புதன், 9 மார்ச், 2016

பொன்னும் பொருளும் நல்கும் பதிகம்!

 ஆக்கம்: திருஞானசம்பந்தர்
  தலம்: திருவாவடுதுறை                                      பண்: காந்தார பஞ்சமம்

 இடரினும் தளரினும் எனதுறு நோய்
 தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
 கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
 மிடறினில் அடக்கிய வேதியனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 வாழினும் சாவினும் வருந்தினும் போய்
 வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
 தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
 போழிள மதிவைத்த புண்ணியனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 நனவினும் கனவினும் நம்பா உன்னை
 மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான்
 புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
 கனல்எரி அனல்புல்கு கையவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
 அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
 கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
 மும்மதில் எரி எழ முனிந்தவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 கையது வீழினும் கழிவுறினும்
 செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
 கொய்யணி நறுமலர் குலாய சென்னி
 மையணி மிடறுடை மறையவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
 எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
 ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
 சந்த வெண் பொடியணி சங்கரனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 வெப்பொடு விரவியோர் வினைவரினும்
 அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
 ஒப்புடை ஒருவனை உருவழிய
 அப்படி அழல் எழ விழித்தவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
 சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
 ஏருடை மணிமுடி யிராவணனை
 ஆரிடர் படவரை அடர்த்தவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
 ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
 கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
 அண்ணலும் அளப்பரி தாயவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
 அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
 புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
 பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
 அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
 இலைநுனை வேற்படை யெம் இறையை
 நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
 விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

 வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
 நிலையாக முன் ஏறுவர் நிலமசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம்


நீங்கள் மேலே. காண்பது  பொன்னும் பொருளும் நல்கும் பதிகமாகும் . இதனை தினமும் படித்துவர பொன்னுக்கும் பொருளுக்கும் ஒரு போதும் குறைவிருக்காது.

திருஞானசம்பந்தரும் அவரது தந்தை சிவபாத இருதயரும் திருவாவடுதுறை தலத்தில் தங்கியிருக்கும் போது, சிவபாத இருதயர் தன் வேள்விக்காக தனது மகன் திருஞானசம்பந்தரிடம் பொன்னும், பொருளும் கேட்டார். சம்பந்தர் திருவாவடுதுறை இறைவன் மாசிலாமணீஸ்வரர் பால் மேற்கண்ட பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்தை கேட்ட இறைவன் அகமகிழ்ந்து தனது பூதகணங்களுக்கு கட்டளையிட, பூதகணங்கள் அள்ள அள்ள என்றும் குறையாத 1000 பொற்காசுகள் கொண்ட உலவாக்கிழியை பலிபீடத்தில் வைத்தன. அதனை எடுத்து சம்பந்தர் தம் தந்தைக்கு தந்தார். அப்பொற்காசுகளைக் கொண்டு சிவபாத இருதயர் சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி வேள்வி நடத்தி முடித்தார்.

உலவாக்கிழி வைக்கப்பட்ட பலிபீடம் இங்கு உள்ளது.. நந்திக்கு பின்புறமாக உள்ள பீடமே பலிபீடம் ஆகும். அப்பீடத்தினைச் சுற்றி பூதகணங்களின் உருவங்கள் உள்ளன. இங்கு நின்று இறைவனை வேண்டினால் வாழ்வில் பொன்னும், பொருளும் குறைவின்றி வந்து சேரும். இத்தலத்து உற்சவரின் பெயர் அனைத்திருந்த நாயகர். இறைவன் இறைவியை தழுவிக் கொண்ட வடிவம்.
இத்தலம் ஆண், பெண் ஒற்றுமையை தரக்கூடியது. பிரிந்த தம்பதிகள் இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபடில் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பது திண்ணம். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கிறது. இத்தலத்து இறைவன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு பிள்ளைப்பேறு அளித்தவர் ஆவார். இத்தலத்து இறைவனை முறையாக வழிபடில் பிள்ளைப்பேறு நிச்சயம். இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமும் ஆகும்.

இத்தலத்தில் சித்தர் திருமூலர் பெருமான் சமாதி அடைந்துள்ளார். இத்தலத்தின் தொன்மைப் பெயர் நவகோடி சித்தர்புரம் என்பது கவனிக்கத்தக்கது. சித்தர்கள் வழிபட்ட இறைவன் நம் வாழ்வில் ஒளியேற்றுவார் என்பது திண்ணம்.

நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.




 

செவ்வாய், 8 மார்ச், 2016

அனுமன் ஜெயந்தி வழிபாடு!

 
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
 
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
 
 வெற்றிலை மாலை வழிபாடு: அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
 
 செந்தூரம் ஏன்?  ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார். நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு.
 
 ஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர்: நேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.

"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்"

என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம்.

அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 5 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.
 
 வெண்ணெய் சாத்துதல் : ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.
 
 வடை மாலை: நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமாப எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.
 
சனி பகவான் பாதிப்பு நீங்கும்:இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார். `கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். 
 
 
 

திங்கள், 7 மார்ச், 2016

சகலமும் தருவாள் அரசு காத்த அம்மன் (எ) சம்பத்கரீஸ்வரி!

 
 
உலகதிற்கே தாயாக விளங்குபவள் காஞ்சி காமாட்சி! அந்த தாயையே பதுகாக்கும் தலைமை தெய்வமாக விளங்குபவள் அரசு காத்த அம்மன். சக்தி மிக்க இந்த தெய்வத்தை வணங்கி வருவோமா!

பார்வதி தேவி காஞ்சியில் தவம் செய்த போது அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் "அரசு காத்த அம்மன்" என்று பெயர் வந்ததாக கூறுவர் .

வலது காதில் குண்டலம், இடது கத்தில் தோடு அணிந்து இருப்பாள். இவள்  வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். இரு  கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் எந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் நகரை காவல் காக்கும் தெய்வங்களாக விளங்குவார்கள்.

சம்பத்கரீஸ்வரி!
அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது.

இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அம்பிகைக்கு பௌர்ணமி, வெள்ளி கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி, ஆடி, கடைசி வெள்ளிகிழமை அம்மன் உலா நடக்கும்.

சிறப்பு:
இங்கு சம்பத் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பால சுப்பிரமணியர், ஐயப்பன், சந்நிதிகள் உள்ளன.
அம்பிகையின் எதிரில் துதிக்கையால் ஒருவனை வதம் செய்யும் நிலையில் யானை சிற்பம் உள்ளது.

திருவிழா: சித்ரா பௌர்ணமி, நவராத்திரி, ஆடி, தை வெள்ளி.

திறக்கும் நேரம்: காலை 6 - 12; மாலை 4 - 8.30

இருப்பிடம்:  காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி. மீ.



 

ஞாயிறு, 6 மார்ச், 2016

சிவ சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் வேண்டுமா!

சிவோ மகேஸ்வரச்சைவ
ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:
ஸம்ஸார வைத்ய : ஸர்வேச
பரமாத்மா ஸதா சிவ:

மகேஸ்வரன், சிவன், ருத்ரன் எனப் போற்றப்படுகிற பரமாத்மா சம்சாரம் என்னும் பிணியைப் போக்குகிறவராகத் திகழ்கிறார்.

இந்த சிவபுராண ஸ்லோகத்தை தினமும் மும்முறை கூறினால் சிவ சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனும், புண்ணியமும் உண்டாகும்.


 

சியாமளா (மாதங்கி) நவராத்திரி!

  
புரட்டாசி மாதத்தில் சாரதா  நவராத்திரி  கொண்டாடுவது போல, சித்திரை  மாதம்  அனுசரித்தா வசந்த  நவராத்திரியும், ஆடி மாதத்தில் வாராஹி நவராத்திரி யும், தை  மாதத்தில் சியாமளா எனப்படும் ராஜ மாதங்கி நவராத்திரி யும்  கொண்டாடுவர்.

