ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

அம்பாஜி கோவில்!


அம்பாஜி – 51 சக்தி பீடங்களில் ஒன்று:

தட்சனுடைய யாகத்தில், பார்வதி உயிரை விட்டதால், அவரது உடலை சிவன் எடுத்துக் கொண்டு உக்கிரத்துடன் இருந்தார். உடலின் பகுதிகள் பல இடங்களில் விழ, அவ்விடங்கள் சக்தி பீடங்களாகின. 51 பாகங்கள் விழுந்த இடங்களை மொத்தம் 51-சக்தி பீடங்களாக பாவிக்கப் பட்டு, வழிபட்டு வரப்படுகின்றது. இங்கு இதயம் விழுந்ததால், சிறப்பான, அதிக சக்தி வாய்ந்த ஸ்தலமாகக் கருதப் படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப் படும் இக்கோவிலில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சக்தி உபாசகர்கள் குறிப்பாக வந்து செல்கின்றனர். பௌர்ணமியில் அதிகமான கூட்டம் வருகின்றது. 


Ambaji chakra

விக்கிரகம் இல்லாத யந்திரம் பிரதானமாக உள்ள கோவில்:

அரசூரி அம்பாஜி என்றழைக்கப்படும் இங்கு விக்கிரகம் எதுவும் கிடையாது. இங்குள்ள ஶ்ரீ விசா யந்திரம் வழிபாட்டிற்குரியதாக உள்ளது. இது தாமிரத் தகட்டில் “ஶ்ரீ யந்திரம்” போல வரையப்பட்டுள்ளது என்றும், அதன் மீது “ஶ்ரீ” என்று எழுதப்படுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனை இது வரை யாரும் புகைப்படம் எடுத்ததுக் கிடையாது, எடுக்கவும் முடியாது. ஆமையின் முதுகைப் போன்ற வளைவுடன் உள்ள பரப்பின் மீது 51 பீஜ எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. 



அம்பாஜி – கோவில் வாசலில் இருக்கும் விக்கிரகம்!

சக்தி வழிபாடு “மந்திர-தந்திர-யந்திர” முறைகளுடன் இணைந்தது. மந்திரங்கள் சப்தங்களாக இருந்து, அவை உருவங்களாக மாறுகின்றன. அந்த உருவங்கள், உபயோகப் படக்கூடிய யந்திரங்களாக மாறுகின்றன. உருவமற்ற சக்தி, உருவத்துடன் கூடிய பொருளாக மாறும் தத்துவம் இதில் அடங்கியுள்ளது. இதனை பூஜிப்பவர்கள் தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு தான் செய்கிறார்கள். மூலவழிபாட்டு ஸ்தலம் அருகில் உள்ள கப்பர் மலை மீதுள்ளது என்கிறார்கள். அங்கு செல்வதற்கு “ரோப் கார்” வசதியும் செய்யப்பட்டுள்ளது.


அம்பாஜி கோவில் இருப்பிடம்: பனஸ்கந்தா [Banaskantha District] என்ற மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவில் [अम्बाजी] பலன்புரியிலிருந்து 65 கி.மீ, அபு மலையிலிருந்து 45 கி.மீ, அஹமதாபாதிலிருந்து 185 கி.மீ, கடியாட்ராவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ளது. அபு மலைக்குக் கீழே உள்ளது. 

வடகிழக்கில் உதய்பூர் உள்ளது. தென்மேற்கில் பலன்பூர் (ரெயில்வே ஸ்டேஷன்) உள்ளது. பனஸ்கந்த மாவட்டத்தில் உள்ளது. வேதகாலத்திற்கு முன்பிருந்தே, இந்த கடவுள் வழிபடப்பட்டு வருகிறது. 

சரஸ்வதி நதி தோன்றிய இடத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. நகர் பிராமணர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. ஆராசூரி என்ற மலைக்கு அருகில் இருப்பதனால், அராசூர் அம்பாஜி என்றே அழைக்கப்படுகிறது. 



அம்பாஜி – மலைமீது இருக்கும் கோவில்.

17ம் நூற்றாண்டிற்கு முன்னர் சரித்திர விவரங்கள் இல்லாதது வியப்பாக இருக்கிறது. இக்கோவில் பழமையானது என்றாலும், 17ம் நூற்றண்டிற்கு முன்னால் எந்த கல்வெட்டும் கிடைக்கவில்லை. இதனால், அதன் தொன்மையினை நிறுவ முடியவில்லை. பரோடாவில் சக்தி வழிபாடு அதிகமாக இருந்ததால், உள்ள மக்கள் காளிகா, அம்பாஜி, கொடியார் போன்ற பலவித அம்மன்களை வழிபட்டு வந்தனர். திடீரென்று சக்தி வழிபாடு உருவானதா, அல்லது இருந்தது புதுப்பிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. 17ம்நூற்றண்டு வரை சரித்திர ஆதாரங்கள் இல்லாமல், திடீரென்று அக்கோவில் முளைத்திருக்க முடியாது. சுற்றி கிருஷ்ண வழிபாடு அதிகமாக இருக்கும் போது, சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து, அதற்கான காரணத்தை அறிய வேண்டியுள்ளது. 



மலைமீதிருக்கும் அம்பாஜி கோவிலுக்குப் பக்கத்தில், ஒரு சிறிய குன்றுள்ளது. அங்குதான், குழந்தை கிருஷ்ணருக்கு, முதன்முதலில் முடியிறக்கப் / மொட்டையடிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆகவே, கிருஷ்ண வழிப்பாட்டுடன், சக்தி வழிப்பாட்டை இணைக்கும் முயற்சியும் நடக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதிகள் உள்ளகியுள்ளதா என்பது பற்றியும் அமைதியாகவே உள்ளது. அதாவது, சரித்திர ஆதாரங்கள் இல்லை. அப்படியென்றால், எப்படி இப்பகுதிகள் தப்பித்தன என்ற வியப்பும் ஏற்படுகின்றது.



கோவில் புனர்நிர்மானன் செய்யப்பட்ட விவரங்கள்:

அரசாங்கத்திற்கும், டந்தா அரச வம்சத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கிற்குப் பிறகு, ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் 1960ல் உருவாக்கப்பட்டது. இதனால், இக்கோவில் முழு நிர்வாகமும் பனஸ்கந்த கலெக்டர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1971ல் அம்பாஜி வளர்ச்சி கமெட்டி அமைக்கப்பட்டு, இகோவிலை புதுப்பிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, 1975லிருந்து, இக்கோவிலை புதுப்பிக்கும் மற்றும் மாற்றியமைக்கும் வேலைகள் மூன்று நிலைகளில் நடைப்பெற்று வருகின்றது. 

இதன்படி 1975 முதல் 1988 வரை “நீஜ் மந்திர்” எனப்படுகின்ற, முன்னிருந்த கோவில், இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம், தூண்கள், சீர்பங்கள் கொண்ட இப்பொழுயதைய மண்டபம், கோவில் கட்டபட்டது. பழைய கோக் மற்றும் யந்திரம் அப்படியே வைக்கப்பட்டன. 1986 முதல் 1989 வரை, 103 அடி உய்ரம் கொண்ட பிரதான கோவில், தங்கத்தகடு வேயப்பட்ட கோபுரம் [Suwarn Kalash Shikhar] முதலியவை கட்டி முடிக்கப்பட்டன. இந்த புனர்நிர்மானம் மற்றும் மற்றியமைக்கும் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, பல சரித்திர ஆதாரங்கள் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அவை பற்றிய விவரங்கள் கிடைப்பதாக இல்லை.



அக்ஷயதாம் தாக்குதல், குஜராத்தில் நிலவிவரும் நிலை முதலியவற்றால் கோவிலுக்குள் செல்ல கடுமையான பாதுகாப்பு, சோதனை முதலியவை உள்ளன. கோவிலுக்குள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. இக்கோவிலுக்கு போகும் போது குன்றின் மீது அம்மன் கோவில் இருந்தது. அங்கும் பக்தர்கள் ஏராளமாக செல்கின்றனர். தினமும் லட்சகணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி போன்ற நாட்களில் கூட்டம் சொல்ல மாளாது. யாத்திரிகர்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் தங்க, உணவு உண்ண உட்பட செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் [ Shri. Arasuri Ambaji Mata Devasthan Trus] அனைத்தையும் நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில் 20-25 லட்சம் மக்கள் பங்கு கொள்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக