வெள்ளி, 27 நவம்பர், 2015

திந்த்ரிணி கௌரி விரதம்





பார்வதி தேவி, எம்பெருமானை அடையும் பொருட்டுத் தவம் இருந்த காலத்தில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமர்ந்து தவம் செய்தார். அவ்வாறு தவம் இருந்த தினங்களே கௌரி விரத தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.












கௌரி தேவியின் 108 விதமான ரூபங்களில் மிக முக்கியமான சில ரூபங்களைப் போற்றும் விதமாகவும் கௌரி விரத தினங்கள் அமைகின்றன.

பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளைப் பயன்படுத்துதல், அந்தந்த மரக் கிளைகளின் கீழ் கௌரி தேவியின் சிறுவடிவத்திலான சிலையை வைத்துப் பூஜித்தல் அதிக பலன் தரும்.











திந்த்ரிணி கௌரி விரதம், பார்வதி தேவி, மகிழ மரத்தடியில் தவம் செய்ததைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுவதால், மகிழ மரத்தின் அடியிலோ அல்லது மகிழ மரக்கிளைகளின் அடியிலோ கௌரி தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜிக்கலாம். மகிழம்பூவால் அர்ச்சித்தல் நலம் தரும்.














விரதம் அனுசரிக்கும் தினம்:

கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் வரும் துவிதியை திதி தினமே திந்த்ரிணீ கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தினமாகும்.

அன்றைய தினம் விரதமிருந்து, மஞ்சளால் கௌரி தேவி பிரதிமையை அலங்கரித்து ஐந்து வகை பழங்கள், இனிப்பு பொருட்கள், நைவேத்திய பொருட்கள், பட்சணங்கள்  வைத்து மகிழ மர கிளையை அருகில் வைத்து , மகிழம்பூவால்  அர்ச்சித்து வழிபட வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜை செய்து, பின் கௌரி தேவியை அஷ்டோத்ரம் கூறி அர்ச்சித்து, தூப, தீப ஆராதனை செய்து நிவேதனம் சமர்பிக்க வேண்டும்.


பின்னர், கற்பூர ஹாரத்தி எடுத்து பிரதட்சிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.


பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும்.














கேதார கௌரி விரதம்





Image result for arthanareeswarar










ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.  இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.




"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்ற விரதமே கேதார கௌரி விரதமாகும்.பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும்.


அர்த்தநாரீஸ்வரர் ஆன கதைபிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.பார்வதியின் சாபம்இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார்.முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள்.


தன்கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகைதான் இந்த கேதார கௌரி விரதம்.


 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.தம் மாங்கல்யபலம் நீடிக்கவும். கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர். அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்முழுவதும் துதிக்க வேண்டும்.மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்' பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.


பிரம்மா, விஷ்ணு, இந்திரன்இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.


இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.


எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'






துளசிக்கல்யாணம்



கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி தேவி  அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.


துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள்.


அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

வட மாநிலங்களிலும் கொண்டாடப்படும் சாத் என்கிற சஷ்டி விரதம்

           
                                     
தமிழ்க்கடவுள் முருகனை வட மாநிலத்தவர் "கார்த்திகேயன்' என்ற பெயரில் அழைப்பதோடு, இந்த சஷ்டி விரதத்தை "சாத்' என்ற பெயரில் தீவிரமான சிரத்தையுடன் மிகவும் பிரபலமான ஒரு விரதமாக அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்க் கையில் மிகச் சிறந்த புண்ணியங் களைப் பெற முடியும் என்று வடநாட்டு மக்கள் நம்புகின்றனர். பீகார், மத்தியப் பிரதேச மாநிலங் களில் பல இடங்களிலும், உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளிலும் இந்த விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்த மறுநாளான பிரதமையன்று "சாத்' விரதம் துவங்கி தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களுமே விரதத்தின் முக்கிய அங்கமாக, "விரதம் அனுஷ்டிப்பவர்கள் பொய் பேசக்கூடாது' என்ற கட்டுப்பாடு நிலவுகிறது.

ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் மூன்றாவது நாள் முடிந்து நான்காம் நாள் விரதத்தை ஆரம்பிக்கின்றனர். இந்த மூன்றாம் நாளை "நகான் கானா' (குளித்து விட்டு சாப்பிடுதல்) என்றே அழைக்கின்றனர். விரதத்தின் முதல் நாள் "கர்ணா' என்று அழைக்கப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் தண்ணீர்கூட அருந்துவதில்லை. பூஜைக் குரிய நிவேதனம் தயாரிக்க புதிய பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இறைவனுக்குப் படைக்கப் படும் கீர், பூரி போன்றவற்றுக்குக்கூட புதிய கோதுமை வாங்கி வீட்டிலேயே சுத்தமாக அரைத்து மாவாக்கி அவற்றைச் செய்கின்றனர்.