யாழ்ப்பாணர் குலத்தை வடமொழியில் மதங்கர் குலம் என்பர். அந்த குலத்தில் வந்தவர் மதங்க முனிவர். (ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே.) மதங்க  முனிவரின் தந்தை தேவி உபாசகர். அவரிடமே மந்திர தீட்சை பெற்ற மதங்கர், கடும் தவம் மேற்கொண்டு அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார்.
மதங்கர் முன் தோன்றிய அன்னை, ""நீ வேண்டும் வரத்தைக் கேள்'' என்றாள். மதங்கரோ, ""அன்னையே! காண்பதற்கரிய உனது காட்சியே கிடைத்தபின் வேறென்ன வேண்டும்! நான் வேண்டும் வரம் எதுவுமில்லை'' என்றார். அம்பிகை விட வில்லை. ""தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்றாள்.

மதங்கருக்கு இமவான் நண்பன். இமவான் தவம் செய்து பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான் அல்லவா? அந்த நினைவு மதங்கருக்கு வரவே, ""தாயே, வரம் தந்தேதான் ஆகவேண்டும் என்றால், தாங்கள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்'' என்றார். அன்னையும் இணங்கினாள்.

மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் திருமகளாக- சியாமளா அம்சமாக உதித்தாள் அம்பிகை. அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர். அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர்.
சியாமளா அம்சமாகப் பிறந்த தேவி, மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் சொல்வர். சியாமளம் என்றால் நீலம் கலந்த பச்சை நிறம். வடநாட்டில் தேவியை சியாமா என்பார்கள்.

சாக்த வழிபாட்டில் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, இந்த்ராணி, சாமுண்டி, வாராஹி, சியாமளா ஆகியோரை சப்த மாதர் என்பர்.

காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, கமலாத்மிகா, மாதங்கி ஆகிய பத்து தேவியரை தசமகாவித்யா என்பர்.

இவ்விரண்டிலும் சியாமளா எனப்படும் மாதங்கி இடம்பெறுகிறாள்.

"மாதா மரகத ஸ்யாமா மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீம் கடம்பவன வாஸினீம்
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பல நிலயே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே.'

"மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.''

மேற்கண்ட இரண்டு துதிகளைக் கேட்டாலே மகாகவி காளிதாசரின் நினைவு வரும். ஒன்றுமறியாப் பேதையாக இருந்தவனை காளிதாசனாக்கி, "ரகு வம்சம்', "குமார சம்பவம்', "மேக சந்தேசம்' போன்ற தலைசிறந்த நூல்களை இயற்ற வைத்தவள் மாதங்கிதேவி. காளிதாசன் வணங்கிய தேவியை உஜ்ஜயினியில் இன்றும் தரிசிக்கலாம்.

இந்த தேவியைப் பற்றி சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரு சகஸ்ரநாமங்கள் உள்ளன.

மாதங்கி அவதாரத்தைப்பற்றி, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது பிரம்மனின் மனதிலிருந்து ஒரு மகன் தோன்றினார். அவரே மதங்கர். (மதங்கம் என்றால் யானை.) பிரம்மன் மதங்கரிடம் "தவம் செய்' என்று கூற, அது பிரளய காலமாதலால் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அப்போது அங்கு வந்த நாரதர், ""பிரளய காலத்திலும் அழியாத இடம் திருவெண்காடு. எனவே அங்கு சென்று தவம் செய்'' என்று கூறினார். அதன்படியே திருவெண்காடு சென்று தவம் மேற்கொள்ள, மதங்கரின் தவத்தைக் கலைக்க மன்மதன் வந்தான். அவனை, ""சிவனாரது நெற்றிக்கண் சுடரால் எரிவாய்'' என சபித்தார் மதங்கர். அடுத்து மகாவிஷ்ணுவானவர் மோகினி வடிவில் வர, ""திருவெண்காட்டில் மோகினி வடிவுடனேயே இருப்பீர்'' என்றார். மதங்கரின் தவத்தில் மகிழ்ந்து அவர்முன் தோன்றிய விநாயகர், அஷ்டசித்திகளையும் மதங்கருக்கு வழங்கினார். இறுதியில் சிவபெருமானும் தரிசனம் தந்தருளினார்.

"தேவி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும்' என்று மதங்கர் தவத்தைத் தொடர, அவ்வண்ணமே ஆடி மாத வெள்ளிக்கிழமை அதிகாலையில், மதங்க தீர்த்தத்தில் முகிழ்த்த நீலோத்பல மலரில் சியாமளாவாக அவதரித்தாள் தேவி. அந்தக் குழந்தையை மதங்கர் அன்புடன் வளர்த்தார் என்கிறது திருவெண்காடு தலபுராணம். (திருவெண்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மதங்காஸ்ரமம் உள்ளது.)

"கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.'

"நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.'

மேற்கண்ட பாடல்கள் அபிராம பட்டர் தம் அந்தாதியில் மாதங்கி குறித்துப் பாடியவை.

முத்துசுவாமி தீட்சிதரின் முன்னோர்கள், வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்தவர்கள். இது பிரம்மன் பூஜித்த தலம். இங்குள்ள பச்சைக் கல்லாலான தேவிக்கு மரகதவல்லி என்றே பெயர். தீட்சிதர் தேவியை, "மரகதவல்லி மனஸா ஸ்மராமி' என்றே பாடியுள்ளார். சென்னை தம்புசெட்டித் தெருவிலுள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலுள்ள தேவியும் மரகத வல்லியே. இவர்களெல்லாம் பச்சை வண்ணத்தினளான சியாமளா தேவியின் அம்சம் நிரம்பியவர்கள். ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா தேவி. பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் என்பர். மதுரை மீனாட்சி கோவிலில் சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.

வீணை, கிளி, புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை, காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கடும்பாடி அம்மனும் ராஜசியாமளையே.மகா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள் சியாமளா தேவி. இவள் பராசக்தியின் மந்த்ரினி- அதாவது அமைச்சராக செயல்படுபவள். பராசக்திக்கு உகந்த நேரத்தில் உகந்த ஆலோசனை கூறுபவள். எனவே, வாக்கு சித்தி, அறிவுக்கூர்மை, சகல கலைகளிலும் வல்லமை, மந்திரசித்தி பெற விரும்புவோருக்கு சியாமளா உபாசனை மிகச்சிறந்தது.

"கேய சக்ர ரதாரூட மந்த்ரினி பரிஸேவிதா
மந்த்ரிணி அம்பா விரசித விடிங்கவத தோஷிதா'

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். அதாவது, பண்டாசுரனின் சகோதரன் விடிங்கனை, கேய சக்கர ரதத்தில் அமர்ந்து போரிட்டு வென்றாளாம் சியாமளாதேவி.

"ஸங்கீத யோகினி, ஸ்யாமா, ஸ்யாமளா, மந்த்ரிணி, மந்த்ரிநாயகி, சஸிவேஸானி, ப்ரதானேஸி, சுகப்ரியா, வீணாபதி, ஸமுத்ரிணி, நீலப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாஸினி, ப்ரியசப்ரியா'
 
என்றெல்லாம் லலிதா உபாக் யானம் சியாமளாவைத் துதிக்கிறது.

"சரிகமபத நிரதாம் வீணா ஸங்க்ராந்த ஹஸ்தாம் ஸாந்தாம்
ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபர காந்தாம் நமாமி சிவ காந்தாம்'

சியாமளாவைப் பணிந்து கலையருள் பெறுவோம்; ஞானம், சாந்தி பெற்று வாழ்வோம்!
 
 
 
 

சிறப்போடு வாழ மஹா சிவராத்திரி விரதம்!



எங்கும் நிறைந்திருக்கும் இறையாற்றலை எளியோரும் உணரும் அற்புத தினம் மஹா சிவராத்திரி!

கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் உமாதேவியும், திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் முருகனும், துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் விநாயகரும், கலி யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் மகாவிஷ்ணுவும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்ததாக புராண நூல்கள் சொல்கின்றன. தேவர்களும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு பேறுகள் பெற்ற தகவல்களை ஆகமங்கள் கூறுகின்றன.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி நாளில் உமாதேவி சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றுள்ளாள். வைகாசி வளர்பிறை அஷ்டமி சிவராத்திரியில் சூரிய தேவனும்; ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் ஈசானனும்; ஆடி மாத தேய்பிறை பஞ்சமி சிவராத்திரியில் முருகப் பெருமானும்; ஆவணி வளர்பிறை, அஷ்டமி சிவராத்திரியில் சந்திரனும்; புரட்டாசி வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷனும்; ஐப்பசி வளர்பிறை துவாதசியில் இந்திரனும்; கார்த்திகை வளர்பிறை சப்தமி, தேய்பிறை சிவராத்திரியில் சரஸ்வதியும்; மார்கழி வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரிகளில் லட்சுமியும்; தை மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் நந்தி தேவரும்; மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்களும்; பங்குனி மாதம் வளர்பிறை திரிதியை சிவராத்திரியில் குபேரனும் வழிபட்டு பேறுகள் பெற்றிருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரிக்கு பல பெருமைகள் இருக்கின்றன. மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டால் சிவனருள் கிட்டுவதுடன், இறுதிக்காலத்தில் சிவபதம் கிட்டுமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.

ஈசனை லிங்க ரூபத்தில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்பதால், தேவலோக சிற்பியான மயன் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஏற்ற வகையில் லிங்கங்களை அமைத்துக் கொடுத்தாராம்.

தேவேந்திரனுக்கு பத்மராக லிங்கமும், குபேரனுக்கு பொன் லிங்கமும், எமனுக்கு மரகத லிங்கமும், வருணனுக்கு நீல லிங்கமும், விசுவ தேவர்களுக்கு வெள்ளி லிங்கமும், சூரியனுக்கு ஸ்படிக லிங்கமும், சந்திரனுக்கு முத்து லிங்கமும், நாகர்களுக்கு பவள லிங்கமும், சரஸ்வதிக்கு மாணிக்க லிங்கமும், மகாலட்சுமிக்கு நெய் லிங்கமும், தேவகணங்களுக்கு பஞ்சலோக லிங்கமும், துர்க்கைக்கு பொன் லிங்கமும், முனிவர்களுக்கு கல் லிங்கமும் என அவரவர்களுக்கு ஏற்ப லிங்கங்களை மயன் உருவாக்கிக் கொடுத்தார் என்று லிங்க புராணம் கூறுகிறது.

தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகாலம் என்னும் கொடும் விஷம் வெளிப்பட்டது. அதனை உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமான் உண்டார். அதைக் கண்ட பார்வதி சிவனின் கண்டத்தைப் பிடித்து அழுத்த, விஷம் அங்கேயே தங்கி நீலகண்டனானார். என்றாலும் விஷத்தின் தாக்கத்தால் சிவபெருமான் மயக்கமுற, அவரை தன் மடிமீது தலைசாய்த்துப் படுக்கவைத்து இரவு முழுக்க முந்தானையால் விசிறிக்கொண்டே சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தாள் பார்வதிதேவி.  தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பஞ்சாட்சாரத்தை இரவு முழுக்க ஜெபித்துக்கொண்டேயிருந்தார்கள். பிறகு, சிவபெருமான் விஷத் தாக்கத்திலிருந்து விடுபட்டார். அந்த இரவே மகா சிவராத்திரி எனப்படுகிறது.

திருமாலும், பிரம்மனும் ஈசனின் திருவடி, திருமுடி காண முயன்று தோல்வியடைந்ததும், அவர்களுக்கு ஜோதிலிங்க உருவாய்த் தோன்றி திருவிளையாடல் புரிந்த நன்னாள் சிவராத்திரி எனப்படுகிறது.

ஒருமுறை கயிலையில் சிவபெருமானின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக தன் இரு கைகளால் பொத்தினாள். உடனே உலகம் இருண்டது. ஜீவன்கள் உயிர்மூச்சுவிட தடுமாறின. அந்த நிலை மாற தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சிவபெருமானை வேண்டி வழிபட்டனர். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன.

வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான்.

அவனை புலியொன்று துரத்த, ஓடிப்போய் அருகிலிருந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டான். இரவு தொடங்கியது. தூங்கிவிடக்கூடாது என்று மரத்திலிருந்து ஒவ்வொரு இலைகளாகப் பறித்துக் கீழே போட்டான். மரத்தடியில் அமர்ந்திருந்த புலி அவனைப் பார்த்த வண்ணமிருந்தது. அவன் ஏறியமர்ந்தது வில்வ மரம். தூங்காமல் இருந்த அந்த இரவு சிவராத்திரி. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. விடிந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்த புலி காட்டுக்குள் ஓடியது.  தன்னை அறியாமலே அவன் செய்திருந்தாலும், தூங்காமல் விழித்திருந்து சிவபூஜை செய்த பலன் அவனுக்குக் கிடைத்தது. அவனது இறுதிக்காலம் முடிந்ததும் சிவபதம் அடைந்தான் என்பது புராணத் தகவல். இதுபோல் பல கதைகள் சிவராத்திரியின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

சிவராத்திரி நாளில் நான்கு காலங்களிலும் முறையே வெள்ளி, தங்கம், ரத்தினம், மண் லிங்கங்களைப் பூஜிக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள கல்லாலான சிவலிங்கத்திற்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சிதம்பரத்தில் மட்டும் தங்கத்தாலான சிவலிங்கம் உள்ளது. நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் வெள்ளியினாலான சிவலிங்கம் உள்ளது. மண்ணாலான சிவலிங்கங்கள் தமிழகத்தில் பல கோவில்களில் உள்ளன.

சிவராத்திரி அன்று விரதம் கடைப்பிடித்து, அன்று சிவாலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அர்ப்பணித்தால்,  இம்மையிலும் மறுமையிலும் நலம்பெறலாம்.




சனி, 5 மார்ச், 2016

லக்ஷ்மி நீ வருவாய்! என் மனை மங்களம் பொங்க!

 
பாக்யாத லஷ்மி பாரம்மா மெட்டில் பாடவும்


(பல்லவி)

சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

(சரணம்)
வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு
வாழையும் தோரணமும் கட்டி
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி
அன்புடன் அழைத்தோம்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


மல்லிகை, ஜாதி மருவுடன் ரோஜா
மணம் மிகு தாழை மலர்களும் மற்றும்
எல்லை இல்லாத பக்தியும் சேர்த்து
ஈஸ்வரியே உனக்கர்ச்னை செய்வோம்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


பாயசம் வகையும் பஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எங்கள் அன்னையே வருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

மாணிக்க சிவப்பில் மூக்குத்தி மின்ன
மரகத குண்டலம் காதினில் ஆட
ஆனிப் பொன் முத்து மாலைகள் அசைய
அச்சுதன் நாராயணன் மார்பினில் வாழும்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


அழகிய கூந்தல் இடைவரை புரள
அருள்மிகு கண்கள் கருணையும் பொழிய
எழில் மிகு நெற்றியில் குங்குமம் இலங்க
எங்கள் மங்கள பாக்கியங்கள் பெருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

ஜல் ஜல் ஜல் என சதங்கைகள் ஒலிக்க
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல கல கல என கால் சிலம்பொலிக்க
கருணையால் எங்கள் கஷ்டங்கள் பறக்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


கல்வியில் குழந்தைகள் சிறந்திட வேணும்
கன்னியர் நல்ல கணவனைப் பெறவும்
செல்வங்கள் சேர்ந்து மங்களம் பெருகி
சீருடன் சிறப்புடன் வாழ் என வாழ்த்தி
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி
கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி
பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி
புண்ணியம் அடைவோம் அன்னையே வருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்