரு நாள் இப்படி அன்னப்பாவாடை என்னும் படையல் வழிபாடு செய்து போற்றுதல் தொன்று தொட்டுவரும் செயலாக அமைந்துள்ளது.


இந்த அருமையான படையல் நிவேதனம் தென்னகத்தில் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும் சித்திரை பூர்ணிமா  அன்று நடப்பது வழக்கம்.
 
அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர்சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

 சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டு களித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.


பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
 
இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அம்மனின் அருள் பெறுவோமாக!
 

 

கருட அஷ்டோத்திர சத நாமாவளி !

ஓம் வைநதேயாய நம:
ஓம் ககபதயே நம:
ஓம் காச்யபேயாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் தப்தகாஞ்சநவர்ணாபாய நம:
ஓம் ஸுபர்ணாய நம:
ஓம் ஹரிவாஹநாய நம:
ஓம் ச்சந்தோமயாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:


ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் குந்தேந்து தவளாநநாய நம:
ஓம் சக்ரபாணிதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் நாகாரயே நம:
ஓம் நாகபூஷணாய நம:
ஓம் விஜ்ஞாநதாய நம:
ஓம் விசேஷஜ்ஞாய நம:

ஓம் வித்யாநிதயே நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் புவநத்ராத்ரே நம:
ஓம் பயக்நே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்யச்சந்தஸே நம:
ஓம் மஹாபக்ஷõய நம:
ஓம் ஸுராஸுரஸுபூஜிதாய நம:
ஓம் கஜபுஜே நம:

ஓம் கச்சாபாசிநே நம:
ஓம் தைத்யஹந்த்ரே நம:
ஓம் அருணாநுஜாய நம:
ஓம் அம்ருதாம்சுவே நம:
ஓம் அம்ருதவபுஷே நம:
ஓம் ஆநந்தநிதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் நிகமாத்மநே நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிஸ்த்ரைகுண்யாய நம:

ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
ஓம் பராத்பரதரப்ரியாய நம:
ஓம் சுபாங்காய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஸூக்ஷ்மரூபிணே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் விஷாசிநே நம:

ஓம் விஜிதாத்மநே நம:
ஓம் விஜயாய நம:
ஓம் ஜயவர்த்தநாய நம:
ஓம் ஜாட்யக்நே நம:
ஓம் ஜகதீசாய நம:
ஓம் ஜநார்த்தநமஹாத்வஜாய நம:
ஓம் ஜநஸந்தாபஸஞ்சேத்ரே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் கல்யாணதாய நம:
ஓம் கலாதீதாய நம:

ஓம் கலாதரஸமப்ரபாய நம:
ஓம் ஸோமபே நம:
ஓம் ஸுரஸங்கேசாய நம:
ஓம் யஜ்ஞாங்காய நம:
ஓம் யஜ்ஞவாஹநாய நம:
ஓம் மஹாஜவாய நம:
ஓம் அதிகாயாய நம:
ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம:
ஓம் சங்கப்ருதே நம:
ஓம் சக்ர தாரிணே நம:

ஓம் பாலாய நம:
ஓம் பஹுபராக்ரமாய நம:
ஓம் ஸுதாகும்பதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் துராதர்ஷாய நம:
ஓம் அமராரிக்நே நம:
ஓம் வஜ்ராங்காய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வந்த்யாய நம:
ஓம் வாயுவேகாய நம:

ஓம் வரப்ரதாய நம:
ஓம் விநதாநந்தகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் விஜிதாராதிஸங்குலாய நம:
ஓம் பதத்வரிஷ்டாய நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் பாபக்நே நம:
ஓம் பாசமோசநாய நம:
ஓம் அர்நிஜிதே நம:
ஓம் ஜயநிர்க்கோஷாய நம:

ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம:
ஓம் வக்ரநாஸாய நம:
ஓம் ஸுவக்த்ராய நம:
ஓம் மாரக்சாய நம:
ஓம் மதபஞ்ஜநாய நம:
ஓம் காலஜ்ஞாய நம:
ஓம் கமலேஷ்டாய நம:
ஓம் கலிதோஷ நிவாரணாயயோம் நம:
ஓம் வித்யுந்நிபாய நம:
ஓம் விஸாலாங்காய நம:

ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம:
ஓம் ஸோமபாத்மநே நம:
ஓம் த்ரிவ்ருந்மூர்த்நே நம:
ஓம் பூமிகாயத்ரி லோசனாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸ்ரக்விநே நம:
ஓம் ஸ்வச்சந்தகதயே நம:
ஓம் அக்ரண்யே நம:

கருடப் பத்து!

1. ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.

2. மந்திரமோ அஷ்டதித்து மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.


3. மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுந்து மொழியலாமோ, சீலமுதல் ஓம் - அங் - உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும், காலமுதல் ஓம்-அங்-உங்-மங்- றிங் கென்றே கருணைபெரு மிவ்வெழுத்து நீர்தானாகும். ஆலவிஷங்கை யேந்துங் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


4. நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராராவென்றும், சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர் தானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற, அவ்வென்று ரகுராமா கெருடன்மீதில் அன்புடனே யேறி வந்தருள் செய்வாயே.


5. உதிக்கின்ற சிவசொரூப முனக்கே யாகும் ஓம் - அவ்வும் - உவ்வுங்கிலியு மென்றே, பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில்விட்டே பச்சை முகில்மேனியனே பணிந்தே னுன்னை, விதிக்கிசைந்த மெய்பொருளே அரி கோவிந்தா, விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித்தாதா, அதற்கிசைந்த நடம்புரியும் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


6. வேதமுதலா யிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையேசெய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதைபுத்ரா, நாதமுதல் விந்துவா யுயிருக்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


7. முக்கோண நாற்கோண மொழிந்தைங் கோணமுச்சுடரே யறுகோண மெண்கோணமாகும். சட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும், இக்கோணமிது முதலாய் வகாரமட்டும் இறையவனாய்த் தானிருந்து ரட்சித்தருளும், அக்கோணமீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


8. பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


9. வேதியனாய்த் தோன்றிவந்தாய் மாயலிக்கு விண்ணவர்க்காய், நரசிங்கரூபமாய்ச், சாதியிலே ராகவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து த்வந்திருந்தாய் தரணி வாழ்க, சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்துலோகமாள்வாய், ஆதிமுதலோரெழுத்தே நீகெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


10. மாயவனே ரகுராமா அருகேவாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா, காயாம்பூ நிறமுடனே கனவில்வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா, நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறும் முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத்துதித்தவனே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


11. முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகநாதா முன்னே வா வா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப் பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா, ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா, ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா, அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


12. துளபமணிமார் பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்பொருளே வரத்தைத்தாதா களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கம்சனை வென்றவனே கருணை தாதா, பழம் பொருளே சிவ சோதி பாக்கியந்தாதா பத்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந்தாதா, அளவில்லா மெய்ப்பொருளே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.


கருடப் பத்து முற்றிற்று.


 

மங்களம் அருளும் கருட பஞ்சமி!

ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார்.

விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு.

கருடஆபரணங்கள்.......கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பூணூல் - வாசுகி.
* இடது கையில் - ஆதிசேஷன்
* அரையில் அணி - தட்சகன்
* மாலை - கார்கோடகன்
* வலது காதில் - பத்மன்
* இடது காதில் - மகா பத்மன்
* திருமுடியில் - சங்கபாலன்
* வலது தோள்பட்டையில் - குளிகன்

கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும். கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். பெருமாள் கோவில்களில் இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணு தலங்கள் அனைத்திலும் கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருப்பார். கோவில் மதில்களில் நான்கு புறத்திலும், இவர் சிறகினை விரித்து பறக்க தயார் நிலையில் இருப்பதை காணலாம்.

கருடனை தன் வாகனமாக பெருமாள் ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும், பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள், கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

வாகனனுக்கு வாகனம்
தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. இதற்கு சான்றாக இருப் பது விஷ்ணு சகஸ்ரநாமம். இதில் வரும் 'சுபர்ணோ வாயு 'சுபர்ணோ வாஹன!' என்ற பதம் இதனை விளக்குகிறது.

தாயின் அடிமை விலங்கை உடைத்த கருடன்

காசியப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்து ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ எனக் கேட்டாள்.

அதற்கு வினதை ‘இதில் என்ன சந்தேகம்? வெள்ளை நிறம்’ என்றாள்.

‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள் கத்ரு.

விவாதம் வளர்ந்து போட்டியாக மாறியது. இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்ற நிபந்தனையை வகுத்துக் கொண்டனர்.

கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கருப்பு நிறமாக மாற்ற, தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்கோடகன் செய்ய, பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமை கொண்டாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்க எண்ணினார் கருடன்.

‘தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என்றாள் கத்ரு.

கருடனும், சரி என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர் களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன், தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.

இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். இந்திரனிடம் கருடன், ‘என் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதை கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு, நீங்கள் மறுபடியும் இதை இங்கு கொண்டு வந்து விடலாம்’ என்று கூறினார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தான்.

கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதை எடுத்துக் கொண்டு போய், கத்ருவிடம் கொடுத்தான். அவளும் வினதையை அடிமை தளையில் இருந்து விடுவித்தாள்.

கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திரஜித் எய்த நாக பாசத்தால், ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுப்பட்டு ராம, லட்சுமணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது. சூரியனின் ரத சாரதியான அருணன் கருடனின் சகோதரன் ஆவார்.

தாயாரின் அடிமைத்தனம் நீங்குவதற்காக வீரம், பலம், தைரியம், பணிவு, அடக்கம் நிறைந்த தாயன்புடன் செயல்பட்ட கருடனைக் கண்டு மகிழ்ந்த திருமால், ‘நீ எப்போதும் எனது வாகனம் ஆக கடவாய்’ என்று கூற, அவரும் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கி வருகிறார்.


கருட பஞ்சமி விரதமுறை

கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

ஒவ்வொரு வருஷமும் ஆடி அல்லது ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுவது, கருட பஞ்சமி என்று சொல்லப்படுகின்ற நாகபஞ்சமி நோன்பு. இதை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் விரதம் இருந்து செய்வார்கள்.

கருட பஞ்சமியன்று வீட்டைத் தூய்மை செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும். கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதிகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.

முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்தபின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து, மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களைக் கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்குவர். நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் மரபு.

அன்று விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும். சிலர் கூடுதலாக கருட பஞ்சமியன்று ‘பணிகௌரி பூஜை’யும் செய்வர். மாலையில் அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நைவேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயசமும் படைத்து வணங்குவர்.

கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச்சென்று நாக விக்ரகத்துக்கு பூஜை செய்து வழிபடலாம். சலக நன்மையும் உண்டாகும்.

இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால், அவர்கள் தீர்க்க சுமங்கலி யாக வாழ்வர் என்பது ஐதீகம். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

கருட தரிசனம் தரும் பலன்கள்

அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

ஞாயிறு– பிணி விலகும்.

திங்கள்– குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய்– துணிவு பிறக்கும்.

புதன்– பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன்– நீண்ட ஆயுள்.

வெள்ளி– திருமகள் திருவருள் கிட்டும்.

சனி– முக்தி அடையலாம்.

கருட மந்திரம்

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவரது பார்வைக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் ஆகும். அந்த கருட மந்திரம் இது தான்...

ஓம் தத்புருஷாய வித்மஹேசுவர்ணபக்ஷாய தீமஹிதன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் பக்ஷிராஜாய வித்மஹேசுவர்ணபக்ஷாய தீமஹிதன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

கருட மாலா மந்திரம்

ஓம்  நமோ பகவதே  கருடாய  காலாக்னி  வர்ணாய
ஏஹ்யேஹி  கால  நல  லோல  ஜிக்வாய
பாதய  பாதய  மோஹய  மோஹய  வித்ராவய  வித்ராவய
ப்ரம  ப்ரம  ப்ரமய  ப்ரமய  ஹந  ஹந
தஹ  தஹ  பத  பத  ஹூம்பட்  ஸ்வாஹா .

 கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

 

திங்கள், 25 ஜூலை, 2016

ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்!

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றிய எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவற்றை அளிக்கவல்லவை. ஸ்ரீராஜராஜேஸ்வரி என்றாலே, எல்லா கடவுள்களுக்கும் மேலானவள், சர்வ வல்லமை பொருந்தியவள், எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று பொருள்.

ஆனால், இந்த எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய்.  அதேபோல ஸ்லோக முடிவில் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் மேலானவள் என்று குறிப்பிடும் பதமாக ராஜராஜேஸ்வரி என்று முடிகிறது. எல்லா ஸ்லோகங்களுமே பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

பொதுப் பொருள்: தாயே, சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி, காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ, பைரவீ, சாவித்ரீ என பல ரூபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மையே, புதுப்புது இளமைத்தோற்றம் கொண்டவளே, சுபத்தைத் தருபவளே, சாம்ராஜ்ய சம்பத்தை அளிப்பவளே, ஆத்ம ஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ராஜ ராஜேஸ்வரியே நமஸ்காரம்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, மோகினி தேவதையே, மூவுலகத்தையும் ஆள்பவளே,, பேரானந்தம் தருபவளே, சரஸ்வதியே, இளந்தளிர்க் கரங்கள் கொண்டவளே, புல்லாங்குழல் இசையை பிரியத்துடன் இசைத்து மகிழ்பவளே, மங்களமானவளே, சந்த்ர பிம்பம் போன்ற பிரகாச முகம் கொண்டவளே, தூம்ராக்ஷனை வதம் செய்தவளே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ராஜ
ராஜேஸ்வரியே நமஸ்காரம்.

3. அம்பா நூபுர ரத்ன கங்கண தரீ கேயூர ஹாராவலீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீக்ரைவேயகை ராஜிதா
வீணா வேணு விநோத மண்டித கரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ரத்னத்தால் ஆன சதங்கை கைவளை கழுத்தட்டிகை பலவித ஹாரமாலைகள்  ஜாதி, சம்பக மாலைகள் வைஜயந்தி மாலை கழுத்து ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றுக்கு மெருகூட்டுபவளே, வீணை மற்றும் புல்லாங்குழல் இசைக்கும் திருக்கரங்கள் கொண்டவளே, வீராஸனத்தில் வீற்றிருப்பவளே, ஆத்ம ஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ரௌத்ரிணியே, பத்ரகாளியே, தீக்கொழுந்து ஒளிர்வதுபோன்ற முகம் கொண்ட பகலா தேவியே, வைஷ்ணவி, ப்ரஹ்மாணி, திரிபுராந்தகி, தேவர்களால் வணங்கப் பெறுபவளே, பளபளக்கும் ஒளிபடைத்தவளே, சாமுண்டா, அண்டியவர்களைக் காப்பவளே, அவர்களுக்கு ஆரோக்கியம் அருளும் தாயே, தாக்ஷாயணி, வல்லமை பொருந்தியவளே, ஆத்மஸ்வரூபிணி, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே, நமஸ்காரம்.

5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் தரித்தவளே, தலையில் அர்த்த சந்த்ரனைச் சூடியிருப்பவளே, வாராஹியே, மது-கைடபரை அழித்தவளே, சரஸ்வதி-லக்ஷ்மியாலும் துதிக்கப் பெற்றவளே, மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவளே, மாஹேச்வரி, அம்பிகையே, ஆத்மஸ்வரூபிணி, பரதேவதையே, பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காயத்ரி ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ஸ்ருஷ்டி-ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவளே, உயர்ந்தவளாக விளங்குபவளே, காயத்ரி-ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவற்றின் அமிர்த ரசமானவளே, ஓங்காரஸ்வரூபிணியே, தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவளே, அசுரர்களை முன்னின்று கொல்பவளே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, அழியாத தேவர்களால் போற்றப்படு பவளே, உயர்ந்த மஹாதேவதையாக விளங்குபவளே, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகன்மாதாவே, உலகோர் அனைவரையும் நேசிப்பவளே, பஞ்ச பூதங்களையும் உண்டாக்குபவளே, அனைத்திற்கும் மூலமானவளே, சித்கலா, மாலினியே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

8. அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ரராஜபடனா தந்தே சமோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவளே, உன்னைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தைப் படிக்கும் அனைவரும் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான். மேலும் உன்னுடைய இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு நீ மோக்ஷமளிப்பாய். நீயே ஆத்மஸ்வரூபிணி. பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே, நமஸ்காரம்.