இந்த "சாத்' விரதத்தின்போது பல பகுதிகளிலும் சூரிய பகவானும் வழிபடப்படுகிறார். இந்த விரத நாட்களில் கார்த்திக் பகவானுக்குரிய (முருகன்) பூஜையில் முதலில் "கணேஷ்கி' (விநாயகருக்கு) தனி பூஜை உண்டு. விரதம், பூஜை ஆகியவை முடிந்த பின்னர் "போக்' எனப்படும் சிறப்பு விருந்து உண்டு. இந்த விருந்து உண்ணும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்ற ஐதீகம் உள்ளது. ஒருவரையொருவர் பெயர் சொல்லிக்கூட கூப்பிடுவதில்லை.

அப்படி யாராவது மறந்து போய் அழைத்து விட்டால், விரதம் அனுஷ்டிப்பவர் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விரதத்தை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டுமாம். பீகார் மாநிலத்தில் இந்த சாத் விரதம் மிகவும் பிரசித்தமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாட்களில் சூரிய பகவானுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.

சூரிய பகவானை வழிபடும் "சாத்' விரதத்தின் மூன்றாம் நாள் முதல் மக்கள் ஒரு புதிய முறத்தில் கொப்பரைத் தேங்காய், கரும்புத் துண்டுகள், வெள்ளை முள்ளங்கி, இனிப்புகள், மலர்கள், முளைவிட்ட தானியங்கள், "கஜுரி' எனப்படும் மைதா இனிப்பு ஆகியவற்றோடு, சூல்டா என்ற இளஞ்சிவப்பு வண்ணக் காகிதங்களையும் வைத்து அருகிலுள்ள ஆறு, நீர்நிலைகளுக்கு மாலை நேரத்தில் சென்று, தண்ணீரில் நின்றபடியே முறத்தை இரு கைகளில் ஏந்தி சூரிய பகவானை வணங்கி, முறத்தில் உள்ள பொருட்களை சூரியனுக்கு அப்படியே தண்ணீரில் அர்ப்பணித்து விடுகின்றனர்.

பின் அமைதியாக கரையில் அமர்ந்து சூரிய வழிபாடு செய்கின்றனர். இந்த சூரிய வழிபாடு "சாத்' விரதத்தின்போது ஒரு சமுதாய விழாவாகவே கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நீர்நிலைகளின் கரைகளிலேயே அவர்கள் தங்கிவிடுகின்றனர். முறத்தில் வைக்கப்படும் எஞ்சிய பொருட்களை பிரசாதமாக உண்டு மகிழ்கின்றனர். பொழுது புலரும் வேளையில் மீண்டும் சூரிய பகவானை வரவேற்று வணங்கி அவர்கள் வீடு திரும்புகின்றனர். "கந்த சஷ்டி' என்ற கார்த்திகேய வழிபாட்டினையொட்டிய விரதம், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஒரு முக்கியமான பக்திச் சிரத்தையோடு அனுஷ்டிக்கப்பட வேண்டிய விரதமாக விளங்கி வருகிறது.





திருகார்த்திகை தீபம்

நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. இதை சிவபெருமானிடம் கேட்டார்கள்.
அதற்கு ஈசன், “யார் என்னுடைய அடியையோ அல்லது முடியையோ காண்கிறார்களா அவர்களே பெரியவர்கள்.“ என்றார் சிவபெருமான்.
சிவபெருமானின் அடியை காண்பதற்காக ஸ்ரீமகாவிஷ்ணு, வராக அவதாரமெடுத்து பூமியை துளைத்துக்கொண்டு சென்றார்.
ஆனால், சிவபெருமானின் அடியை காணமுடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் ஸ்ரீமகாவிஷ்ணு.
பிரம்மா, அன்னப்பறவையாக மாறி ஈசனின் முடியை காண பறந்துசென்றார்.
எத்தனை உயரம் பறந்தும் ஈசனின் முடியை காணமுடியாமல் சோர்வுற்றார் பிரம்மா. அப்போது, ஈசனிய் சிரசில் இருந்து ஒரு தாழம்பூ பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருந்தது.
அந்த தாழம்பூ சிவனின் சிரசில் இருந்துதான் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்ட பிரம்மா, தாழம்பூவை எடுத்துக்கொண்டு விஷ்ணு பகவானிடம் சென்று, “ஈசனின் முடியை கண்டேன். அதற்கு சாட்சி இந்த தாழம்பூ.” என்றார்.
தாழம்பூவும், ”ஆமாம்… பிரம்மா சொன்னது உண்மைதான்.” என்று பொய் சாட்சி சொன்னது.
அப்போது, சிவபெருமான் அங்கே தோன்றினார். பிரம்மாவும் தாழம்பூவும் பொய் சொல்கிறார்கள் என்பதால் கடும் கோபம் அடைந்தார்.
“படைக்கும் தொழிலில் உள்ள பிரம்மா பொய் சொன்னதால் இனி பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயம் இன்றி வழிபாடு இன்றி போகட்டும். பிரம்மாவுக்குகாக பொய் சாட்சி சொன்னதால் தாழம்பூ இனி சிவ வழிபாட்டுக்கு உகந்தது இல்லை.” என சிவபெருமான் சபித்து விடுகிறார்.
பிறகு விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலையாகும்.

அர்த்தநாரீஸ்வரர்

சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும்.
சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர், சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி, பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார்.
உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான், சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன்.
சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி, தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான், சக்திதேவிக்கு காட்சி தந்து, தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
ஆகவே, கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும்.
திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள், மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள்.
பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை, ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது.
மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
அவ்வேளையில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சிகொடுத்ததுபோல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.
மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து, கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும், கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் .
இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும்.
இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து, சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.


அண்ணாமலைக்கு அரோகரா!


* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.
* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
* திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவர் சந்ததி தழைக்கும். அவருக்கும் மறுபிறப்பும் இல்லை.
* திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவர் பாக்கியவான் ஆகிறார்.
* கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.
* திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவர் கூட முக்தி அடைகிறார்.
* தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.
* கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான். அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.


கோவர்த்தன விரத பூஜை







வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர்.

மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர்.

அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள்.

பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளி அமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி. அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.



சனி, 21 நவம்பர், 2015

கோலாகல தீபாவளி!

 

 செல்வம் தரும்  குளியல்

நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்.
இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரிதிரமும் நீங்கும்.

மங்களம் தரும்  மஞ்சள்

புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு

பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஒடி விடும்.

வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி.

தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.
ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்க்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் ஜொலிக்கும் தீப ஒளி். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..
அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலஷ்மியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் – அருளும் கிடைக்கும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோம்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோம்பின் பயனால்தான் கௌரிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.
தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கையே ஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.


ஒருமுறை, தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றியவர் ஸ்ரீமகாலஷ்மி. ஸ்ரீமகாலஷ்மியை பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு, லஷ்மிதேவிக்கு மாலையிட வந்தார்.

சிறிது நேரம் ஸ்ரீமகாவிஷ்ணுவுடன் விளையாடலாம் என்ற எண்ணத்தில், லஷ்மிதேவி ஓடிபிடித்து விளையாடினார். அப்போது அங்கிருந்த எள் செடியின் மீது லஷ்மிதேவியின் பாதம்பட்டு, எள்ளில் இருந்து எண்ணெய் வெளியேறியது. இதை கண்ட ஸ்ரீவிஷ்ணுபகவான், “இந்த நாளில் நீ நல்லெண்ணெயில் வாசம் செய்வாயாக” என்று உத்தரவிட்டார்.
தீபாவளி திருநாள் அன்று,  ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தண்ணீர், கங்கையாக மாறும் என்பது ஐதீகம்.
அதனால் தீபாவளி திருநாளாள் அன்று நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த  தண்ணீரை கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.


தீபாவளி திருநாள் அன்று ஸ்ரீமகாலஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்க வேண்டும். சுத்தமும் – சுகாதாரமும் இருக்கின்ற இடத்தில்தான் ஸ்ரீலஷ்மிதேவி வாசம் செய்வாள். அதனால் தீபாவளி திருநாள் அன்று, காலையில் வீட்டு வாசல் பெருக்கி, பசும் சாணம் அல்லது பன்னீரில் மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை பூகோலம்  போட வேண்டும்.
வாசற்காலுக்கு மஞ்சள் – குங்குமம் வைக்க வேண்டும். வாசலுக்கு மாயிலை தோரணம் கட்டி, மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால் அந்த இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த தீபாவளி திருநாள் அன்று பித்ருக்கள் (முன்னோர்கள்) நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை மலர்களையும் வைக்க வேண்டும்.  அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க வேண்டும். தீப திருநாள் அன்று, பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு, “நரக சதுர்த்தி” என்று பெயர்.

மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம்

ஒருமுறை, மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி, மகாபலி சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில பூஜை முறைகளை பற்றிச் சொன்னார்.
ஐப்பசி மாதம்  – கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி.
மகாபலி சக்கரவர்த்தியின் தயவில் நாம் இந்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை பெறுவோம்.
தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து வணங்குவது மிக சிறப்பு.
நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம் என்கிறது விருக்ஷ் சாஸ்திரம்.
மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம் – குபேர  வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள்.
தீபாவளி திருநாள் அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய  தீபம் ஏற்றினால், தன் பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன் சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
தீபதிருநாள் அன்று கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
கேதாரேஸ்வரரை வேண்டி கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின் இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம்.
இதனால் கேதார கௌரி நோம்பை கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலக்ஷ்மி தேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.