புதன், 29 மார்ச், 2017

'திருவுந்தியார்' - பகை நீங்கி நலம் பெற!

விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம்.(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                        8-ம் திருமுறை
 
தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கியிருந்த காலத்தில் மகளிர் சிலர் கூடி, கைகள் இரண்டையும் மேலே தூக்கி இரு பக்கமும் நீட்டி, வானில் பறப்பது போல், இரு கைகளையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு பாடி ஆடும் ஓர் ஆட்டவகையான, திருவுந்தியார் விளையாடுதலைக் கண்டு அவர்கள் வாய் மொழியாக இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
 
'திருவுந்தியார்' எனப்படும் இந்த இருபது பாடல்களிலும், மும்மல காரியம் ஆகிய முப்புரங்களும் சிவபெருமானது பேராற்றலினால் அழிந்ததையும், தக்கன் யாகம் ஒழிந்ததையும், அதனால் சூரியன், இந்திரன் முதலிய தேவர்களின் அகங்காரம் ஒடுங்கியமையும் பற்றியே கூறப்பட்டுள்ளது.
 
இறைவரது வெற்றியைப் போற்றுவதால் நாமும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதில் ஐயமே வேண்டாம், பகைமை, விரோதம் யாவும் நீங்கி நலம் பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், மணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய இத்திருப்பதிகம் பெரிதும் உதவும்.
 
திருவாசகத்தின் பெருமைக்கு மாணிக்கவாசகர் கூற இறைவரே தம் திருக்கையால் எழுதிக் கொண்டார் என்ற வரலாறே சான்று.

திருச்சிற்றம்பலம்

1. வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.


சிவபெருமான் முப்புரங்களை அழிக்கத் திருவுளங்கொண்டார். உடனே பொன் மலையாகிய மேருமலை வில்லாக வளைந்து அவர்தம் திருக்கையினடத்து வந்து சேர்ந்தது. உடனே போர் நிகழ்ந்தது. முப்புரங்களும் வருந்தின எனப்பாடி உந்திப் பறந்து விளையாடுவோமாக. அவை ஒன்று சேர எரிந்தன என்று பாடி ஆடுவோமாக.

2. ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஏகம்பர் எனப்படுவார். அவர் திருக்கரத்தில் இரண்டு அம்புகள் காணப்படவில்லை. உள்ளது திருமாலாகிய ஓரம்பேயாகும். அந்த ஓர் அம்பும் அவருக்குப் பயன்படவில்லை. எதிர்த்து நின்ற கோட்டைகள் மூன்றாயினும் அவன் நகை செய்து எரித்தமையால் அவ்வோர் அம்பும் வேண்டாத ஒன்றாயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

3. தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்;
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

தேவர்கள் தச்சுத் தொழிலால் அமைத்தத் தேரினைக் கொண்டு வந்து சிவபெருமான் முன் நிறுத்தினர். தேவர்களின் வேண்டுகோளின்படி அத்தேரில் சிவபெருமான் அடியெடுத்து வைத்தான். உடன் அத்தேரின் அச்சு முறிந்தது. ஆனாலும் திரிபுரம் அழிந்தன என்று சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

4. உய்யவல் லாரொரு மூவரைக் காவல்
கொண்டுஎய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் சிவபக்தியில் ஈடுபட்டனர். திரிபுரம் எரிந்த போது அவர்கள் பிழைக்கும்படி இறைவன் அவர்களைக் காத்து, அவர்களை கயிலைக்குத் துவார பாலகர்களாகச் செய்து ஏனையோரை அம்பால் அழித்தொழித்தான். அத்தகைய வல்லமை யுடையவன் இளமை மாறாத தனங்களையுடைய அருளம்மையின் பாகன் என்று கூறி பாடி ஆடுவோமாக.

5. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.

வீரபத்திரர் தாக்கிய போது, தக்கனது யாகம் அழியவே, தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடிய விதத்தினைப் பாடுவீர். அத்தகைய உருத்திரனாகிய தலைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

6. ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

பிரமதேவனுக்குத் தநதையாகிய திருமால் தக்கன் யாகத்தின் அவியுணவைக் கொண்டான். அந்நாளில் வீரபத்திரக் கடவுளால் தாக்கப்பட்டு உயிர் ஒன்றை மட்டும் உடையவனாய் இருந்தான். அதனைக் கூறி உந்தி பறப்பாயாக!

7. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டியகையைத்
தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

விருப்புடன் அக்கினி தேவன், அவியை உண்ணும் பொருட்டு ஒன்று சேர்த்த கையை வீரபத்திரர் வெட்டினார். யாகம் நிலைகுலைந்து போயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறப்பாயாக!

8. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்;
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

உமையம்மை தனது மகள்தானே என்றும், அரனின் மனைவிதானே என்றும் இகழ்ந்து பேசின தக்கனை நாம் பெருமை யுடையவனாக நினைப்பது கூடாது என்று பாடுக. பருத்த தனங்களையுடைய உமாதேவி பங்கனாகிய சிவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

9. புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரம்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்;றே உந்தீபற.

தேவேந்திரன், யாகத்தை அழித்த வீரபத்திரருக்கு அஞ்சி, ஒரு அழகிய குயிலின் வடிவம் எடுத்து ஒரு மரத்தின் மேல் ஏறினான் என்று பாடுக. அவன் தேவர்களின் தலைவன் என்று உந்தி பறப்பாயாக.

10. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தெடர்ந்து பிறப்பற உந்தீபற.

கொடிய கோபத்துக்கு ஆளாகிய தக்கன் வேள்வியில் யாக குருவாகிய வியத்திரனது தலை வெட்டுப் பட்டதைப் பாடி உந்தி விளையாடுக. நம்மைத் தொடர்ந்து பற்றி வருகின்ற நம் பிறப்பு நீங்கும்படி பாடி உந்தி பறப்பாயாக.

11. ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

யாகத்திற்குப் பலிகொடுத்து எஞ்சி நின்ற அறிவில்லாத ஆட்டினுடைய தலையைத் தக்கனுக்குத் தலையாகப் பொருத்திய விதத்தினைப் பாடி, நம் தனங்கள் நினறசைய உந்தி பறப்பாயாக.

12. உண்ணப் புகுந்த பகன்ஒளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற.

தக்கன் யாகத்தில் அவிர் பாகத்தை உண்ண வந்த 'பவன்' என்பவன் வீரபத்திரரைக் கண்டு ஒளித்து ஓடாத வண்ணம் அவனுடைய கண்களைப் பிடுங்கிய விதத்தை எல்லோருடைய பிறவியும் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

13. நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

தக்கன் வேள்வியில் கலைமகள் மூக்கறு படவும், பிரமன் தலை அறுபடவும், அவற்றோடு சந்திரன் முகத்தைத் தேய்த்துக் அழித்ததையும் பாடுவீர். நம் பழவினைகள் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

14. நான்மறை யோனும் மகத்திய
மான்படப்போம்வழி தேடுமா ருந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

தக்கனது யாகத்தில், பிரம தேவனும், யாகத்திற்குத் தலைவனாகிய தக்கனும் அழிய, இந்திரன் தப்பி ஓடும் வழியைத் தேடித் தவித்த விதத்தைப் பாடி உந்தி பறப்பாயாக.

15. சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

சூரியனுடைய கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயில் உள்ள பற்களைத் தகர்த்து உதிர்த்த விதத்தைப் பாடி ஆடுக. அதனால் யாகமானது கலக்கமடைந்தது என்று சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

16. தக்கனா ரன்றே தலையிழந் தார்
தக்கன்மக்களை சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

தக்கனுடைய மக்கள் அவனைச் சூழ்ந்திருந்தும் அவனைக் காக்க முடியாமல் போனதால் தக்கன் தன் தலையை இழந்து விட்டான். யாகமும் அழிந்தது. இதனைச் சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

17. பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

அக்காலத்தில் பால் வேண்டிய வியாக்ரபாத முனிவரின் பாலனாகிய உபமன்யுவுக்கு திருப்பாற் கடலையே வரவழைத்துக் கொடுத்தருளியவன். அழகிய சடையுடையவனும், முருகப் பெருமானின் தந்தையானவனும் ஆகிய அவ்விறைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

18. நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம தேவனுடைய ஐந்து தலைகளுள் ஒரு தலை விரைவாக சிவபெருமானுடைய நகத்தால் கிள்ளப்பட்டதென்று பாடி உந்தி பறப்பாயாக.

19. தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

இராவணன் தனது திக்கு விசயத்தின் போது தேரைச் செலுத்தினான். எதிர்ப்பட்ட கயிலை மலையை நகர்த்தத் தன் தேரை நிறுத்தி விட்டு அதனைப் பெயர்த்தெடுத்தான். அப்போது அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் இறைவனால் நெரிந்தது. அவ்வாறு நெரிந்த விதத்தினைப் பாடி உந்தி பறப்பாயாக.

20. ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

மேலாடை அணிந்து வானிலே செல்லும் முனிவர்கள் சூரிய வெப்பத்தால் அழிந்து போகாமல் அவர்களைக் காக்கின்றவன் நம் இறைவன் என்றும், ஆகாயத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் அவனே காக்கின்றான் என்றும் பாடி உந்தி பறப்பாயாக.
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக