செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஐஸ்வர்ய மகுடம் சூடிய ஐஸ்வர்ய மஹாலட்சுமி!


முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. அங்கு மூலவர் திருக்காமேஸ்வரர் உடன் அமர் சிவகாமசுந்தரியுடன்  பக்தர்களுக்கு அருளுகிறார். இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். 

அம்மனுக்கு எதிரே உத்தரத்தில் போகர் ஸ்தாபித்த சிவபோக சக்கரத்தைக் காணலாம். 

கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் அருட்பிரகாசமாய் விளங்குகிறார்.

இந்த ஆலயத்தின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாய் ஐஸ்வர்ய மகாலட்சுமி  சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு அமர்ந்த திருக்கோலத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

திருமாலின் தேவி, திருமகளாக ஐஸ்வர்ய மகுடத்தை சூடிக்கொண்ட இந்தச் சம்பவம் நடந்த தலம் வௌ்ளூர். சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. மேலும் ஆதிசேஷன், சூரியன், முசுகுந்தன் ஆகியோரும் இத்தலத்தில் சிவபூஜை செய்துள்ளனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான்.

ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

மூலவர் திருக்காமேஸ்வரரை அக்காலத்தில் மன்னர்கள் மட்டும் வணங்கி பேறு பெற்றதாகவும், போர் மற்றும் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் முன்னதாக  தங்களுடைய மகுடம், ஆயுதங்கள் ஆகியவற்றை வைத்து வணங்கிய பின்பு தான் எந்த செயலையும் மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது.
 
 
அட்சய திருதியை மகா லட்சுமிக்கு சிறப்பு வழிபாடு !
 
தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இத் தளம் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியும், குபேரன், சுக்கிரன் அருளும் ஒன்று சேர்ந்து செல்வமகா யோகத்தை பக்தர்களுக்கு அள்ளி வழங்குகிறது.
 
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும், நந்திகேஸ்வரரும் இருக்க, அடுத்துள்ளது மகாமண்டபம். மகாமண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகளும், வடக்கு திசையில் ஞான பைரவர், கால பைரவர் திருமேனிகளும் அருள்பாலிக்கின்றனர்.
 
 மகாலட்சுமி ஐஸ்வர்யமகாலட்சுமி என அழைக்கப்படுகிறாள். என்ன காரணம்?
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார்.

அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார்.
இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள்.

பூஜையில் மகிழ்ந்த ஈசன் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
 
வில்வமரமாகத் தோன்றி வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை ஐஸ்வர்யத்திற்கு அதிதேவதையாக மாற்றினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடனேயே திருவருட்பாலிக்கிறாள்.
மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. 
 
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 
 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக